Ilaiyaraaja: இளையராஜா பாடலாசிரியர்களுக்கு மரியாதை தருவதில்லை.. எழுத்தாளர் ஜெயமோகன் கருத்து!
Jeyamohan on Ilaiyaraaja: இசையமைப்பாளர் இளையராஜா தனக்கு கடவுள் மாதிரி, ஆனால் அவர் பாடலாசிரியர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என்று எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ளார்.
இளையராஜா
சமீப காலங்களில் இசையமைப்பாளர் இளையராஜா (Ilaiyaraaja) பற்றிய தொடர் சர்ச்சைகள் பேசுபொருளாகி வருகின்றன. தான் இசையமைத்த பாடல்களுக்கான மொத்த உரிமையும் தனக்கே சொந்தம் என அவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததைத் தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. இந்த வழக்கு வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் இறுதி தீர்ப்புக்கு காத்திருக்கும் நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் அனுமதியில்லாமல் தான் இசையமைத்த பாடலை பயன்படுத்தியதற்காக அப்படத்தின் தயாரிப்பாளரிடம் இழப்பீடு கேட்டுள்ளார். இளையராஜா. ஆனால் குணா படத்தின் கண்மணி அன்போடு பாடலுக்கு அப்படத்தின் தயாரிப்பாளரிடம் உரிய முறையில் அனுமதி பெற்றபின்பே அதைப் பயன்படுத்தியதாக படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். இப்படியான தொடர் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்க இளையராஜா பற்றிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன்.
எம்.எஸ்.வி கண்ணதாசன் காம்போ தான் பெஸ்ட்
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்த ஜெயமோகன், தமிழ் திரைப்படங்களில் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ்.வி கூட்டணியைப் பற்றி சிலாகித்து பேசினார். ” எம்.எஸ்.விஸ்வநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் இடையில் இருந்த அந்த சரியான புரிதல் அவர்களுடைய காலக் கட்டத்திற்கு பின்பு எந்த இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியருக்கும் இருந்ததே இல்லை. நான் பாடல்கள் உருவாவதை பார்த்திருக்கிறேன். எல்லா இடங்களிலும் இசையமைப்பாளர் ஒரு பீடத்தில் அமர்ந்திருக்கக் கூடிய ஆளாகவும் அவருக்கு பணிவிடை செய்யக் கூடிய ஒருவராக பாடலாசிரியர் இன்று இருக்கிறார்கள்.
பாடலாசிரியரும் ஒரு கலைஞர் என்பதை இசையமைப்பாளர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. பாடலாசிரியர்கள் இளையராஜாவிடம் அப்படி உட்கார்ந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். இளையராஜா எனக்கு கடவுள் மாதிரி. எனக்கு அவர்மேல் பெரிய மரியாதை உண்டு. ஆனால் பாடலாசிரியர்களுக்கு அவர் உரிய மரியாதை கொடுப்பது இல்லை. அவருடைய பெரும்பாலான பாடல்களை நான் கேட்க மாட்டேன். இளையராஜாவின் பாட்டை வயலினில் இசையில் வாசித்தால் கேட்பேன்.
எம்.எஸ்.வி பேசும்போது கண்ணதாசன் பற்றி எவ்வளவு மரியாதையாக பேசியிருக்கிறார். தன்னுடைய இணை என்று அவர் கண்ணதாசனை குறிப்பிடுகிறார். கண்ணதாசன் ஒரு வரி எழுதினால் அந்த வரியினுடைய எல்லா அழகும் தெரிய வேண்டும் என்பதற்கான தன்னுடைய இசையில் ஒரு அழுத்தத்தைக் கொடுக்கிறார். எம்.எஸ்.வி எப்போதுமே லிரிக்ஸ் நோக்கிச் செல்லும் ஒரு இசையமைப்பாளராக இருக்கிறார். இந்தக் கனவு எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு யாரிடமும் கிடையாது. கண்ணதாசனுடைய பொற்காலத்துடன் அது முடிந்து விட்டது என்று நான் சொல்வேன்” என்று ஜெயமோகன் கூறியுள்ளார்.