(Source: ECI/ABP News/ABP Majha)
Marimuthu: இயக்குநர், நடிகர் மட்டுமல்ல.. தீவிர வாசகர்; கி.ரா.வின் வேட்டியைத் துவைத்த மாரிமுத்து!
Marimuthu: கி.ராவிடம் தனது ஆசை ஒன்றை மாரிமுத்து சொல்ல, அதிர்ச்சியில் கி.ரா மறுக்க, விடாப்பிடியாக அதைக் கேட்டு வாங்கி செய்திருக்கிறார், மாரிமுத்து.
இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து(Marimuthu) இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் நடிப்பும் இயக்கமும் எல்லோரும் அறிந்ததுதான். ஆனால் அவர் மிகச்சிறந்த ஒரு வாசகர் என்பது தெரியுமா?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதேபோல‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’, ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. அண்மையில் வெளியான ’ஜெயிலர்’ படத்திலும் மாரிமுத்து நடித்திருந்தார்.
இயக்குநர் முகம்
நடிகராக இருந்திருந்தாலும் முதன்முதலாக அவர் சென்னைக்கு வந்தது, இயக்குநர் ஆகவேண்டும் என்ற ஆசையால்தான். ராஜ் கிரண், வசந்த், சீமான், மணிரத்னம், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். தொடர்ந்து, கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய 2 படங்களை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில், மாரிமுத்துவின் வாசிப்புப் பக்கம் குறித்து அவரின் நெருங்கிய நண்பரும் எழுத்தாளருமான சுகா சிலவற்றைப் பகிர்ந்துகொண்டார்.
''பேரதிர்ச்சியாக இருக்கிறது. 25 ஆண்டுகாலப் பழக்கம் எங்களுடையது. தீவிர வாசகர் அவர். என்னுடைய 'மூங்கில் மூச்சு' என்னும் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது, காலை 7 மணிக்கு முதன்முதலாக போன் செய்து பேசுவார். எனக்கு ஜெயகாந்தன் மிகவும் பிடிக்கும் என்பதால், அவர் குறித்து மாரிமுத்துவைப் பேசச் சொல்லிக் கேட்பேன். ஒரு எழுத்தாளன் எழுதிய படைப்பை, வாசகனாக உள்வாங்கிக் கொண்டு, ஏற்ற இறக்கங்களோடு அசை போடுபவர் மாரிமுத்து.
தீவிர வாசகர்
மாரிமுத்துவைப் போன்ற தீவிர வாசகர்கள் தமிழ் சினிமாவில் அரிது. அவரது மறைவு பல நினைவுகளைக் கிளறி விடுகிறது. உணர்ச்சிமயமான வாசகர் மாரிமுத்து என்பதற்கு சிறந்த உதாரணமாக ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறேன். கி.ராஜ நாராயணனின் எழுத்துகள் மீது அதீத மதிப்பு கொண்ட மாரிமுத்து ஒருநாள் கிளம்பி புதுவைக்குச் சென்றிருக்கிறார். கி.ராவிடம் தன்னை ஒரு வாசகர் என்று சொல்லி அறிமுகமாகியிருக்கிறார்.
கி.ராவின் ஒவ்வொரு படைப்பாக எடுத்து ரசித்துச் சொல்லி கி.ராவை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். அடுத்து கி.ராவிடம் தனது ஆசை ஒன்றை மாரிமுத்து சொல்ல, அதிர்ச்சியில் கி.ரா மறுக்க, விடாப்பிடியாக அதைக் கேட்டு வாங்கி செய்திருக்கிறார், மாரிமுத்து.
கி.ராவிடம் மாரிமுத்து கேட்டது இதுதான்.
‘ஐயா! ஒங்க எழுத்து மூலம் எனக்கு எவ்வளவோ குடுத்திருக்கீங்க. உங்க வேட்டியை நான் துவைச்சுப் போடணும்’. இதைக் கேட்டு நம்ப முடியாமல் திணறி இருக்கிறார் கி.ரா. ஆனாலும் விடாப்பிடியாக, தான் சொன்னபடியே அதைச் செய்து விட்டுத்தான் சென்னை திரும்பியிருக்கிறார், ‘வாசகர்’ மாரிமுத்து.
இயக்குநர், பெரிய திரை, சின்னத் திரை நடிகர் என்பதைத் தாண்டி, தீவிர வாசகர் அவர். எந்தவித உடல் நலக் குறைவும் இல்லாத நிலையில், மாரிமுத்து உயிரிழந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சொந்த வாழ்க்கையில் எப்படி?
மாரிமுத்து ஒரு கறாரான ஆள் என்று, அவர் ஏற்று நடித்த பாத்திரங்களின் அடிப்படையில் பிம்பம் உருவாகி இருக்கிறது. ஆனால் அவர் கறாரான ஆள் எல்லாம் இல்லை. அடிக்கடி எல்லோரிடமும் சென்று, எல்லா நேரமும் நன்றி சொல்வார். சிலர் அந்த நன்றியை ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறுவார்கள். தான் நடித்த படத்தின் நடிகருக்கு அல்லது இயக்குநருக்கு அவராகவே ஒரு பரிசைத் தயார் செய்து, எடுத்துக்கொண்டு போய் நன்றி சொல்வார்.
இசை ஆர்வலர்
மாரிமுத்துவின் இசை ரசனையும் மிகவும் அபூர்வமானது. அவரின் பார்வையே வித்தியாசமாக இருக்கும். மிகவும் சுவாரசியமான மனிதர் மாரிமுத்து. அவரின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாதது'' என்று தெரிவித்தார் எழுத்தாளர் சுகா.