க்ரித்தி ஷெட்டிக்கு தமிழ் கற்றுக்கொடுத்த சீமான்...மனம் திறந்த நடிகை
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே படத்தில் சீமானுடன் நடித்த அனுபவம் பற்றி நடிகை க்ரித்தி ஷெட்டி பகிர்ந்துகொண்டுள்ளார்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'எல்.ஐ.கே' திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. க்ரித்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி ஒன்றில் க்ரித்தி ஷெட்டி பகிர்ந்துகொண்டார். அப்போது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமானுடன் நடித்த அனுபவம் பற்றி அவர் பேசியுள்ளார்.
டிசம்பர் 18 வெளியாகும் எல்.ஐ.கே
டியூட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வரும் டிசம்பர் 18 ஆம் தேதி வெளியாகிறது. விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்கியுள்ளார். ரவுடி பிக்க்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி ஆகியோர் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்கள். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக நடித்துள்ளார்.
எல்.ஐ.கே பற்றி க்ரித்தி ஷெட்டி
சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகை க்ரித்தி ஷெட்டி பகிர்ந்துகொண்டார். எல்.ஐ.கே படம் பற்றி கூறுகையில் " லவ் இன்சூரன்ஸ் கம்பேனி சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் ரொமாண்டிக் காமெடி கலந்த படம். இப்படத்தின் கதை 2040 இல் நடக்கும் கதை என்பதால் ஒவ்வொரு காட்சியும் புதுமையாக இருக்கும். எதிர்காலத்தில் நடக்கும் கதைக்கு நிறைய ரெஃபரன்ஸ் இருக்காது. அதனால் எல்லா காட்சிகளும் கற்பனைகொண்டு உருவாக்கப்பட்டவை. இதற்காக விக்னேஷ் சிவன் கடுமையாக உழைத்திருக்கிறார். பிரதீப் ரங்கநாதனின் கணிப்பு ரொம்ப சரியாக இருக்கும். இப்படத்திற்கு அனிருத்தின் ஆக்கோ பாடலை பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என்று அவர்தான் சொன்னார். "
தமிழ் கற்றுக்கொடுத்த சீமான்
" இப்படத்தில் சீமான் சாருடன் இணைந்து நடித்திருக்கிறேன். அவர் தூய தமிழில் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய ஆங்கில வார்த்தைகளுக்கு அவரிடம் சுத்தமான தமிழ் வார்த்தைகள் இருக்கும் . அந்த வகையில் அவரிடம் நிறைய வார்த்தைகளை கற்றிருக்கிறேன். அவருடன் நடித்த ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது " என க்ரித்தி ஷெட்டி சீமான் குறித்து பேசியுள்ளார்




















