காஷ்மீர் ஃபைல்ஸை தொடர்ந்து ’வேக்சின் வார்’ ... அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட விவேக் அக்னிஹோத்ரி!
’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ என்ற இந்த ஒரே படத்தின் மூலம் சர்ச்சையைக் கிளப்பி கவனமீர்த்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
'காஷ்மீர் ஃபைல்ஸ்' இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரியின் அடுத்த படத்துக்கு ‘தி வேக்சின் வார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய படம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய இப்படம், காஷ்மீரில் இருந்து 1990ஆம் ஆண்டு பண்டிதர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட நிலையில், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மிகைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்றும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் குவிந்தன.
அதே சமயம் இப்படம் பிரதமர் நரேந்திர மோடி உள்பட பாஜகவினர் பலரது பாராட்டுகளைப் பெற்றது. மேலும், பாஜக ஆளும் சில மாநிலங்களில் இப்படத்துக்க்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இந்த ஆண்டு வெளியான பாலிவுட் படங்கள் பெரும்பாலும் படுதோல்வியை சந்தித்த நிலையில், சர்ச்சைகளைத் தாண்டி இப்படம் நாடு முழுவதும் 340 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது.
இந்நிலையில், காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்த ஒரே படத்தின் மூலம் சர்ச்சைகளைக் கிளப்பி கவனமீர்த்த இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.
‘தி வேக்சின் வார்’ என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 11 மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து விவேக் அக்னிஹோத்ரி, அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று படம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram
கொரோனா காலக்கட்டத்தில் இந்தியா கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்க போராடிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.