Suriya 46 : சூர்யா 46 படத்தின் கதை இதுதானா...ரகசியத்தை உடைத்த தயாரிப்பாளர்
Suriya 46 Story : வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 46 படத்தின் கதையை அப்படத்தின் தயாரிப்பாளர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்

2026 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து மூன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். கருப்பு படத்தைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூர்யா 46 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதை குறித்து படத்தின் தயாரிப்பாளர் நாக வம்ஸி அண்மையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். 45 வயது நாயகன் 25 வயது பெண்ணை காதலிப்பதே இப்படத்தின் மையக் கதை என அவர் கூறியுள்ளார்
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இதுவரை தீர்மானிக்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. மறுபக்கம் சூர்யா அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பை முடித்து வருகிறார். அண்மையில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் தொடங்கியுள்ளார். நஸ்ரியா இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சூர்யா புதிதாக தொடங்கிய ழகரம் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
சூர்யா 46 கதை
கடந்த ஆண்டு லக்கி பாஸ்கர் என்கிற சூப்பர் ஹிட் வெற்றிப்படத்தை கொடுத்தார் வெங்கி அட்லூரி. தொடர்ந்து சூர்யாவை வைத்து ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் படத்தை இயக்கி முடித்துள்ளார். சிதாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது . மமிதா பைஜூ படத்தில் நாயகியாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அண்மையில் பேட்டி ஒன்றில் படத்தின் கதை பற்றி பகிர்ந்துகொண்டார். " 45 வயதுள்ள நாயகன் 25 வயது பெண்ணை காதலிப்பதே படத்தின் மையக் கதை. கஜினி படத்தில் சஞ்சய் ராமசாமி பிளாஷ்பேக் காட்சிகளைப் போல் இந்த படம் இருக்கும் . நாயகன் நாயகி இடையில் 25 வயது வித்தியாசம் இருந்தாலும் அவர்கள் இருவர் இடையில் நடக்கும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் தான் இந்த படம் . " என நாக வம்சி தெரிவித்துள்ளார்.





















