Maamannan: ஓடிடியில் ரிலீசாகும் மாமன்னன் - நெட்பிளிக்ஸ் பயனாளர்களுக்கு குட் நியூஸ்
மாமன்னன் வரும் 27ம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட நெட்பிளிக்ஸ்
வடிவேலு, உதயநிதி கூட்டணியில் வெளியான மாமன்னன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் 27ம் தேதி ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள மாமன்னனில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசையும், படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் வாழ்வின் வலியை உணர்த்தியுள்ளன. கடந்த 29ம் தேதி திரைக்கு வந்த மாமன்னன் படத்தை பலரும் வரவேற்று விமர்சித்திருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி அரசியலை எடுத்து கூறும் மாமன்னனுக்கு திரைப்பிரபலங்களும் வரவேற்பு அளித்தனர். வசூல் ரீதியாகவும் எதிர்பார்த்த வெற்றியை மாமன்னன் படைத்து வருகிறது.
இந்த நிலையில் திரைக்கு வந்து ஒருமாதத்துக்கு பிறகு மாமன்னன் ஓடிடியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாமன்னன் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நெட்பிளிக்ஸ், ஜூலை 27ம் தேதி ஓடிடியில் மாமன்னனை காணலாம் என அறிவித்துள்ளது. ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் மாமன்னன் ரிலீசாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. மாமன்னனை திரையங்கிற்கு சென்று பார்க்க முடியாதவர்கள் இன்னும் 10 நாட்களில் நெட்பிளிக்சில் காணலாம்.
படத்தில் மாமன்னனாக வரும் வடிவேலு எம்.எல்.ஏ.வாக இருப்பார். அவரை சுற்றி நடக்கும் அரசியல் ஆதிக்கமும், சாதிய ஆணவமும், அடக்குமுறையும் திரையில் காட்டி இருப்பார் மாரி செல்வராஜ். எப்போதும் காமெடி நடிகராக மட்டுமே பார்க்கப்பட்ட வடிவேலு நடிப்பின் முதிர்ச்சியாலும், மாமன்னன் கேரக்டரை திரையில் தாங்கி நின்று அசத்தி இருப்பார். காமெடி நடிகராலும் ஒரு லீட் ரோல் கொடுக்க முடியும் என்பதை மாமன்னன் மூலம் வடிவேலு நிரூபித்துள்ளார். நீண்ட நாள் சினிமாவை விட்டு ஒதுங்கிய வடிவேலுக்கு மாமன்னன் மிகப்பெரிய கம்பேக் கொடுத்துள்ளது. மாமன்னனை பார்த்த பலரும் அதிமுகவின் முன்னால் சபாநாயகர் தனபாலின் கதையை படமாக எடுத்துள்ளதாக கருத்துகள் கூறி வந்தனர். அதனால் படத்துக்கு அதிகளவில் நேர்மறையான விமர்சனங்கள் வந்தன.
இந்த நிலையில் வெள்ளித்திரையில் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்துள்ள மாமன்னன் ஓடிடியிலும் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தெலுங்கில் நாயகுடு என்ற பெயரில் மாமன்னன் ரிலீசானது. மாமன்னன் வெற்றியை கொண்டாடும் விதமாக அதன் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு கூப்பர் காரை பரிசாக கொடுத்த உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.