"கருவறைக்குள் வராதீங்க” வாசலிலே நிறுத்தப்பட்ட இளையராஜா - ஆண்டாள் கோயிலில் பரபரப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறை அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்த இளையராஜாவை ஜீயர்கள் தடுத்து நிறுத்தி கருவறைக்கு வெளியில் நிற்கச் சொன்னதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய திரையுலகின் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்பவர் இளையராஜா. இசைஞானி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் 1000த்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். பா.ஜ.க.வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இவர் உள்ளார்.
கோயிலில் தடுத்து நிறுத்தப்பட்ட இளையராஜா:
இந்த சூழலில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜா இசையமைத்து வெளியான திவ்ய பாசுரம் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி தனியார் நிறுவனம் சார்பாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக இசையமைப்பாளர் இளையராஜா சென்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சாமி தரிசனம் செய்வதற்காக கோயில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்துக்குள் இளையராஜா நுழைந்தார். அப்போது அவரது அருகே இருந்த ஜீயர் மற்றும் பட்டர்கள் இளையராஜாவை தடுத்து, கருவறைக்குள் வெளியே நிற்குமாறு கூறினார்கள். இளையராஜா உடனடியாக அங்கிருந்து வெளியேறி அர்த்த மண்டப படியின் அருகே நின்றார். பின்னர், கோயில் நிர்வாகம் அளித்த மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்த சம்பவத்தை அங்கே இருந்த சிலர் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குவியும் கண்டனங்கள்:
மற்றொரு பக்கம் இளையராஜாவுக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பில் விதிமீறல்கள் இருப்பதாக ஜீயர்கள் முறையிட்டு உள்ளனர். கடவுள்களைத் தவிர மனிதர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் எந்த ஒரு மரியாதையும் அளித்து அழைத்து வரக்கூடாது என்று விதி உள்ளதாகவும், இளையராஜா மற்றும் உடன் இருந்த ஜீயர்களுக்கு வெண்கொடை பிடித்து மேள தாளங்கள் முழங்க கோவில் யானை வரவேற்பு அளித்து பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆளுங்கட்சி எம்.பி.யாக இருக்கும் இளையராஜாவிற்கே இந்த நிலை என்றால், சாமானியர்களுக்கு எந்த நிலை ஏற்படும் என்றும், கோயிலின் கருவறைக்குள் ஒரு தரப்பினர் மட்டும்தான் செல்ல வேண்டுமா? என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் இளையராஜா நடத்தப்பட்ட விதத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.