Rajalakshmi Senthil: ‘ராஜலட்சுமி ஹீரோயினா?’ .. ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.. பழ. கருப்பையா பாராட்டு
லைசென்ஸ் படத்தில் நடிகையாக பாடகி ராஜலட்சுமி நடிக்கும் செய்தி கேட்டபோது வியப்பாக இருந்ததாக மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
லைசென்ஸ் படத்தில் நடிகையாக பாடகி ராஜலட்சுமி நடிக்கும் செய்தி கேட்டபோது வியப்பாக இருந்ததாக மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா தெரிவித்துள்ளார்.
லைசென்ஸ் பட இசை வெளியீட்டு விழா
JRG புரடக்சன்ஸ் சார்பில் N.ஜீவானந்தம் தயாரிப்பில் கணபதி பாலமுருகன் இயக்கியுள்ள படம் “லைசென்ஸ்”. இந்த படத்தில் கதையின் நாயகியாக “சூப்பர் சிங்கர் புகழ்” பாடகி ராஜலட்சுமி செந்தில்கணேஷ் நடித்துள்ளார். நடிகையாக அவருக்கு இதுதான் முதல் படமாகும். மேலும் இந்த படத்தில் ராதாரவி, N.ஜீவானந்தம், விஜய் பாரத், பழ.கருப்பையா கீதா கைலாசம், அபி நட்சத்திரா, தன்யா அனன்யா, வையாபுரி, நமோ நாராயணன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காசி விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு பைஜூ ஜேக்கப் இசையமைத்துள்ளார். லைசென்ஸ் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
ராஜலட்சுமி தான் கதையின் தலைவி
இதில் பேசிய மூத்த அரசியல்வாதியும் நடிகருமான பழ.கருப்பையா, ஒரு பெண்ணின் உரிமைக்காக, பெண்ணின் பாதுகாப்பை நிலைநாட்டுவதற்காக எடுக்கப்பட்ட படம் இது. ராஜலட்சுமி தான் கதையின் தலைவி என்று சொன்னபோது வியப்பாக இருந்தது. இளம் வயது நடிகையை கதாநாயகியாக போட்டிருந்தால் இந்த படத்தில் அந்த பெண் போராடும்போது தனக்காக போராடுவது போல இருக்கும்.
ஆனால் ராஜலட்சுமி இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும்போது தான் ஒரு பெண் சமூகத்திற்காக போராடுவதை நம்பும்படியாக இருக்கும்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வீட்டிற்கு திரும்பி வந்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் படத்தின் மேனேஜரும் பின் தொடர்ந்து வந்துவிட்டார். ஏதாவது காட்சி எடுக்கப்படாமல் விடுபட்டு போய்விட்டதா என்று கேட்டபோது, அதெல்லாம் இல்லை.உங்களுக்கு செக் கொடுக்க வந்திருக்கிறேன் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார். இப்படி வீட்டுக்கே விரட்டி வந்து சம்பளத்தை கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனமாக தான் இருக்கும்” என தெரிவித்தார்.
படத்தின் தயாரிப்பாளர் தெய்வத்தின் தெய்வம்
தொடர்ந்து பேசிய நடிகை அபி நட்சத்திரா, “நான் நடித்த அயலி வெப் சீரிஸ்க்கு முன்பாகவே இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிவிட்டேன். ராஜலட்சுமி அக்காவின் மிகப்பெரிய ரசிகை நான். அயலிக்கு கொடுத்த ஆதரவு போல இந்தப் படத்திற்கும் உங்கள் ஆதரவு வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதனையடுத்து இயக்குநர் கணபதி பாலமுருகன் பேசினார். அப்போது “எனது முதல் பட தயாரிப்பாளர் தெய்வம் என்றால் ஏழு வருடங்கள் கழித்து எனக்கு இரண்டாவது பட வாய்ப்பு தந்த இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜீவானந்தத்தை தெய்வத்தின் தெய்வம் என்று சொல்லலாம். இங்கே அவரது நட்புக்கு மரியாதை கொடுத்து அவரது நண்பர்கள் 40 பேர் வந்துள்ளனர். என்னுடைய உதவி இயக்குனர்களிடம் இங்கே வந்திருப்பது 40 தயாரிப்பாளர்கள். எதிர்காலத்தில் உங்களுக்காக இருக்கிறார்கள் என்று கூறினேன்.
படத்தின் டிரைலரிலேயே முழு கதையையும் சொல்லிவிட்டேன். கிளைமாக்ஸையும் கூட டிரைலரிலேயே சொல்லிவிடலாம் என்று தான் நினைத்தேன். காரணம் அந்த அளவிற்கு கதை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் திரைக்கதை.
சரஸ்வதி மற்றும் லட்சுமி இரண்டும் இணைந்த கடாட்சம் கொண்டவர் தான் ராஜலட்சுமி. ஒரு பள்ளி ஆசிரியை கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக அவர் இருந்தார். மலையாளத்தில் அய்யப்பனும் கோஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்த தன்யா அனன்யா இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என்று தெரிவித்தார்.