Harry Meghan:ஹாரி மேகன் ஆவணத் தொடர்... அண்ணன் வில்லியம் பற்றி நேரடியாகக் குற்றம் சாட்டிய ஹாரி!
தற்போது வெளியாகியிருக்கும் இத்தொடர் குறித்து தற்போதுவரை அரச குடும்பம் கருத்து தெரிவிக்கவில்லை.
ஹாரி - மேகன் நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத் தொடரின் இரண்டாவது பகுதி இன்று வெளியான நிலையில், தன் அண்ணன் வில்லியம் குறித்து ஹாரி முன்வைத்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
எலிசெபெத் மகாராணி மறைவுக்கு ஹாரி - மேகன் வருகை தந்ததையடுத்து இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சைகள் சற்றே ஓய்ந்திருந்தன. ஆனால் ஹாரி - மேகன் குறித்த நெட்ஃப்ளிக்ஸ் ஆவணத் தொடர் வெளியாகி தற்போது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
காதல் திருமணம் செய்து கொண்ட ஹாரி - மேகன் தம்பதி, கடந்த 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அரச பதவிகளைத் துறந்து இங்கிலாந்து அரண்மனையை விட்டு வெளியேறி வட அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.
அதன் பிறகு இங்கிலாந்து அரண்மனையில் மேகன் சந்தித்த நிற வேறுபாடுகள், இனவாதம் தொடங்கி பல தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பத் தொடங்கின. தொடர்ந்து சென்ற ஆண்டு ஹாரி - மேகன் அளித்த பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரேவுக்கு அளித்த பேட்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அரச குடும்பத்தில், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியின்மை தன்னை தற்கொலையின் விளிம்புக்கு தள்ளியது என்றும் அந்தப் பேட்டியில் மேகன் தெரிவித்திருந்தார். தான் கருவுற்றபோது குழந்தையின் தோல் எந்த நிறத்தில் இருக்கும் என்பது குறித்து குடும்ப உறுப்பினர்கள் பேசியதாக இந்த நேர்காணலில் மேகன் குறிப்பிட்டு வருந்தியிருந்தார். இந்த நேர்காணல் பெரும் விவாதத்தை கிளப்பிய நிலையில், அதற்கு அரச குடும்பம் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் இத்தொடர் குறித்து தற்போதுவரை அரச குடும்பம் கருத்து தெரிவிக்கவில்லை. இரண்டு பகுதிகளாக வெளியாகியுள்ள இந்தத் தொடரில் தங்கள் காதல், திருமணம், அரச குடும்பத்தில் இருந்து வெளியேறியது,மேகனுக்கு இழைக்கப்பட்ட அநீதி, நிற வேறுபாடு என பலவற்றைக் குறித்தும் ஹாரி- மேகன் தம்பதியினர் பேசியுள்ளனர்.
Harry & Meghan. The Netflix Global event continues December 15. pic.twitter.com/4PNOThV9fM
— Netflix (@netflix) December 12, 2022
தனது குடும்பம் தங்களைப் பற்றிய பல விஷயங்களை ஊதிப்பெரிதாக்குவதாகக் கூறியுள்ள ஹாரி தன் சகோதரர் வில்லியமை பாதுகாக்க பொய் சொல்வதில் மகிழ்ச்சியடையும் அரச குடும்பம், தன்னையும் மேகனையும் பாதுகாக்க உண்மையைச் சொல்ல ஒருபோதும் தயாராக இல்லை என்றும் இங்கிலாந்து ஊடகங்கள் அரச குடும்பத்துக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் இந்த ஆவணப் படத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று வெளியான மற்றொரு ட்ரெய்லரில் மேகன் மார்க்கலின் வழக்கறிஞர் ஜென்னி அஃபியா இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனையைச் சேர்ந்தவர்கள் ஹாரி - மேகனுக்கு எதிராக ஒரு போரையே தொடுத்ததாக சாடியுள்ளார்.