Cannes Film Festival: இந்தியா சார்பாக கான் திரைப்பட விழாவில் தேர்வான லைவ் ஆக்ஷன் வீடியோ கேம்!
நடந்து முடிந்த கான் திரைப்பட விழாவில் பாயல் கபாடியாவின் படம் தேர்வாகி கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றது. இதே விழாவிற்கு இந்தியா சார்பாக இருவம் என்கிற லைவ் ஆக்ஷன் வீடியோ கேம் தேர்வானது.
கான் திரைப்பட விழா 2024
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கான் திரைப்பட விழா கடந்த மே 14 முதல் 25 ஆம் தேதி நடைபெற்றது. உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு மொழிப் படங்கள் இந்த விழாவில் திரையிடப் பட்டன. இதில் இந்தியா சார்பாக பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' திரைப்படம் இந்த விழாவின் இரண்டாம் உயரிய விருதான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றது. மேலும் சிறந்த நடிகைக்கான விருதை இந்தியாவைச் சேர்ந்த அனாசுயா செங்குப்தா வென்றார். விருதை வென்று தாய் நாடு திரும்பிய இந்த கலைஞர்களை திரைப் பிரபலங்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை வாழ்த்தி வரவேற்றார்கள்.
ஊடக கவனம் முழுவதும் இந்த பிரபலங்களின் மேல் குவிந்திருந்த அதே நேரத்தில் இந்தியாவில் உருவாக்கப் பட்ட லைவ் ஆக்ஷன் வீடியோ கேம் ஒன்றும் கான் திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப் பட்டது. இந்த வீடியோ கேம் உருவாக்கத்திற்கு பின் இருந்து கடுமையாக உழைத்தவர்கள் பெரும்பாலானவர்கல் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இருவம் லைவ் ஆக்ஷன் வீடியோ கேம்
கான் திரைப்பட விழாவின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப் பட்டிருக்கும் ஒரு பிரிவு ‘Let’s Spook Cannes’ . கேமிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பரிந்துரைக்கப்படும் பல்வேறு வீடியோ கேம்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து காட்சிப்படுத்துவது. உலகின் கடைக்கோடிகளில் இருக்கும் கிரியேட்டர்ஸ் தங்களது வீடியோ கேம் ஐடியாக்களை சர்வதேச நிறுவனகளின் முன் தங்கள் படைப்புகளை விளம்பரப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப் பட்டுள்ளது அந்த வகையில் இந்த ஆண்டு ‘ஹாலோ ப்ளவர்ஸ் , கோஸ்ட்லெஸ் , டார்க் ஹவர்ஸ் , இருவம் உள்ளிட்ட நான்கு படைப்புகள் தேர்வுசெய்யப் பட்டன. இந்திய சினிமா மற்றும் கேமிங்கிற்கான ஒரு முக்கியமான சாதனையாக, மன்மார் கேம்ஸின் புதுமையான 'இருவம்' திரைப்படம், மதிப்புமிக்க கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டது.
விளையாட்டு அல்லது சினிமா என்ற குறுகிய அளவில் நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் சினிமாவிற்குள் பங்கெடுக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ள “இருவம்” இந்தியாவின் முதல் FMV (Full Motion Videos) கேம் .அதாவது ‘இருவம்’ படைப்பில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்களின் முடிவுகளை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். அம்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் திரையில் பிரதிபலிக்கும். இக்கதையின் முடிவைத் தீர்மானிக்கப் போவதும் அவர்கள் தான். ஆக இதில் பார்வையாளர்களும் படைப்பாளிகள். இந்த புதுவித அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படைப்பு உருவாகியிருக்கிறது.
இருவம் படக்குழுவினர்
கெட் ஹேப்பி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கிய மனோஜ் அண்ணாதுரை இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இருவம்’ கேமில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொழிலன், கார்த்திக் ஜீவானந்தம் மற்றும் மனு மித்ரா ஆகியோரைக் கொண்ட மன்மார் குழு இந்த புதுமையான படத்தை உயிர்ப்பிக்க அயராது உழைத்திருக்கின்றனர். அர்ஜுன் வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்க, இளையராஜா. எஸ் படத்தொகுப்பாளராகப் பணியாற்றியுள்ளார். திமோதி மதுகர் படத்திற்கு இசையமைத்துள்ளார்.