Nawazuddin Siddiqui: முன்னாள் மனைவி வைத்த பகீர் குற்றச்சாட்டுகள்: மௌனம் கலைந்த நவாசுதீன் சித்திக்! பரபரப்பு அறிக்கை!
நவாசுதீன் மதம் மாற்றினார், பாலியல் வன்கொடுமை செய்தார் ,குழந்தைகளை வீட்டுக்கு வெளியே காக்க வைத்தார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து பாலிவுட் வட்டாரத்தை அலியா அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தன் மீது தன் முன்னாள் மனைவி முன்வைத்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விவாகரத்து
பாலிவுட்டின் பிரபல நடிகர் நவாசுதீன் சித்திக்கும் அவரது மனைவி ஆலியாவும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.
பாலிவுட்டில் தன் தனித்துவ நடிப்பால் தனக்கென பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவரும் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்து கோலிவுட் ரசிகர்களை ஈர்த்தவருமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக்.
திரைத்துறையில் தொடர்ந்து மேல்நோக்கி பயணித்து வரும் நவாசுதீன், தன் தனிப்பட்ட வாழ்வில் தொடர் சிக்கல்களை கடந்த ஓராண்டாக எதிர்கொண்டு வருகிறார். சென்ற 2010ஆம் ஆண்டு நவாசுதீன் ஜைனப் எனும் ஆலியா அஞ்சனாவை 2ஆவது திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஆண் குழந்தையும் உள்ள நிலையில், 2020ஆம் ஆண்டு நவாசுதீன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை அலியா முன்வைத்தார். அதனைத்தொடர்ந்து நவாசுதீன் - அலியா இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியதுடன் இருவரும் சட்டரீதியாக விவாகரத்து வழக்கை எதிர்கொள்ளத் தொடங்கினர்.
கடுமையான குற்றச்சாட்டுகள்
முன்னதாக நவாசுதீன் தன்னை மதம் மாற்றினார், பாலியல் வன்கொடுமை செய்தார் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து பாலிவுட் வட்டாரத்தை அலியா அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
தொடர்ந்து சென்ற ஆண்டு தன் குழந்தைகளுடன் துபாய் சென்று குடியேறிய அலியா, சென்ற மாதம் மீண்டும் இந்தியா திரும்பியது முதல் மீண்டும் இவர்களுக்குள் பிரச்னைகள் பூதாகரமாகத் தொடங்கின.
அலியா தங்கள் வீட்டில் அத்துமீறி நுழைந்ததாக நவாசுதீனின் தாயும், நவாசுதீன் தன் குழந்தையை ஏற்க மறுப்பதாக அலியாவும் மாறி மாறி புகார் தெரிவித்தனர்.
இதன் உச்சக்கட்டமாக நவாசுதீன் தன் குழந்தைகளை வீட்டுக்கு வெளியே காக்க வைத்ததாக முன்னதாக அலியா வீடியோ பகிர்ந்து அதிர்க்குள்ளாக்கினார்.
மௌனம் கலைத்த நவாசுதீன்
இந்நிலையில் தன் மீதான அடுக்கடுக்கான இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காமல் அமைதி காத்து வந்த அலியா தற்போது மௌனம் கலைந்து பதிலளித்துள்ளார்.
அதில், “என் மௌனத்தால் எல்லா இடங்களிலும் நான் கெட்டவன் என்று அழைக்கப்படுகிறேன். நான் அமைதி காத்ததற்குக் காரணம், இந்த நகைச்சுவைகள் எல்லாம் என் சிறிய குழந்தைகள் படிக்க நேரிடுமே என்று தான் நான் அமைதி காத்தேன்.
சமூக ஊடக தளங்கள், பத்திரிகைகள், ஒரு சில மக்கள் எனது நடத்தையை அவதூறாகப் பேசுவதை ரசிக்கிறார்கள். எனவே நான் சிலவற்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். முதலில் நானும் ஆலியாவும் பல ஆண்டுகளாக ஒன்றாக இருக்கவில்லை, நாங்கள் ஏற்கெனவே விவாகரத்து பெற்றுவிட்டோம். ஆனால் எங்கள் குழந்தைகளுக்காக மட்டுமே எங்களுக்குள் புரிதல் இருந்தது.
