Jananayagan: ஒன்னு, ரெண்டு இல்ல.. மொத்தம் 5 குரூப்.. ஜனநாயகன் படத்தை ரிலீஸ் செய்யும் நிறுவனங்கள்!
ஜனநாயகன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஃபைவ் ஸ்டார் சார்பில் செந்தில் வெளியிடுகிறார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தை தியேட்டரில் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் யார் என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஜய்யின் கடைசிப்படம்
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் “ஜனநாயகன்”. கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய அளவில் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பாபி தியோல், மமிதா பைஜூ, நரேன், பிரியா மணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி அரசியலில் குதித்துள்ள விஜய் சினிமா வாழ்க்கையில் இருந்து விலகுவதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி அவரின் கடைசிப் படமாக ஜனநாயகன் அமைந்துள்ளதால் ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் இந்த படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காண காத்திருக்கிறது. ஜனநாயகன் படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் மாத இறுதியில் மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் சென்று கொண்டிருக்கிறது.
தியேட்டர் ரிலீஸை தட்டித்தூக்கிய நிறுவனங்கள்
இந்த நிலையில் ஜனநாயகன் படத்தின் தியேட்டர் ரிலீஸ் உரிமை 5 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு மாவட்டங்கள், திருநெல்வேலி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் எஸ் பிக்சர் நிறுவனம் படத்தை ரிலீஸ் செய்கிறது. அதேபோல் மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பிரபல தயாரிப்பு நிறுவனம் ஃபைவ் ஸ்டார் சார்பில் செந்தில் வெளியிடுகிறார்.
சென்னை ஏரியாவை சினிமாக்காரன் நிறுவனமும், செங்கல்பட்டு ஏரியாவுக்கு டிரிடெண்ட் ஆர்ட் நிறுவனம் சார்பில் ஒயிட் நைட்ஸ் நிறுவனமும் வெளியிடுகிறார்கள். மேலும் கேரளாவின் திரையரங்க வெளியீட்டு உரிமையை எஸ்.எஸ்.ஆர். நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
Happy to announce our TN & Kerala distributors ❤️
— KVN Productions (@KvnProductions) December 11, 2025
Indha Pongal namakku blast-u blast-u 🧨#Thalapathy @actorvijay sir @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries #JanaNayagan#JanaNayaganPongal… pic.twitter.com/wig3nEMU1h
பலிக்குமா மேஜிக்!
இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விஜய்யின் கடைசி படம் என்பதால் அவரின் ரசிகர்கள் மிகுந்த உணர்வு ரீதியாக இப்படத்திற்கு தவம் கிடக்கிறார்கள். இப்படியான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசப்போவது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய்யை தவிர்த்து சினிமாவை இன்றைய இளம் வயதினர் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு தனக்கென தனி சாம்ராஜ்யம் அமைத்திருக்கிறார். அப்படிப்பட்ட மேஜிக் ஜனநாயகனில் பலிக்குமா என்பது ஜனவரி 9ம் தேதி தெரிந்து விடும்.





















