M.S. Viswanathan: ஏழு ஸ்வரங்களில் சிரிக்கின்றார்... மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி நினைவலைகள்!
தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து கோலோச்சி சென்றபடி இருந்தாலும் மெல்லிசை மன்னர்களில் ஒருவராகத் திகழும் எம்.எஸ். விஸ்வநாதனனின் இடம் மிகவும் தனித்துவமானது.
ரேடியோ காலம் தொடங்கி இன்றைய ரீல்ஸ் யுகம் வரை நீக்கமற நிறைந்து, நாள்தோறும் நினைவுகூரப்பட்டுக் கொண்டிருக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் நினைவு தினம் இன்று.
தமிழ் சினிமாவின் எம்.கே. தியாகராஜ பாகவாதர், ஏ.எம். ராஜா, கே.வி. மகாதேவன் எனத் தொடங்கி இன்றைய 2கே கிட்ஸ்களை ஆக்கிரமித்துள்ள அனிருத் வரை தமிழ் சினிமாவில் ஏராளமான இசையமைப்பாளர்கள் வந்து கோலோச்சி சென்றபடி தான் இருக்கிறார்கள். ஆனால் மெல்லிசை மன்னர்களில் ஒருவராகத் திகழும் எம்.எஸ். விஸ்வநாதனனின் இடம் மிகவும் தனித்துவமானது.
ஹார்மோனியத்தை எடுத்துக்கொண்டு தனியார் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் தன் தள்ளாத வயதிலும் குழந்தை போல் அமர்ந்து, அவ்வளவு பொறுமையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் இளம் தலைமுறையினருக்கு எம்.எஸ்.வி இசை கற்பிப்பதை அவரது ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.
கனவு நனவானது:
மலையாளக் குடும்பத்தைச் சேர்ந்த எம்.எஸ் விஸ்வநாதன் பிறந்தது கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில். எம். எஸ்.வி முதல் மேடை ஏறியபோது அவரது வயது 13. சினிமாவைப் பொறுத்தவரை எம்.எஸ்.வியின் முழு முதல் ஆசையாக இருந்தது நடிப்பும் பாடல்களுமே. ஒரு தேர்ந்த நடிகராகவும் பாடகராகவும் உருவாக வேண்டும் எனும் கனவுகளுடன் சினிமாவில் நுழைந்தவருக்கு கிடைத்ததோ இசை வாய்ப்பு!
விஸ்வநாதன் - ராமமூர்த்தி கூட்டணி:
முதலில் டி. ராமமூர்த்தியுடன் இணைந்து எம்.எஸ்.வி இசையமைக்கத் தொடங்கிய நிலையில், இந்த இணைக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. ‘பணம்’ திரைப்படம் தொடங்கி, பாலும் பழமும், ஆலயமணி, நெஞ்சம் மறப்பதில்லை, ஆண்டவன் கட்டளை, எங்க வீட்டுப்பிள்ளை, காதலிக்க நேரமில்லை என சூப்பர் ஹிட் ஆல்பங்களை வழங்கி சுமார் 100 படங்கள் வரை இந்த இணை இணைந்து பணியாற்றியது.
தனிப்பாதையில் பயணம் :
பின் தனிப்பட்ட காரணங்களால் தனித்தனியாக தங்கள் பாதையை வகுத்து, இருவரும் பிரிந்து சென்று கவனம் செலுத்தத் தொடங்கினர். எம்.எஸ்.வியின் 100ஆவது படமாக அமைந்தது எம்.ஜி.ஆருக்கு அவர் இசையமைத்த ‘அன்பே வா’ திரைப்படம். ‘ராஜாவின் பார்வை’, ‘லவ் பேர்ட்ஸ், ‘ஏ நாடோடி’ என இப்படத்தின் துள்ளலான பாடல்கள் இன்றும் பல டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பாடப்பட்டு மக்களை நடனமாட வைத்து வருகிறது.
சிறந்த கூட்டணி:
சிவாஜி, எம்.ஜி.ஆர் இருவரின் பெரும்பான்மையான படங்களுக்கு இசையமைத்து அவர்களது நடிப்புக்கு உயிரூட்டிய எம்.எஸ்.வி, கே.பாலச்சந்தர் உள்ளிட்ட 70 -களின் இயக்குநர்கள் சிலருடனும் நல்ல நட்புறவைக் கொண்டு அவர்களுடன் சிறந்த காம்போவாக விளங்கி ஹிட் ஆல்பங்களைக் கொடுத்தார்.
தாங்கள் எட்டும் உயரங்களுக்கு சரிசமமாக வீழ்ச்சியையும் கலைஞர்கள் பொதுவாக எதிர்கொள்வார்கள். ஆனால், 70களின் பிற்பகுதியில் இளையராஜா எனும் மற்றுமொரு இசை ஜாம்பவான் உருவெடுத்து, மெல்ல மெல்ல தமிழ் திரையிசையை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்ட நிலையிலும், தன் தனித்துவமான இசைப்பயணத்தை நிதானமாக மேற்கொண்டு தொடர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்தார் எம்.எஸ்.வி!
தலைமுறையை தாண்டிய பற்று:
தமிழ் திரையிசையில் ஜாஸ் இசையை எந்த ஜெனரேஷனும் ரசிக்கும்படி பயன்படுத்தியவர்களில் எம்.எஸ்.வி முக்கியமானவர். திரையிசையில் தன் மேதைமை தாண்டி, தன் பணிவான பண்பால் அனைவரையும் கவர்ந்தவர். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என இவரது அடுத்தடுத்த தலைமுறை ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் இவர் மீது இன்றளவும் வைத்திருக்கும் அன்பைத் தாண்டிய பற்று இதற்கு சான்று!
“எம்.எஸ்.விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோரது நாதம் என்னுடைய நாடி, நரம்பு,ரத்தம் என அனைத்திலும் ஊறிப்போனது. என்னுடைய உயர்வு இவர்களுடையது; ரஹ்மானுடைய உயர்வு இவர்களுடையது” - இவை இளையராஜாவின் வார்த்தைகள்.
நினைவுகூர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் :
ஏ.ஆர்.ரஹ்மானுடன் எம்.எஸ்.வி கொண்டிருந்த பிணைப்பு உணர்வுப்பூர்வமானது. தன்னைவிட இரண்டு தலைமுறை இளையவரான ஏ.ஆர்.ரஹ்மானை ஆஸ்கர் வென்று திரும்பிய நிகழ்வில் மேடையில் உச்சிமுகர்ந்து புகழ்ந்தார் எம்.எஸ்.வி. சமீபத்திய நிகழ்வான மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கூட எம்.எஸ்.வியை நினைவுகூர்ந்து சிலாகித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
இசையையும் ஹார்மோனியப் பெட்டியையும் தன் உயிர்நாதமாகக் கொண்டு வாழ்ந்து, தமிழ் மக்களின் உணர்வுகளில் கீதமாக என்றென்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் எம்.எஸ்.விக்கு இன்று 8ஆம் ஆண்டு நினைவுநாள்.