Nayanthara to Jhanvi : வேற யாரு இதை செய்வாங்க.. ஸ்ரீதேவி மகளுக்கு வாழ்த்து தெரிவித்த நயன்தாரா
கோலமாவு கோகிலாவின் இந்தி ரீமேக்கிற்கு குட்லக் ஜெர்ரி என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும், தனது கதாபாத்திரத்தில் நடித்த ஜான்வியை பாராட்டி இருந்தார்.
தமிழில் நெல்சன் இயக்கத்தில் ஹிட் அடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிற்கு குடலக் ஜெர்ரி என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்ரீதேவி - போனி கபூர் இணையரின் மகள் ஜான்வி கபூர் நடிக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதை அடுத்து தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நயன்தாரா வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த படம் வரும் ஜூலை 29ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ரிலீஸ் ஆக உள்ளது.
கோலமாவு கோகிலா
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான டார்க் காமெடி திரைப்படமான கோலமாவு கோகிலா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட், ஜெயில் என தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களை இயக்கிவரும் இயக்குனர் நெல்சன் முதன் முதலில் லேடி சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்கிய அவரது இரண்டாவது படமான இதை லைக்கா ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது. யோகி பாபு, சரண்யா பொன்வண்ணன், ஆர் எஸ் சிவாஜி, சார்லஸ், வினோத் ஹரிஷ் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனின் எழுத்தில் உருவான "எனக்கிப்ப கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி" பாடல் படம் வரும் முன்னரே நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
குட்லக் ஜெர்ரி
தமிழில் பெரும் வரவேற்பு கிடைக்கவே, லைக்கா நிறுவனம் இந்த படத்தை இந்தியிலும் லைக்கவே தயாரிக்க முன்வந்தது. லைக்கா ப்ரொடக்ஷன், கலர் எல்லோ புரோடக்ஷன் மற்றும் மகாவீர் ஜெயின் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். குட்லக் ஜெர்ரி எனப் பெயரிடப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஜான்வி கபூர், தீபக் டொப்ரியல், மிட்டா வஷிஷ்ட், நீரஜ் சூட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இம்மாத இறுதியில் வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் சென்ற வாரம் வெளியாகி இருந்தது.
நயன்தாரா பாராட்டு
இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும், தனது கதாபாத்திரத்தில் நடித்த ஜான்வியை பாராட்டி இருந்தார். அவர் பேசுகையில், "கோகிலா என் மனதிற்கு நெருக்கமான ஒரு கதாபாத்திரம். குட்லக் ஜெர்ரி திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பார்வையாளர்களுக்கு மிகவும் ஸ்வாரஸ்யமான படமாக அமையப் போகிறது. ஜான்வியை விட பொருத்தமானவர் வேறு ஒருவர் இருக்க முடியாது, குட்லக் ஜான்வி" என்று கூறினார்.
நயன்தாரா லைன்-அப்
இதனிடையே, நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு தற்போது பல பெரிய திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவர் தற்போது ஷாருக்கானின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ஜவான் படத்தில் நடித்து வருகிறார். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தை இயக்குனர் அட்லி இயக்குகிறார். ஜவான் படத்தில் சன்யா மல்ஹோத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அவர் சிரஞ்சீவி மற்றும் இயக்குனர் மோகன் ராஜாவுடன் இணையும் தெலுங்கு திரைப்படமான காட்பாதர், என்னும் மலையாளத் திரைப்படமான லூசிஃபரின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இதில் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்