HBD Yuvan Shankar Raja: தன்னைத் தானே செதுக்கியவன் யுவன்...! பிறந்தநாள் கொண்டாடும் ரிப்பீட் மோட் நாயகன்!
ஹிட்டாகும் பாடல்களை கேட்கும்போது அந்த பாட்டின் விஷூவல் மனதில் வந்துபோகும். ஆனால், யுவன் பாடல்களை கேட்கும்போது “இந்த பாட்டு நமக்கே போட்ட மாதிரி இருக்கே” என்ற ஃபீல் கொடுப்பதுதான் யுவனின் ஸ்பெஷல்!
யுவன் – இந்த ஹீரோவுக்கு, இந்த டைரக்டருக்குதான் இசையமைத்திருப்பார் என வகைப்படுத்த முடியாதபடி அனைவருக்கும் இசையமைத்திருப்பார், இசையமைத்து கொண்டிருக்கிறார் யுவன். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படங்கள் இன்றி நிறைய அறிமுக படக்குழுவுக்கு இசையமைத்திருப்பதால்தான் என்னவோ, நிறைய பாடல்களுக்கு அவரே அடையாளமுமாய் மாறிப்போகிறார். பெரும்பாலும் ஹிட்டாகும் பாடல்களை கேட்கும்போது அந்த பாட்டின் விஷூவல் மனதில் வந்துபோகும். ஆனால், யுவன் பாடல்களை கேட்கும்போது “இந்த பாட்டு நமக்கே போட்ட மாதிரி இருக்கே” என்ற ஃபீல் கொடுப்பதுதான் யுவனின் ஸ்பெஷல்!
ஸ்மார்ட்போன் காலத்துக்கு முன்னதாக யுவன் இசையமைத்த பாடல்கள்தான் இப்போது ஸ்மார்ட்போன் ப்ளேலிஸ்ட்களில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றன. கேட்ட பாடல்களையே திரும்ப திரும்ப கேட்டும் சலிக்காத யுவன் பாடல்களின் லிஸ்ட் பெரிது. அந்த பாடல்களை யுவனே பாடியிருந்தால், இன்னும் ஸ்பெஷல். வாழ்க்கை உறவுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும் தனித்தனியே ப்ளேலிஸ்ட் போடும் அளவிற்கு யுவனிடம் ஸ்டாக் உள்ளது
டிரெண்டியான ட்யூன், 3 நிமிடங்களுக்கும் குறைவான ‘ஷார்ட் பாடல்களை’ கேட்டு கேட்டு நமக்கு இப்போது பழகிவிட்டது. ஆனால், 5 நிமிடங்களுக்கு மிகாத ஒரு முழுமையான பாடலை தருவதே அந்த காலத்து இசையமைப்பாளர்களின் ஸ்டைலாக இருந்தது. அதை யுவன் சிறப்பாகவே கையாண்டிருப்பார்! எந்த ஒரு ஃபீலாக இருந்தாலும், அதே ஃபீலை பாட்டின் கடைசி வரை கடத்திடுவார் யுவன். ஆனால், சோகமாக இருப்பவர்கள் மட்டும் யுவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். வலியோடு கேட்கும் யுவன் பாடல்கள், மனதின் ஆழம் சென்று கண்ணீரைத் தூண்டிவிடும். ஆனால், அதே பாடல்கள் உங்களை ஆசுவாசப்படுத்தவும் துணை நிற்கும். சோகப் பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கும்போதே யுவன் நம்மை கொஞ்சம் சிரிக்கவும் வைப்பார். நினைவுகளை அசைப்போட வைப்பார். துன்பத்திலும் ஓர் இன்பத்தை தனது இசையில் புதைத்திருப்பார் யுவன்.
யுவன், இப்போது இசையமைத்து வரும் பாடல்களைவிட பழைய பாடல்கள்தான் யுவனின் பொக்கிஷங்கள்! தீனா, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, பட்டியல், தீபாவளி, சிவா மனசுல சக்தி, பில்லா, சர்வம், கழுகு, மங்காத்தா, மற்றும் பல ஆல்பங்கள்தான் 90ஸ் கிட்ஸ்களையும் தாண்டி, 2கே கிட்ஸ்களின் ப்ளேலிஸ்டில் குடி கொண்டிருக்கின்றது.
யுவன் இசையில் வந்த இந்த லிஸ்டில் ரிப்பீட் மோட் பாடல்கள் ஏராளம். அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்களில் ‘ஸ்கிப்’ செய்ய வைக்கும் பாடல்கள் மிகக் குறைவு. பாடலின் முதல் 20 நொடிகளாவது கேட்க வைத்திடுவார் யுவன். ஏனென்றால், யுவனின் பாடல்கள் நேரடியாக மனதை அட்டாக் செய்யும் ரகம். ஒரு பாடல் வந்தது, ஹிட்டானது, போனது என்ற ரகத்தில் இல்லாமல், காலத்துக்குமான பாடல்களை தந்து கொண்டிருப்பதற்கு நன்றி யுவன்!
HBD Yuvanshankar Raja | `தனிமை.. தனிமை.. தனிமை இன்றி வேறெதுவும் இல்லை’ - மீட்பர் யுவன்!