New Released Movies: இன்று ரிலீசான 4 புது திரைப்படங்கள் என்னென்ன..? வீக் எண்டை கொண்டாட சரியான மூவி எது?
வார இறுதியை கொண்டாடும் வகையில் இன்று ஒரே நாளில் நான்கு புது திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
வார இறுதியை கொண்டாடும் வகையில் இன்று ஒரே நாளில் நான்கு புதுத்திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
இராவண கோட்டம்:
நீண்ட காலமாகவே தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், சாந்தனுவால் இன்னும் தனக்கான நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்த சூழலில் தான் கிராமப் பின்னணியை மையமாக கொண்டு விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இராவண கோட்டம் திரைப்படத்தில் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார்.
இந்த படம் தனது திரைப்பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். பிரபு மற்றும் ஆனந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். இரண்டு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் நேரும் கலவரம், அதிலேயே காதல், நட்பு, குடும்பம் மற்றும் துரோகம் என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக இராவண கோட்டம் உருவாகியுள்ளது.
குட்- நைட்:
அம்மா, அக்கா, மாமா மற்றும் தங்கை என ஒரு சரியான நடுத்தர குடும்பத்தில் வாழும் நபராக மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குட் - நைட். குறட்டை பிரச்னையை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள், அதனால் அவர் எதிர்கொள்ளும் சூழல் ஆகியவற்றை நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப படமாக்கப்பட்டுள்ளது. நகைச்சுச்வை, கோபம், நடுத்தரகுடும்ப வாழ்க்கை என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது. விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ள இப்படத்தில் மீதா ரகுநாத், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க சான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மணிகண்டனின் நடிப்பு வெகுவான பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஃபர்ஹானா
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் வேற்றுகிரக வாசிகள் போலவும் சித்தரித்து வரும் சினிமாக்களுக்கு மத்தியில் இஸ்லாமிய குடும்பப் பின்னணியைக் கொண்ட நாயகியை மையப்படுத்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஹீரோயின் சென்ரிக் படமான ஃபர்ஹானா திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களின் வரிசையில் இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார்.
அன்பான கணவர், ஸ்ட்ரிக்ட்டான இஸ்லாமிய தந்தை ஆகியோருக்கு இடையே ஹேண்ட்பேக் சுமந்து வேலைக்கு செல்லும் பெண்ணை பார்த்து ஏங்கும் பக்கத்து வீட்டு இஸ்லாமிய பெண் ஃபர்ஹானாவாக ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு சிறப்பாக வந்துள்ளது. இஸ்லாமிய பின்னணி என்றாலே சர்சசை எனும் முள் மேல் நடப்பது போன்ற சூழலில், வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண்ணை சுற்றிய கமர்ஷியல் கதையை முதிர்சசியாக கையாண்டு, முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர்.
கஸ்டடி:
வெங்கட் பிரபு முதன்முறையாக இயக்கியுள்ள தெலுங்கு திரைப்படம் தான் கஸ்டடி. இதில் நாக சைதன்யா காவலராகவும், அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டியும் நடித்துள்ளனர். அரவிந்த் சாமி மற்றும் சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைத்துள்ளனர். ஆக்ஷன் நிறைந்த கமர்சியல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நாளில் வெளியாகியுள்ளது.