Sanal Kumar Sasidharan Arrest: “மஞ்சுவாரியர் உயிருக்கு ஆபத்து” - ஃபேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குநர் சனல்குமார் சசிதரன் கைது..!
மஞ்சு வாரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஞ்சு வாரியர் புகாரில் இயக்குநர் சனல்குமார் சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் சனல் குமார் சசிதரன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர் பிணைக் கைதியாகவைக்கப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்திருத்தார். இந்த நிலையில் இதற்கு பதிலாக மஞ்சு வாரியர் கொச்சியிலுள்ள ஒரு காவல் நிலையத்தில் சனல் குமார் சசிதரன் தன்னை மிரட்டுவதாகவும், சோசியல் மீடியாவில் தனக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் கூறி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த காவல்துறை சனல் குமாரை இன்று காலை செய்துள்ளது.
சனல்குமார் சசிதரன் பதிவிட்ட பதிவு:
`இந்தப் பதிவின் எதிர்வினைகள் குறித்து முழுவதுமாக உணர்ந்து, பொறுப்புடன் எழுதுகிறேன்’ எனக் கூறியுள்ள இயக்குநர் சனல் குமார் சசிதரன் தனது `செக்ஸி துர்கா’ திரைப்படத்தைப் பார்த்தவுடன் அவரது திரைப்படத்தில் நடிக்க விரும்புவதாக அவரை மஞ்சு வாரியர் தொடர்புகொண்டார்.
``காயாட்டம்’ திரைப்படம் இப்படித்தான் உருவானது.எனினும், அதன் படப்பிடிப்புப் பணிகளின் போது, மஞ்சு வாரியரிடம் தனியாக பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது உதவியாளர்களான பினீஷ் சந்திரன், பினு நாயர் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர்களாகவும் மாறியதோடு, அவரை விட்டு நகரவே இல்லை. மேலும், படத்தின் வெளியீட்டையும் இதே தயாரிப்பாளர்கள் நிறுத்த முயன்றனர். மஞ்சு வாரியரின் நண்பர்கள் இருவரைத் தொடர்புகொண்டேன். அவர்களும் உதவ முடியாமல் தவிக்கின்றனர்.
மற்றொரு பதிவில், `மஞ்சு வாரியர் ஆபத்தில் இருப்பதாக நான் பதிவிட்டு நான்கு நாள்கள் ஆகிவிட்டன. எனினும், மஞ்சு வாரியரின் தரப்பில் இருந்தோ, வேறு யாரிடம் இருந்தோ இந்த விவகாரம் தொடர்பாக எந்தக் கருத்தும் வெளிவரவில்லை. மஞ்சு வாரியரின் மௌனம் என் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாளம் சினிமாவில் பாலின சமத்துவத்தை உறுதிசெய்வதற்காகப் பணியாற்றும் விமன்ஸ் சினிமா கலெக்டிவ் அமைப்பிற்கு இதுகுறித்து ஈமெயில் செய்திருந்தேன். அவர்களும் மௌனம் காக்கிறார்கள். இந்த விவகாரத்தின் தீவிரத்தை யாரும் உணரவில்லை. கேரள ஊடகங்கள் மௌனம் காப்பது அச்சம் அளிப்பதாக இருக்கிறது. தேசியளவில் புகழ்பெற்ற திரைப்பட நடிகை ஒருவரின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் குறித்த விவகாரத்தை இங்கே பேசியுள்ளேன்.. தேசிய ஊடகங்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும்” என அதில் பதிவிட்டு இருந்தார்.