AK 62: பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் லைகா..! ஏகே 62 ப்ரமோஷனில் அஜித்தை பங்கேற்க வைக்குமா..? ப்ளான் என்ன?
லைகா நிறுவனம் தயாரிப்பில் முதன்முறையாக அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தின் ப்ரமோஷன் உள்ளிட்ட பணிகளில் அஜித்தை பங்கேற்க வைக்க லைகா நிறுவனம் முயற்சிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். துணிவு படத்திற்கு பிறகு இவர் தற்போது ஏகே 62 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என்று அறிவிப்புகள் வெளியாகிய நிலையில், பல்வேறு காரணங்களால் விக்னேஷ்சிவன் மாற்றப்பட்டார்.
தற்போது அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியது. படத்திற்கான பூஜையும் நடைபெற்றுவிட்டதாக தகவல்கள் வெளியானாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாவில்லை.
லைகா நிறுவனம்:
லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் முதன்முறையாக நடிக்க உள்ள ஏகே 62 படம் தொடங்கியது முதலே பல்வேறு சிக்கல்களும், திருப்பங்களும் அரங்கேறி வருகிறது. லைகா நிறுவனமானது தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் நிறுவனமாக உலா வருகிறது. 2014ம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான லைகா நிறுவனம் தங்களது முதல் படத்தையே விஜய் நடிப்பில் தயாரித்தது. அவர்களது தயாரிப்பில் உருவான கத்தி படம் மாபெரும் வசூலை குவித்தது.
கத்தி மட்டுமின்றி தெலுங்கில் கைதி நம்பர் 150, செக்க செவந்த வானம், வடசென்னை, எந்திரன் 2.0, காப்பான், தர்பார், பொன்னியின் செல்வன், என்று பல பிரம்மாண்ட படங்களை தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் பார்ட் 2, லால் சலாம். இந்தியன் 2, ரஜினிகாந்த் 168 ஆகிய பிரம்மாண்ட படங்களையும் தயாரித்துள்ளது. தமிழ் திரையுலகம் சமீபகாலமாக படங்களின் ப்ரமோஷன் பணிகளுக்காக கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகின்றன.
ஏகே 62:
மேலே கூறப்பட்டுள்ள லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளியான அனைத்து படங்களின் ஆடியோ லாஞ்ச் விழா உள்பட பல்வேறு ப்ரமோஷன் பணிகளையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக நடத்தியது. இந்த நிலையில், பிரம்மாண்ட படத்தயாரிப்பிலும், அதை பிரம்மாண்டமாக ப்ரமோஷன் செய்வதிலும் கில்லாடியாக திகழும் லைகா நிறுவனத்துடன் முதன்முறையாக கைகோர்த்திருக்கும் அஜித், லைகா நிறுவனத்தின் சார்பிலான ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பாரா? அல்லது அஜித்திற்கு ஏற்ப லைகா நிறுவனம் வளைந்து கொடுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
வலிமை படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற சூழ்நிலையில், துணிவு படத்தை தயாரிப்பு நிறுவனம் நன்றாகவே ப்ரமோஷன் செய்தது. அஜித் நேரடியாக பட ப்ரமோஷன்களில் பங்கேற்காவிட்டாலும், துணிவு படத்தை தயாரிப்பு நிறுவனமான ஜீ ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாகவே விளம்பரப்படுத்தியது. இதனால், ஏகே 62 படத்தையும் அதே பாணியில் லைகா நிறுவனம் விளம்பரப்படுத்தும் என்றே எதிர்பார்க்கலாம்.
ப்ரமோஷனுக்கு வருவாரா அஜித்?
மேலே குறிப்பிட்ட லைகா நிறுவனத்தின் தயாரிப்பு படங்கள் அனைத்தின் இசை வெளியீட்டு விழாவுமே மிகவும் பிரம்மாண்டமாக அரங்கேறியது நாம் அனைவரும் அறிந்தது. ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக உள்ள நிலையில், இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் அஜித் இல்லாமலே அரங்கேறுமா? அல்லது துணிவு படத்தை போலவே இதற்கு முன்பு வெளியான அஜித் படங்களை போல ஒவ்வொரு பாடலாக வெளியிட்டு முடித்துக் கொள்வார்களா? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
ரசிகர்களுடனான சந்திப்பு, பொதுவெளியில் வருவதை தவிர்த்து வருவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த அஜித் சமீபகாலமாகவே இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ரசிகர்களை அவ்வப்போது சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். மேலும், வெளிநாடுகளில் அவரது பயண புகைப்படங்களும் அவ்வப்போது வெளியாகியும் வருகிறது. இந்த மாற்றங்கள் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த காரணங்களால், துணிவு படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் பங்கேற்கிறார் என்று தகவல்கள் வெளியானது. ஆனால், அதுபோன்று ஏதும் நிகழவில்லை.
இருப்பினும், ஏகே 62 படத்தின் ப்ரமோஷன் பணிக்காக அஜித்தை லைகா நிறுவனம் இசைவெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக அணுகலாம் என்றும் எதிர்பார்க்கலாம். ஆனால், அஜித் அதுபோன்ற நிகழ்வுகளில் பங்கேற்க பெரும்பாலும் வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.