D Imman: வாழ்க்கையில் நிறைய கசப்பான சம்பவம் நடந்திருக்கு - பிறந்தநாளில் வேதனையுடன் தெரிவித்த டி.இமான்
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்
இசை மட்டும் தான் என்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நகர்வுக்கும் இழுத்துக் கொண்டிருக்கிறது என இசையமைப்பாளர் டி.இமான் தெரிவித்துள்ளார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு விஜய் நடித்த தமிழன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித், அர்ஜூன், ஜெயம் ரவி, மாதவன் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இந்த 22 வருட இசை பயணத்தில் இசையமைத்துள்ளார். மேலும் பல பாடல்கள் பாடி ரசிகர்களை தனது திறமையால் இமான் கட்டிப்போட்டுள்ளார் என்றே சொல்லலாம். டி.இமான் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடலுக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.
அவர் அடுத்ததாக பார்த்திபன் இயக்கி வரும் டீன்ஸ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படியான நிலையில் டி.இமான் இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஏராளமான திரையுலகினரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பார்த்திபனின் டீன்ஸ் படக்குழு இமான் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடியுள்ளது. நடிகர் பார்த்திபன் இமானுக்கு அழகிய பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய டி.இமான், “இப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்தி கொடுத்த பார்த்திபனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை வருடங்கள் திரைப்பயணம், இசைப்பயணம் என 23 ஆண்டுகள் ஆகிவிட்டது என நினைக்கிறேன். நிறைய பிறந்தநாள் விழாக்களை பார்த்தாகி விட்டது. அதில் சந்தோசமும் நிறைந்துள்ளது, கொஞ்சம் சோகமும் உள்ளது. இந்த பிறந்தநாளை சிறப்பாக மாற்றிய அகிரா புரொடக்ஷன்ஸ், பார்த்திபன் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க்கையில் நிறைய இனிப்பான விஷயங்கள், கசப்பான அனுபவங்கள் நடந்துருக்கு. அதைத்தாண்டி இசை என்ற இறை சக்தி தான் ஒவ்வொரு நகர்வும் என்னை இழுத்துக் கொண்டிருக்கிறது.
இந்த டீன்ஸ் படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கு. பார்த்திபனுடன் வேலை செய்ய கடினமாக இருக்கும் என சொன்னார்கள். ஆனால் பாடல் வேலை பார்க்கும்போது அவர் எவ்வளவு இனிமையானவர் என்பது தெரிந்தது. படத்தில் 7 பாடல்கள் அவர் தான் எழுதியிருக்கிறார். இசையை தவிர்த்து எனக்கு எதுவும் தெரியாது. பார்த்திபன் மற்றவர்களிடம் இருந்து கொஞ்சம் தனித்து தான் தெரிவார். அவரின் சினிமா ஆசை என்னை வியக்க வைக்கிறது. ரொம்ப மறக்க முடியாத பிறந்தநாளாக இதை பார்த்திபன் மாற்றிக் கொடுத்து விட்டார்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: RJ Balaji: தப்பித்தவறி கூட அப்படி படம் எடுக்கக்கூடாது.. அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த ஆர்.ஜே.பாலாஜி