Nanjil Vijayan : புகழ், பாலா என்னிடம் உதவி கேட்டார்கள்... ஆனால் இன்று நான், என் நிலைமை? மனம் திறந்த நாஞ்சில் விஜயன்
விஜய் டிவியை பொறுத்தவரை நான் ஒரு ஆடியன்ஸ் ஏஜென்ட். எனக்கு தெரிந்த லோக்கல் பசங்களை விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸாக அழைத்து செல்வேன். இப்படித்தான் விஜய் டிவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.
விஜய் டிவி மூலம் பிரபலமான காமெடி நடிகர்கள் பலர். அதில் ஒருவர்தான் அனைவருக்கும் பரிச்சயமான நாஞ்சில் விஜயன். தற்போது அவரை திரையில் பார்க்க முடியவில்லை. சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் இது குறித்து அவர் மிகவும் மனவேதனையுடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
நான் ஒரு ஆடியன்ஸ் ஏஜென்ட்:
ஆரம்ப காலகட்டத்தில் விஜய் டிவியை பொறுத்த வரை நான் ஒரு ஆடியன்ஸ் ஏஜென்ட். மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான 'அது இது எது' நிகழ்ச்சிக்கு ஆடியன்ஸ் தேவை. அதனால் உங்க லோக்கல் ஏரியாவில் உள்ள பசங்களை கூட்டிகிட்டு வரியா என என்னிடம் கேட்பார்கள். அப்படி எனக்கு தெரிந்த லோக்கல் பசங்களை விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ஆடியன்ஸாக அழைத்து செல்வேன். இப்படி தான் விஜய் டிவியுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அதற்கு பிறகு ஒரு நகைச்சுவை நடிகராக ஏராளமான நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொண்டேன். ஆனால் சமீப காலமாக என்னை விஜய் டிவியில் பார்க்க முடியாததற்கு காரணம் டீம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு சில டீமுடன் நாம் பழகும்போது அவர்கள் நமக்கு வாய்ப்பளிக்கிறார்கள். பிறகு மீண்டும் டீம் மாறிவிடும். இப்படி அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும்போது என்னால் எளிதில் அந்த புதிய டீமுடன் சகஜமாக போய் பழக முடியவில்லை.
ஒரு சிலர் அழைத்து வாய்ப்பளிப்பார்கள் ஆனால் ஒரு சில சமயம் புதிய டீமில் உள்ளவர்கள் அவர்களுக்கு நெருக்கமானவர்களை வைத்தே ஷோ நடத்திவிடுகிறார்கள். அப்படித்தான் சில வாய்ப்புகளை இழக்கிறேன்.
ஜெயித்தாலும் போராட வேண்டும் :
மீண்டும் விஜய் டிவியில் நான் நுழைவதற்கு என்னால் முடிந்த முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறேன். ஒரு மாதத்தில் பத்து பதினைந்து தடவையாவது தற்போது விஜய் டிவியின் டாப் நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் என அனைவரையும் மெசேஜ் மூலம் தொடர்புகொண்டு தான் இருக்கிறேன். இப்படி அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்த ஒரு முகமான பிறகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும்.
வாழ்க்கையில் ஜெயிக்கும் வரைதான் போராட்டம் அல்ல, வாழ்க்கையில் ஜெயித்த பிறகு அடைந்த நிலையை தக்க வைத்து கொள்ளவும் போராட வேண்டி இருக்கு. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்கு நாம் மற்றவர்களை கேட்டுத்தான் பெற வேண்டும். இன்று நம்மையும் தாண்டி பல புதியவர்கள் முன்னேறி கொண்டே இருக்கிறார்கள். நான் நன்றாக காமெடி செய்வேன் என்றாலும் என்னை விடவும் நன்றாக செய்யக்கூடியவர்கள் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி நான் நிலைக்க வேண்டும் என்றால் என்னுடைய திறமையை நான் வளர்த்து கொள்ள வேண்டும்" என்றார் நாஞ்சில் விஜயன்.
புகழ் - பாலாவின் வளர்ச்சி :
புகழ் மற்றும் பாலாவின் வளர்ச்சியை பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. என்னுடைய பார்வையில் இருந்து பார்க்கும்போது வாய்ப்பு தேடும் ஒரு சாதாரண கலைஞனாக பார்த்துள்ளேன். நீ ஷூட்டிங் போகும்போது என்னையும் உன்னுடன் கூட்டிகிட்டு போ என பலமுறை புகழ் என்னிடம் கேட்டுள்ளான். பாலாவிற்கு டிவியில் அறிமுகம் இல்லாத சமயத்தில் கூட சில சின்ன ஈவென்ட்களுக்கு அழைத்து சென்று 500 ரூபாய் பேமெண்ட் எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கிறேன். அன்றைக்கு அவன் அவ்வளவு சந்தோஷப்படுவான். இப்படி கண்ணெதிரில் வளர்ந்து இன்று மிகப்பெரிய இடத்திற்கு சென்ற அவர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. சில சமயங்களில் நான் யோசிப்பேன் ஏன் எனக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. அப்போது எனக்கான காலம் வரும்போது நிச்சயம் நானும் உயரத்திற்கு போவேன் என என்னை நானே ஊக்குவித்து கொள்வேன்.
இன்னும் சொல்ல போனால் பாலா, புகழ் இருவரையும் பார்க்கும்போது நான் தன்னம்பிக்கையாக உணர்கிறேன். இதுவரையில் அவர்கள் இருவருக்கும் என் மேல் அத்தனை பாசம், மரியாதை உண்டு" என தன்னுடைய நிலை குறித்து தெரிவித்து இருந்தார்.