Hip Hop Adhi: முனைவர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி ; எதற்காக தெரியுமா?
திரைப்பட நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, இசை தொடர்பான ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38-வது பட்டமளிப்பு விழா இன்று நடந்தது. இந்த விழாவில், தமிழ்நாடு ஆளுநரும், பாரதியார் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் இணைவேந்தர் மற்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் 1,382 பேர் பி.எச்டி பட்டமும், 334 பேர் எம்.பில் பட்டமும் பெற்றனர். மேலும், கலை பாடப்பிரிவில் 10 ஆயிரத்து 958 பேர், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்து 907 பேர், அறிவியல் பாடப்பிரிவுகளில் 36 ஆயிரத்து 856, கல்வியியல் பாடப்பிரிவுகளில் 846, வணிகவியல் பிரிவில் 27 ஆயிரத்து 469 என மொத்தம் 93 ஆயிரத்து 36 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில், திரைப்பட நடிகர் மற்றும் இசை அமைப்பாளருமான ஹிப்ஹாப் தமிழா ஆதி, இசை தொடர்பான ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார். மேலாண்மை பிரிவில் இசை தொழில் முனைவோர் என்பதை மையமாக வைத்து, அவர் பி.எச்.டி ஆராய்ச்சி படித்து முடித்துள்ளார். சுதந்திரமான இசைக் கலைஞர்களுக்கான தொழில்முனைவு வாய்ப்புகள் என்ற தலைப்பில் 5 ஆண்டுகள் ஆய்வு செய்து அவர் முனைவர் பட்டம் பெற்றார். ஆளுநர் ஆர்.என். ரவியிடம் ஹிப் ஹாப் ஆதி முனைவர் பட்டம் பெற்றார். இது குறித்து பேசிய ஹிப் ஹாப் ஆதி, ”5 ஆண்டுகள் தொடர்ச்சியாக உழைத்த உழைப்புக்கு இன்று பலன் கிடைத்துள்ளது. இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் விண்கலம் தரையிறங்கியது பெருமைக்குரிய விஷயம். நடிப்பு, தயாரிப்பில் தற்போது தீவிரமாக இருக்கிறேன். விரைவில் இசையில் கவனம் செலுத்த இருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் பேசினார். அப்போது பேசிய அவர், ”பாரதியார் பல்கலைக்கழகம் அடுத்த ஆண்டு டாப் 20 இடங்களில் இடம் பெறும் என நம்புகிறேன். புதிய தலைமுறையினர் தங்களின் கனவை நோக்கி பயணிக்க வேண்டும். ஒரு சதவீதம் பேர் மட்டுமே இலக்கு நிர்ணயித்து தங்களின் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுகின்றனர். மற்ற 99 சதவீதம் பேர் திறமை இருந்தும் தங்களுக்கான இலக்கு தெரியாமல் பயணிக்கின்றனர்.
புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கனவுகளை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அனைவரின் வாழ்க்கையில் ஏற்ற, இறக்கங்கள் இருக்கும் என்பதை மாணவர்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அது இலக்கை அடைய உதவியாக இருக்கும். குறைந்த காலத்தில் எதுவும் கிடைக்காது, நீண்ட காலத்தை செலவிட வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த பட்டமளிப்பு விழா காலை 10.30 மணியளவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பட்டமளிப்பு விழா அரங்கிற்குள் மாணவர்கள் 9 மணிக்கே அமர வைக்கப்பட்டனர். ஆனால், ஆளுநர் காலதாமதமாக 11.40 மணிக்கு விழாவில் பங்கேற்றதால், பட்டம் பெற வந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மிகவும் சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.