Vijay Sethupathi : ”குடியை கொண்டாடாதீங்க.. நானும் குடிப்பேன்..ஆனா” : மாணவர்களுக்கு விஜய் சேதுபதி சொன்ன அட்வைஸ்..
தலை என கூறியதை கேட்டு அஜித் ரசிகர்கள் கத்தினர். இதனைக்கண்ட விஜய் சேதுபதி, "தேவையில்லாம கத்தாதீங்க... நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க” என சற்று கோபமாக கேட்டார்.
நடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் எல்லா வகையான கதாபாத்திரங்களிலும் நடித்து வில்லன், ