Thug Life: மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ஒத்திவைக்கப்பட்ட தக்ஃலைப் ரிலீஸ்
கன்னட மொழி சர்ச்சை காரணமாக கர்நாடகாவில் தக்ஃலைப் படத்தை வெளியிடுவதை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் - சிம்பு நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தக்ஃலைப். இந்த படம் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம் என்று கூறியதற்கு கன்னட அமைப்புகள் கடும் சர்ச்சையை தெரிவித்து வருகின்றனர்.
ஒத்திவைக்கப்பட்ட தக்ஃலைப்:
இந்த விவகாரத்தில் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து தக்ஃலைப் படத்தை வெளியிட தடைவிதிக்கப்பட்டது. மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில், கர்நாடகாவில் தக்ஃலைப் படம் வெளியிடுவது ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கேட்க மறுக்கும் கமல்ஹாசன்:
இந்த விவகாரத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும், கமல்ஹாசனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கர்நாடகாவில் தக்ஃலைப் படத்தை வெளியிட தடை விதித்து அந்த மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது. மன்னிப்பு கேட்டால்தான் படத்தை வெளியிட முடியும் என்று அந்த மாநில கன்னட அமைப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தான் பேசியதை தவறாக புரிந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று கமல்ஹாசன் திட்டவட்டமாக அறிவித்தார்.
தக்ஃலைப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிடுமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.
கமலுக்கு என்ன ஈகோ?
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கமல்ஹாசனின் கடிதம் திருப்திகரமாக இருப்பதாகவும், அதேசமயம் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதில் அவருக்கு என்ன ஈகோ? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், படத்தை ஒத்திவைப்பதாக படக்குழு அறிவித்த நிலையில் இந்த வழக்கையும் ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கமல்ஹாசனுக்கு ஒன்றும் தெரியாது எனவும், கன்னடம் நீண்ட பாரம்பரியம் கொண்டது எனவும் தெரிவித்திருந்தார். காவிரி விவகாரத்தில் பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவிற்கும் பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் இப்போது இந்த விவகாரமும் அங்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நட்சத்திர பட்டாளங்கள்:
மணிரத்னம் இயக்கியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக த்ரிஷா, அபிராமி நடித்துள்ளனர். சிம்பு கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக நடித்துள்ளார். நாசர், அசோக்செல்வன், வடிவுக்கரசி, ஜோஜி ஜார்ஜ் என பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் 32 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.





















