Nirosha Ramki Birthday : ‛உன் மனசுல பாட்டு தான் இருக்குது...’ மனசுகளை தவிக்கவிட்ட நிரோஷா பிறந்தநாள் இன்று!
80களிலும் 90 காலகட்டங்களிலும் தமிழ் மற்றும் தெலுங்கின் முன்னணி நடிகையாக வலம் வந்த நிரோஷாவிற்கு இன்று 52வது பிறந்தநாள்.
தமிழ் திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் சில நடிகைகள் கனவுக்கன்னியாக வலம் வருவார்கள். இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் முக்கியமான காலகட்டமான 90 காலகட்டங்களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நிரோஷா. குஷ்பு, ரோஜா, கௌதமி, ரூபிணி, ராதிகா என்று பலரும் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் நம்பர் 1 நடிகைகளாக வலம் வந்த நிலையில் அவர்களுக்கு போட்டியாக நம்பர் 1 நடிகையாகவே தமிழ் மற்றும் தெலுங்கில் வலம் வந்தவர் நடிகை நிரோஷா.
நடிகை நிரோஷாவின் தந்தை பழம்பெரும் நடிகர் எம்.ஆர்.ராதா ஆவார். எம்.ஆர்.ராதா – கீதா தம்பதியினருக்கு இலங்கையின் கண்டி மாநகரில் 1970ம் ஆண்டு ஜனவரி 23-ந் தேதி பிறந்தவர் நிரோஷா. இவருக்கு இன்றுடன் 52 வயது நிறைவடைகிறது. பிரபல நடிகர்களான ராதாரவி, ராதிகா. எம்.ஆர்.வாசு, ஆகியோர் இவரது சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆவார்கள்.
திரையுலக குடும்பத்தில் இருந்து வந்த நடிகை நிரோஷா, தனது 18வது வயதிலே திரையில் நாயகியாக அறிமுகமானார். கடந்த 1988ம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் என்ற படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமானார். அதே ஆண்டு இவருக்கு தமிழில் ஏராளமான படங்கள் வரத்தொடங்கியது. அந்தாண்டு மட்டும் சூரசம்ஹாரம், செந்தூர பூவே, பறவைகள் பலவிதம், பட்டிக்காட்டு தம்பி என்ற படங்களில் நடித்தார்.
தமிழில் கார்த்திக், பிரபு, ராம்கி, அர்ஜூன், சிவகுமார், பாண்டியராஜன் என்று அன்றைய முன்னணி நடிகர்கள் பலருடனும் இணைந்து திரையில் தோன்றினார். கமல்ஹாசனுக்கு ஜோடியாக கைதியின் டைரி படத்தில் நாயகியாக நடித்தார். இவர் நடித்த அக்னிநட்சத்திரம், பாண்டி நாட்டு தங்கம், காவலுக்கு கெட்டிக்காரன், இணைந்த கைகள் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. தனது சகோதரி ராதிகாவுடன் இணைந்து கைவீசு அம்மா கைவீசு என்ற படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் இவருக்கு ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபல நடிகர்களான சிரஞ்சீவி, பாலய்யா மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதுமட்டுமின்றி கன்னடத்திலும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 6 படங்களில் நடித்துள்ளார்.
90 காலகட்டத்தில் அன்றைய இளைஞர்களின் இதய நாயகியாக வலம் வந்த நடிகை நிரோஷா, அவருடன் இணைந்து நடித்த ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து இணைந்த கைகள், மனிதஜாதி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளனர். 1995ம் ஆண்டு ராம்கியை திருமணம் செய்த நிரோஷா நடிப்பதில் இருந்து சில காலம் ஒதுங்கியிருந்தார்.
பின்னர், வெள்ளித்திரையில் கலக்கிய நிரோஷா சின்னத்திரையில் கலக்கத்தொடங்கினர். அவரது நடிப்பில் கடந்த 2000ம் முதல் 2004ம் ஆண்டு வரை ஒளிபரப்பான சின்னபாப்பா –பெரியபாப்பா தொடர் தமிழ்நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இன்றைய 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் காமெடி ஷோக்களில் சின்னபாப்பா பெரியபாப்பாவிற்கு தனி இடமே உண்டு.
சின்னத்திரையில் கலக்கியது மட்டுமின்றி, வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். காமெடியான ஹீரோயினாக கந்தா கடம்பா கதிர்வேலா படத்தில் நடித்தார். பின்னர், பிரியமான தோழி, வின்னர், தாஸ், நாளை, மலைக்கோட்டை, சிலம்பாட்டம், பொட்டு, 100 என ஏராளமான தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் அக்கா, அம்மா, அண்ணி, அத்தை போன்ற பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான ராஜவம்சம் படத்திலும் சசிகுமார் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார்.
நடிப்பில் பல பரிணாமங்களை அளித்து 30 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் கால்தடம் பதித்துள்ள நிரோஷாவிற்கு ஏபிபி நாடு சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்…! அவர் மென்மேலும் திரைத்துறையில் சாதிக்கவும் வாழ்த்துகள்…!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்