OTT Movies: ஓடிடி படங்கள் திரையரங்குக்கு வராது.. உறுதியாய் கூறிய தியேட்டர் ஓனர்ஸ்!
ஓடிடி படங்கள் தியேட்டரில் வெளியாகுமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரையரங்கு உரிமையாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
ஓடிடியில் வெளியான திரைப்படங்களை திரையிரங்குகளில் வெளியிடபோவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். திரையரங்கில் படம் வெளியாகி 4 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் படம் வெளியாகும் என்றால் மட்டுமே ஒப்பந்தம் போடப்படும் என தெரிவித்துள்ளனர்
முன்னதாக, கொரோனா பரவல் காரணமாக பல துறைகள் சவாலான சூழலை எதிர்க்கொண்டுள்ளன. அதில் சினிமா துறையும் அடங்கும். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது, தியேட்டர் வெளியீட்டிற்கு காத்திருந்த படங்களும் கிடப்பில் போடப்பட்டன. உரிய நேரத்தில் போடப்பட்ட ப்ளான்கள் எதுவுமே நிறைவேறாததால் , தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் பல சிக்கல்களை எதிர்க்கொண்டது.
வெளியீட்டிற்காக காத்திருந்த சிறு மற்றும் பெரு பட்ஜெட் படங்கள் அனைத்தும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டதால், அவற்றை ஓடிடி தளங்களில் வெளியிடலாம் என முடிவெடுத்தனர். அப்படியாக சிறிய, பெரிய பட்ஜெட் படங்கள் பல ஓடிடியில் வெளியானது. இந்நிலையில் தற்போது தான் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா முன்னேச்சரிக்கைகளை கடைபிடித்து தியேட்டர்களை திறக்கலாம் என அரசு தெரிவித்தது. அதனடிப்படையில் தற்போது தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 23ம் தேதி முதலே திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் இதுவரை வெளியாகவில்லை. கடைசியாக தியேட்டர்கள் மூடப்படும்போது திரையிடப்பட்ட சில படங்கள் தற்போது ஓடுகின்றன.
அதுபோக சில ஹிந்தி படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் புதுப்புது படங்கள் வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையே ஓடிடியில் மாபெரும் வெற்றி அடைந்த சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை போன்ற படங்கள் தற்போது தியேட்டர்களில் வெளியாகும் என இணையத்தில் செய்தி பரவியது. என்னதான் ஓடிடி என்றாலும், தியேட்டர்களில் பார்க்கும் அனுபவமே தனிதான் என சிலாகித்த பலரும் ஓடிடி படங்களின் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருந்தனர். இந்நிலையில் ஓடிடியில் வெளியான திரைப்படங்களை திரையிரங்குகளில் வெளியிடபோவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுமுடக்க காலத்தில் திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் புதிய படங்களை வெளியிட ஏற்பட்ட தாமதம் மற்றும் நேரடியாக ஓடிடி தளங்களுக்கு திரைப்படங்களை விற்றது காரணமாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தை உள்ளடக்கிய தென்னிந்திய சினிமாத்துறை 1000 கோடி அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு பொது முடக்க காலத்தில் ஓடிடி தளங்களுக்கு பல்வேறு திரைப்படங்கள் விற்கப்பட்டன. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று தொடங்கி விஜய்யின் மாஸ்டர், தனுஷின் ஜெகமே தந்திரம் திரைப்படம் வரை பல்வேறு பெரிய திரைப்படங்கள் கூட திரையரங்கிற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய மாநில பார்வையாளர்களை பொறுத்தவரையில் நட்சத்திர மோகம் என்பது முன்பை காட்டிலும் குறைந்துவிட்டதாக கூறும் திரையரங்கு உரிமையாளர்கள், பெரிய நட்சத்திரங்களின் படமாக இருந்தாலும் முதல் வாரத்திற்கு பிறகு வீழ்ச்சியை சந்திக்கலாம் என கூறுகின்றனர்.