குடியால் கெட்ட நடிகர்கள்...நடிகர் பாண்டியன் திரைவாழ்க்கை ஒரு குட்டி ஃபிளாஷ்பேக்
90 களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் பாண்டியன் தனது மதுப்பழக்கத்தாலும் தகாத சகவாசங்களாலும் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்தார்

நடிகர் ரோபோ சங்கர் , துள்ளுவதோ இளமை அபிநய் என இரு நடிகர்களை தமிழ் சினிமா அண்மையில் இழந்தது. இரு நடிகர்களுக்கு பொதுவாக இருந்த ஒரு பிரச்சனை என்றால் தீவிர மதுப்பழக்கம். இந்த இருவர் மட்டுமில்லை சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து போதைக்கு அடிமையாகி தங்களிடம் இருந்த எல்லாவற்றையும் இழந்தவர்கள் பலர் உள்ளனர். அந்த வரிசையில் தமிழ் சினிமா தவரவிட்ட ஒரு நட்சத்திரம் நடிகர் பாண்டியன்.
நடிகர் பாண்டியன்
தமிழ் சினிமாவின் 90களின் காலகட்டத்தில் முக்கிய ஹீரோவாக வலம் வந்தவர் பாண்டியன். கிராமத்து நாயகனாக மண் வாசனை படத்தில் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர், அடுத்தடுத்து மனைவி சொல்லே மந்திரம், வாழ்க்கை, புதுமைப்பெண், மண்சோறு, தலையணை மந்திரம், மருதாணி, ஆண்பாவம், முதல் வசந்தம், கிழக்குச் சீமையிலே என பெரிய பட்டியலே சென்றது. கதாநாயகன் என்றாலும் வில்லன் என்றாலும் என்னை மிஞ்ச யாரும் இல்லை என நடித்து அசத்தி வந்த இவர், 2008ம் ஆண்டு உயிரிழந்தார்.
தீவிர மதுப்பழக்கம்
அவர் உயிரிழக்கும் தருவாயில், உதவிக்காக எதிர்பார்த்ததாகவும், நண்பர்களாலே ஏமாற்றப்பட்டதாகவும் பல செய்திகள் பரவி வந்தது. இந்த நிலையில், இதுகுறித்து அவரது மகனிடம் யூடியூப் சேனல் ஒன்று பேட்டி எடுத்தது. அந்தப் பேட்டியில், "எங்க அப்பா நல்லா குடிப்பாரு. குடிக்கு அடிமையே ஆகிட்டாரு. அவரோட நண்பர்களும் அதே மாதிரி இருந்ததால எங்களால அவர கன்ட்ரோல் பண்ண முடியல. அப்பாட்ட இருந்த ஒரே மைனஸ் அவரோட குடி பழக்கம் தான். அது ஒன்னு மட்டும் இல்லைன்னா அவர கையலே பிடிக்க முடியாது. அவரு ரொம்ப வெகுளியான ஆளு. நம்மளுக்கு ஒரு தேவை இருக்குன்னா தான மத்தவங்கள தேடி போவாங்க. அப்படி அப்பாவ வச்சு நெறைய பேர் வாழ்ந்துட்டாங்க. அதே சமயம் அப்பாக்கு தேவையான சமயத்துல அவங்க எல்லாம் கை கொடுக்காமலும் போயிட்டாங்க. அப்பாக்கூட நல்லா பழகுற மாதிரி பழகி அப்பாவ கீழ இறக்கி அவங்க எல்லாம் பெரிய ஆளாகிட்டாங்க. இந்த மாதிரி ஆளுங்களால எங்க அப்பா மட்டும் இல்ல நெறைய பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க. எங்க அப்பாக்கு பணத்தோட அருமை தெரியல, யார எந்த இடத்துல வைக்கணும்ன்னும் தெரியல. இப்போ அப்பா காலத்துல இருந்த நடிகர்களுக்கு எல்லாம் பணத்தோட அருமை தெரிஞ்சது. சினிமா எப்படின்னு தெரிஞ்சது. அதுனால அவங்களால நிலைச்சு நிக்க முடிஞ்சது. ஆனா, அப்பாவுக்கு எடுத்து சொல்ல ஆள் இல்ல. அப்பா இறந்ததுக்கு அப்புறம் கொஞ்ச நாள் பெரியப்பா, கொஞ்ச நாள் பாட்டி எங்கள பாத்துகிட்டாங்க. அதுக்கு அப்புறம் எங்கள நாங்களே பாத்துக்க வேண்டிய கட்டாயம். நான் 25 கம்பெனி ஏறி இறங்கிருப்பேன். யாரும் எனக்கு உதவல. 2 பட வாய்ப்பும் வந்தது. ஆனா சரியான வழிகாட்டுதல் இல்லாததுனால அதுவும் கைய மீறி போயிடுச்சு. எனக்கு கடவுள் கொடுதேத வரம்ன்னா அது நானும் என் அப்பாவும் ஒரே மாதிரி இருக்குறது தான்." என்றார்.





















