இந்தி சினிமாவில் பிரிவினைவாதம் ! கொளுத்தி போட்ட ரஹ்மான்..ஆட்டம்கண்ட மதவெறியர்கள்
பாலிவுட் சினிமாத் துறையில் பிரிவினைவாதம் பற்றி இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் கருத்து பரவலாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் சமீபத்திய பேட்டி பரவலான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. பாலிவுட் சினிமாவில் பிரிவினைவாதம் அதிகரித்துவிட்டதாக ரஹ்மான் இந்த பேட்டியில் கூறியுள்ள கருத்தை இந்தி சினிமாத் துறையைச் சேர்ந்தவர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பிரதானமாக தமிழ் படங்களில் இசையமைத்தாலும் உலகம் முழுவதும் அவரது இசைக்கு ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இந்தி சினிமாவிலும் பல காலம் கடந்த பாடல்களை வழங்கியுள்ளார் ரஹ்மான். தாள் , தில் சே , லகான் , ரங் தே பசந்தி போன்ற இந்தி படங்களில் ரஹ்மானின் இசையில் இன்றளவும் சலிக்காத பாடல்கள் உருவாகியுள்ளன. அண்மையில் தனுஷ் நடித்த தேரே இஷ்க் மே படத்தின் அத்தனை பாடல்களும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளன.
பாலிவுட்டில் புறந்தள்ளப்படும் ரஹ்மான்
ஆனால் இசைப்புயர் ஏ.ஆர் ரஹ்மான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கானவே அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட தான் இசையமைத்த அத்தனை படங்களிலும் ஹிட் பாடல்களை கொடுத்தபோதிலும் இந்தியில் குறைவான படங்களுக்கே ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதே நேரம் பல நிகழ்ச்சிகளில் இந்தி மொழிக்கு எதிராக அவர் தமிழில் பேசியதும் பரவலாக விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பாலிவுட் சினிமாவில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது குறித்தும் , இந்தி சினிமாவில் நிலவும் பிரிவினை வாதம் குறித்தும் அவர் விளக்கமாக பேசினார்.
கடந்த 8 ஆண்டுகளில் இந்தி சினிமா மாறிவிட்டது
" நான் பட வாய்ப்புகளை தேடிப் போவதில்லை. வாய்ப்புகள் என்னை தேடி வருவதை விரும்புகிறேன். கடந்த 8 ஆண்டுகளில் இந்தி சினிமா நிறைய மாறிவிட்டது. முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. இது ஒரு பிரிவினைவாத நோக்கத்தாலும் இருக்கலாம்.எனக்கு இது நேரடியாக நடந்தது இல்லை. சில படங்களுக்கு ஒரு இசையமைப்பாளரை புக் செய்தபின்னர் தயாரிப்பு நிறுவனங்கள் வேறு சில 5 இசையமைப்பாளர்களை தாங்களே தேர்வு செய்ததாக எனக்கு தகவல்கள் வந்திருக்கின்றன. தென் இந்தியாவைச் சேர்ந்த வேறு எந்த ஒரு இசையமைப்பாளரும் இந்தி சினிமாவில் தாக்குபிடித்தது இல்லை. இளையராஜா ஒரு சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவையும் வெகுஜன படங்கள் இல்லை . நான் இந்தி சினிமாவில் தாக்குபிடிக்க வேண்டும் என்றால் என்னை இந்தி கற்றுக்கொள்ள சொன்னார்கள். நான் இந்தி கற்றுக் கொள்கிறேன். ஆனால் ஒரு படி மேலே சென்று இந்தி மொழிக்கு மூலமான உருது மொழியையும் கற்றுக்கொண்டேன். கடந்த ஆண்டு நான் இசையமைத்த சாவா திரைப்படம் சர்ச்சையை கிளப்பி பணம் சம்பாதித்தது. ஆனால் அடிப்படையில் அந்த படம் தைரியத்தைப் பற்றி பேசுகிறது. ஆனால் மக்கள் தெளிவானவர்கள். ஒரு படத்தால் அவர்களின் எண்ணத்தை மாற்ற முடியாது. அவர்களுக்கு என்று ஒரு உள்மனசாட்சி இருக்கிறது. " என்று ரஹ்மான் இந்த பேட்டியில் பல விஷயங்களைப் பற்றி பேசினார்
வாய்ப்பில்லாததால் புலம்பும் ரஹ்மான்
ரஹ்மானின் இந்த கருத்துக்கள் இந்தி மொழி ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்பினரால் கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்தி சினிமாவில் வாய்ப்பில்லாததால் கவனமீர்க்க ரஹ்மான் இப்படி எல்லாம் பேசுவதாக பலர் சமூக வலைதளத்தில் அவரை விமர்சித்து வருகிறார்கள். மேலும் தனது மதத்தை வைத்து ரஹ்மான் பச்சாதாபத்தை ஏற்படுத்துவதாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.





















