Indian 2 Audio Launch: இந்தியன் என்பதே அடையாளம், பிரிக்க நினைச்சா.. இந்தியன் 2 விழாவில் கமல்ஹாசன் வார்னிங்!
Indian 2 Audio Launch LIVE Updates: 1996ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளிவந்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது.

Background
28 ஆண்டுகளுக்குப் பின் இந்தியன் தாத்தா ரிட்டர்ன்ஸ்
ஊழலையும் அதனால் நடக்கும் குற்றங்களையும் மையப்படுத்தி பிரமாண்டமாக எடுக்கப்பட்ட படம் இந்தியன். ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, சுகன்யா, ஊர்மிளா, கஸ்தூரி, நெடுமுடி வேணு, செந்தில், கவுண்டமணி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இந்தப் படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. அந்தக் காலத்தில் இருக்கும் உயர் தொழில்நுட்பங்களுடன் வெளியாகி படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
துள்ளலான அக்காடனு நாங்க பாடல், காதலருடன் டூயட் பாட மாயா மச்சிந்திரா, டெலிபோன் மணி போல் ஆகிய இரு பாடல்கள், குடும்பங்கள் கொண்டாடும் பச்சைக் கிளிகள் தோளோடு பாடல், சுதந்திர உணர்வைத் தரும் கப்பலேரி போயாச்சு பாடல் என ஏ.ஆர்.ரஹ்மானின் மொத்த ஆல்பமும் ஹிட்தான். இசை மட்டும் அல்ல பின்னணி இசையிலும் பின்னிப் பெடலெடுத்துவிட்டார்.
பிரமாண்ட இசை வெளியீட்டு விழா
இத்தனை ஆண்டுகள் கழித்தும் சேனாபதியான இந்தியன் தாத்தாவிற்கு மவுசு குறையாமல் இருக்க, அவரின் கம்-பேக் செய்தி திரை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்தியன் 2 குறித்த அறிவிப்பு 2018ஆம் ஆண்டு வெளியாகி பல்வேறு தடங்கல்கள், இடையூறுகளைக் கடந்து இந்த ஆண்டு வெளியாகிறது. உலக நாயகன் கமல் ஹாசனுடன் இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
திரையில் மீண்டும் அதே பிரமாண்டத்தை கொண்டு வர, படக்குழு உலகெங்கும் சுற்றி சுற்றி ஷூட் செய்துள்ளனர். படப்பிடிப்பிலும், படம் ரிலீஸ் தேதி அறிவிப்பிலும் ஒரு சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், ஒரு வழியாக படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கமல் - அனிருத் - ஷங்கர் கூட்டணி
இதனையொட்டி, படத்தை ப்ரோமோஷன் செய்யும் வகையில் ஜூன் 1ஆம் தேதியான இன்று இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்துள்ள அனிருத், ஏற்கெனவே இப்படத்திற்கான ட்ராக் லிஸ்டை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். பாரா, காலண்டர் சாங், நீலோற்பம், ஜகாஜகா, கம்பேக் இந்தியன், கதரல்ஸ் உள்ளிட்ட 6 பாடல்களை உள்ளடக்கிய ஆல்பம் யூடியூப் பக்கத்தில் இன்று மதியம் 3 மணிக்கு வெளியாகிவிட்டது.
இன்று ஆறு மணியளவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதில், படக்குழுவினருடன் மோகன் லால், மம்மூட்டி, சிவராஜ் குமார், சிரஞ்சீவி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்களை சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளனர். கோலிவுட் வட்டாரத்தில் இருந்து சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த விழாவுக்கு வருகை தரவுள்ளனர் என சொல்லப்படுகிறது.
Indian 2 Audio Launch LIVE: கமலிடம் அழுது அடம்பிடித்து சத்தியம் வாங்கிய டி.ஆர்!
"நான் ஒருமுறை நடிக்க மாட்டேன் என்று சொன்னபோது டி.ஆர் சார் என் ரூமுக்கு வந்து “இனிமேல் நடிக்க மாட்டேன் என்று சொல்லக்கூடாது” என்று அழுது என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு போனார்” என சுவாரஸ்யத் தகவல் பகிர்ந்துள்ளார்.
Indian 2 Audio Launch LIVE: கடவுள் இல்லாம இருந்திடலாம்...உலகநாயகன் கமல் பேசிய தத்துவம்!
கடவுளைப் பற்றி கமல் பேசாத மேடை உண்டா? இந்தியன் 2 ஆடியோ லாஞ்சில் பேசிய கமலின் ஃபிலாசஃபி இதுதான் "என்னைப் போன்ற பகுத்தறிவாளிகள் கடவுள் இல்லாமல் இருந்திடலாம், ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்பே சிவமில் அன்பு தான் முதன்மை" எனக் கூறியுள்ளார்.





















