Deva Ghana : ”கானா என்று பெயர் வெச்சதே நான்தான்!” : தேனிசை தென்றல் தேவா சொன்ன சுவாரஸ்யம்..
இரண்டு பேருமே ஒழுக்கத்துக்குப் பெயர் போனவர்கள். ஒழுக்கம் இல்லையென்றால் இந்த துறையில் ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர்கள் உதாரணம்
இளையராஜா ஃபோக் இசைக்கு அகராதி, மெலடிக்கு ரஹ்மான் அகராதி என தமிழ் சினிமா மிளிர்ந்து கொண்டிருந்த காலத்தில் கானா என்கிற தனி ஜானரை உருவாக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தைத் தக்கவைத்துக் கொண்டவர் ‘தேனிசைத் தென்றல்’ தேவா. தனது 20 ஆண்டுகால சினிமா வாழ்வில் தமிழ், மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் பிறந்தவர். சாய் வித் சித்ரா நிகழ்வில் அவர் அளித்த பேட்டியில் இருந்து.
“இளையராஜாவை நான் அதிகம் சந்தித்ததே கிடையாது. நான் சினிமா வாய்ப்பு தேடி அலைந்த சமயம் அவரது பாடல் ‘பூவரசம் பூ பூத்தாச்சு” பட்டித் தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரே ஒரு முறை அவரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செய்துவிட்டு வந்தேன். ரஹ்மானிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பு கூடப் பேசினேன். இரண்டு பேருமே ஒழுக்கத்துக்குப் பெயர் போனவர்கள். ஒழுக்கம் இல்லையென்றால் இந்த துறையில் ஜெயிக்க முடியாது என்பதற்கு அவர்கள் உதாரணம். இவர்கள் நின்று விளையாடும் களத்தில்தான் நான் தனித்து தெரியவேண்டி கானா பாடல்களை அறிமுகப்படுத்தினேன். அவை கானா பாடல்கள் இல்லை, உழைப்பாளர்களின் பாடல். அதற்கு கானா என பெயர் வைத்தது நான்தான்.
இந்த கானா பாடலுக்காக பலர் என்னை அவமதித்திருக்கிறார்கள். அண்மையில் கூட ஒரு இசையமைப்பாளர் யார் யாரெல்லாமோ கானா பாடல்கள் பாடுகிறார்கள் நானும் ஒரு பாடல் பாடுகிறேன் என ஒரு மேடையில் என் கண் முன்னாலேயே என்னைப் பார்த்தபடி அவ்வாறு பாடினார்/இத்தனைக்கும் அவர் எனக்கு நல்ல நண்பர். எங்களுக்குள் எந்த முன்பகை கூட இருந்ததில்லை.” என்கிறார்.
இன்று வரை ரெக்கார்டிங்குக்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே சென்றுவிடும் பழக்கம் உள்ளவர். அது குறித்துப் பேசுகையில், “எஸ்.ஏ.சந்திரசேகரின் முதல் படத்துக்கு நான்தான் இசை அமைத்தேன். 7 மணி ரெக்கார்டிங்குக்கு அவர் 6:45க்கு வந்து ஸ்டுடியோவில் அமர்ந்திருந்தார். நான் பொறுமையாக 7:15க்கு சென்றேன். ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஆனால் சட்டென கடிகாரத்தைப் பார்த்தார். அதுவே ஆயிரம் கேள்வி கேட்டதுபோல இருந்தது. அதிலிருதே நான் நேரத்துக்கு சரியாக ஸ்டுடியோவில் இருப்பதை பழக்கப்படுத்திக் கொண்டு உள்ளேன்” என்கிறார். தற்போதைய இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷை சிலாகிக்கும் அவர் அசுரன் ரீரெக்கார்டிங் குறித்துப் புகழ்ந்து தள்ளினார்.
அதிமுக தேர்தல் மேடைகளுக்காக பாடல் இசைத்துத் தந்த தேவா, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவராகவும் பதவி வகித்தார்.