SPB Pallavi: பல ஆண்டுகளாக பாடாமல் இருக்கும் எஸ்.பி.பி., மகள் பல்லவி - என்ன காரணம் தெரியுமா?
நாம் பொதுவாக யாரிடம் ரொம்ப பேசமாட்டேன். என்னுடைய அப்பா பல பரிமாணங்களில் பிரபலமாக இருந்தாலும் நான் வெளியே என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன்.
எனக்கு மீண்டும் நம்பிக்கை வந்தால் சினிமாவில் பாடுவேன் என மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,யின் மகள் பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மறக்க முடியாத எஸ்.பி.பி.,
தமிழ் சினிமாவில் தன்னுடைய குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப்போட்டவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். பாடகர் மட்டுமல்லாமல் நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் என பன்முக திறமைகளையும் கொண்டிருந்தார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு காலமானார். எஸ்.பி.பி., என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அவர் இன்று இவ்வுலகில் இல்லையென்றாலும் தினசரி அவரின் பாடல்கள் இல்லாமல் வாழ்க்கை கடக்காது.
இப்படியான நிலையில் எஸ்.பி.பி.,க்கு பல்லவி, சரண் என இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் எஸ்.பி.பி., சரண் சில படங்களில் நடித்துள்ளதோடு பல பாடல்களை பாடியுள்ளார். அதேசமயம் தயாரிப்பாளர், ரியாலிட்டி ஷோ நடுவர் என பல வகைகளில் ரசிகர்களிடம் நன்கு பரீட்சையமானார்.
பல்லவியின் பாடல்கள்
அதேசமயம் மகள் பல்லவி தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே பாடியுள்ளார். அதிலும் ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற ஹைரா ஹைரா மற்றும் காதலன் படத்தில் இடம்பெற்ற “காதலிக்கும் பெண்ணின்” பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமானது.
மேலும் உன்னை சரணடைந்தேன், பவித்ரா, மாப்பிள்ளை மனசு பூப்போல போன்ற படங்களில் பாடியுள்ளார். ஆனால் மருத்துவரான இவர் நீண்ட ஆண்டுகளாக அவர் எந்த பாடல்களும் பாடவில்லை. இந்நிலையில் தான் ஏன் பாடவில்லை என்பதை பல்லவி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பாடாததற்கு என்ன காரணம்?
அதில், “நாம் பொதுவாக யாரிடம் ரொம்ப பேசமாட்டேன். என்னுடைய அப்பா பல பரிமாணங்களில் பிரபலமாக இருந்தாலும் நான் வெளியே என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். எனக்கு வாய்ப்புகளும் பெரிதாக வரவில்லை. படிப்பு முடித்த பிறகு குடும்ப வாழ்க்கையில் இறங்கிய பிறகுகேமரா முன்னால் வருவதற்கு விருப்பமும் இல்லை. அவசியமும் வரவில்லை. நேர்காணல் கொடுக்க ஒப்புக்கொண்டபோது தம்பி சரண் கூட ஆச்சரியப்பட்டான் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
அப்பா என்னிடம் நிறைய கிளாசிக்கல் இசை கற்றுக் கொள்ள சொன்னார். ஆனால் எனக்கும் தம்பிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எஸ்.பி.பி.யின் பையன், பொண்ணு என்று சில வாய்ப்புகள் வந்தது. ஒரு சில காரணங்களுக்காக நான் பாடுவதை நிறுத்தி விட்டேன். குடும்பத்தினருடன் பிஸியாகி விட்டதால் அதனால் விருப்பம் போய்விட்டது. ஆனால் முறைப்படி பயிற்சி எடுக்காமல் மீண்டும் களமிறங்கினால் அது சரியாக இருக்காது. நான் நியாயமாக இருக்கிறேன் என்று சொல்வதை விட அப்பாவின் பெயரை கெடுக்காமல் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அந்த நேரத்தில் பாடியிருப்பதை கேட்டுட்டு அப்படியே போய் கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் ஒரு காலத்தில் பாடினேன். இப்போது இப்படி ஆயிடுச்சே என என்னைக்கு ஃபீல் பண்றதை நிப்பாட்டி விட்டு மீண்டும் ஒரு நம்பிக்கையோடு வெளியே வந்தால் நிச்சயம் பாடுவேன். குடும்பத்தினர், நண்பர்கள் என எல்லாருமே மீண்டும் பாட சொல்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.