ஐ.நாவின் 'சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்' விருது வென்ற கூடுதல் தலைமை செயலாளர் - சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
Champuions Of Earth: தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.நா.வின் உயரிய விருதான"சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்" விருதினை பெற்றுள்ளார்.

Champuions Of Earth: இயற்கை பாதுகாப்பில் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக, சுப்ரியா சாகுவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சாகுவிற்கு ஐ.நா., விருது
தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு, ஐ.நா.வால் சுற்றுச் சூழல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆஃப் எர்த்" விருதினை பெற்றுள்ளார். இயற்கை பாதுகாப்பில் காட்டும் ஊக்கம் மற்றும் செயல்பாடுகளுக்காக, சுப்ரியா சாகுவிற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் கடந்த 20 ஆண்டுகளாக இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
சுப்ரியா சாகு சாதித்தது என்ன?
ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நிலையான குளிர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பில் முன்னோடியாகத் திகழும் சாகுவின் முயற்சிகள் 25 லட்சம் பசுமை வேலைகளை உருவாக்கியுள்ளன. வனப்பகுதியை விரிவுபடுத்தியுள்ளன, மேலும் உள்கட்டமைப்பில் வெப்ப பயன்பாடுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள. 12 மில்லியன் மக்களுக்கு பயனளித்து காலநிலை மீள்தன்மைக்கு ஒரு மாதிரியை அமைத்துள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சாகுவிற்கு பாராட்டு
சுப்ரியா சாகுவின் பணிகளை பாராட்டி பேசிய ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், “பூமி வெப்பமடைந்து வரும் வேளையில், உலகின் நகரங்கள் வேகமாக வெப்பமடைந்து வருகின்றன. இந்த கான்கிரீட் காடுகளுக்குள், சுப்ரியா சாகு இயற்கையின் குளிர்ச்சியை கொண்டு வந்து, ஆயிரக்கணக்கான பள்ளி மாணவர்கள் உட்பட மில்லியன் கணக்கான மக்களுக்கு உதவியுள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டின் பலவீனப்படுத்தும் கோடை வெப்பத்தை சமாளிக்க இயற்கையை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை மட்டுமல்ல - ஏர் கண்டிஷனிங்கின் மிகப்பெரிய எரிசக்தி சுமையைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் - காலநிலை நெருக்கடியை நிவர்த்தி செய்வதில் துணை தேசிய தலைமையின் முக்கியத்துவத்தையும் அவரது தலைமை நிரூபிக்கிறது” என பாராட்டியுள்ளார்.
சாம்பியன்ஸ் ஆஃப் எர்த் விருது வரலாறு
சுற்றுச்சூழலில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயல்களைக் கொண்ட தனிநபர்கள், குழுக்கள் மற்றும் அமைப்புகளை UNEP-யின் சாம்பியன்ஸ் ஆஃப் தி எர்த் கௌரவிக்கிறது. இந்த விருது ஐ.நா.வின் மிக உயர்ந்த சுற்றுச்சூழல் கௌரவமாகும். கடந்த 2005ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு துணை நிற்கும் 127 பேருக்கு இந்த விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நடப்பாண்டில் 5 பேருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சுற்றுச்சூழல் குறித்த முன்னணி உலகளாவிய குரலாக ஐ.நா. சுற்றுச்சூழல் திட்டம் உள்ளது. எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை சமரசம் செய்யாமல், நாடுகள் மற்றும் மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஊக்குவிப்பதன் மூலமும், தகவல் அளிப்பதன் மூலமும், செயல்படுத்துவதன் மூலமும் சுற்றுச்சூழலைப் பராமரிப்பதில் இது தலைமைத்துவத்தை வழங்குகிறது.





















