Tamil Movies: தேர்தல் தேதி அறிவிப்பு.. விழி பிதுங்கும் தமிழ் சினிமா.. கடுப்பாகும் ரசிகர்கள்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்பதால் பெரும்பாலான படங்கள் அந்த மாதம் ரிலீசாகாது. ஆனால் இந்தாண்டு மேலும் ஒரு சம்பவமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பல படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்களவை தேர்தல்
ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்த மக்களவை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவித்துள்ளார். அதேபோல் ஜூன் 1 ஆம் தேதி 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் இன்னும் 50 நாட்களுக்கு இந்தியா முழுக்க தேர்தல் திருவிழா களைக்கட்ட தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனுவுக்கு கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை 28 ஆம் தேதி நடக்கும் நிலையில், 30 ஆம் தேதி மனுவை திரும்ப பெற கடைசி நாளாகும். மக்களவை தேர்தலோடு காலியாக உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
விழி பிதுங்கும் தமிழ் சினிமா
2024 ஆம் ஆண்டு தொடங்கியது முதலே தமிழ் சினிமா தள்ளாடி வருகிறது. கேப்டன் மில்லர், அயலான், லால் சலாம் தவிர்த்து பெரிய படங்கள் எதுவும் வரவில்லை. சொல்லப்போனால் கடைசியாக 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விஜய் நடித்த லியோ தான் முன்னணி நடிகரின் படமாக வெளியானது. அதன்பின் எந்த பெரிய நடிகரின் படங்களும் ரிலீசாகவே இல்லை. நடப்பாண்டு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய படங்களும் ரசிகர்களிடம் எடுபடாமல் போனது. அதேசமயம் ரி-ரிலீஸ் படங்கள், மலையாள படங்கள் எல்லாம் வசூலில் சக்கைப்போடு போட்டது.
ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தேர்வுகள் நடைபெறும் என்பதால் பெரும்பாலான படங்கள் அந்த மாதம் ரிலீசாகாது. ஆனால் இந்தாண்டு மேலும் ஒரு சம்பவமாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் பல பட நிறுவனங்கள் முழித்து வருகின்றன.
என்னென்ன படங்கள்?
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான், ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ரத்னம், பிரபாஸ் நடித்து வரும் கல்கி ஏடி 2898, அரண்மனை 4, வணங்கான் உள்ளிட்ட படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போவது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோடை விடுமுறை படங்களும் வேறு தேதியா அல்லது திட்டமிட்ட ரிலீஸா என்பதை பரிசீலித்து வருகிறது. கடந்தாண்டு ரூ.600 கோடி வரை வசூலை பார்த்த தமிழ் சினிமா இந்த முறை முதல் காலாண்டில் ரூ.100 கோடி வசூலுக்கே திணறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.