என் குழந்தைகள் ஏன் இந்தியாவில் இருக்கிறார்கள், 45 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை என்று யாருக்கும் தெரியாது. பள்ளியிலிருந்து எனக்குக் கடிதம் வந்துள்ளது.
’குழந்தைகளுக்காக பொறுத்துக் கொண்டேன்’
எனது குழந்தைகள் கடந்த 45 நாட்களாக பணையக் கைதிகளாக வைக்கப்பட்டு துபாயில் பள்ளிப் படிப்பை இழந்தனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குழந்தைகளை துபாயில் விட்டுவிட்டு பணம் கேட்பதற்காக தற்போது அவர்களை இங்கு அழைத்து வந்துள்ளார். பள்ளிக் கட்டணம், மருத்துவம், பயணம் மற்றும் இதர பொழுதுபோக்குச் செலவுகள் நீங்கலாக, சராசரியாக, கடந்த 2 ஆண்டுளில் மாதத்திற்கு சுமார் 10 லட்சமும், என் குழந்தைகளுடன் துபாய்க்குச் செல்வதற்கு முன்பு மாதத்திற்கு 5-7 லட்சமும் என்னிடம் அலியா பெற்றார்
அவர் எனது குழந்தைகளின் தாய் என்பதால், அவரது வருமானத்தை அமைத்துக் கொள்ள உதவுவதற்காக, என் செலவில் அவரது 3 படங்களுக்கு நிதியளித்துள்ளேன்.
என் குழந்தைகளுக்காக அவருக்கு ஆடம்பர கார்கள் கொடுக்கப்பட்டன, ஆனால் அலியா அவற்றை விற்று பணத்தை தானே செலவழித்தார். எனது குழந்தைகளுக்காக மும்பையின் வெர்சோவாவில் கடலை நோக்கிய ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளேன். எனது குழந்தைகள் சிறியவர்கள் என்பதால் அலியா அந்த குடியிருப்பின் இணை உரிமையாளராக ஆக்கப்பட்டார். நான் என் குழந்தைகளுக்கு துபாயில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பை கொடுத்துள்ளேன், அவரும் வசதியாக வசித்து வந்தாள். ஆனால் அவர் அதிக பணத்தை மட்டுமே விரும்புகிறார். அதனால் என் மீதும் என் அம்மா மீதும் பல வழக்குகள் போட்டிருக்கிறார். அது அவருடைய வாடிக்கை. கடந்த காலத்திலும் அலியா இதையேதான் செய்திருக்கிறார். அவருடைய கோரிக்கையின்படி பணம் கொடுத்தபோது வழக்கைத் திரும்பப் பெற்றார்.
நாடகம்
எனது குழந்தைகள் விடுமுறையில் இந்தியா வரும்போதெல்லாம், அவர்கள் பாட்டியுடன் மட்டுமே தங்குவார்கள். அவர்களை எப்படி வீட்டை விட்டு வெளியே நான் அனுப்ப முடியும். அப்போது நான் வீட்டில் இல்லை. அலியா ஏன் நான் குழந்தைகளை வீட்டை விட்டு அனுப்புவதை வீடியோ எடுக்கவில்லை?
இந்த நாடகத்தில் அலியா குழந்தைகளை இழுத்துவிட்டுள்ளார். என்னை மிரட்டி, என் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காக, என் தொழிலைக் கெடுத்து, அவருடைய சட்ட விரோதமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக இதையெல்லாம் செய்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.
This is not an allegation but expressing my emotions. pic.twitter.com/6ZdQXMLibv
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) March 6, 2023
இந்நிலையில், நவாசுதீனின் இந்த விளக்கம் பாலிவுட் வட்டாரத்தில் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி பேசுபொருளாகியுள்ளது.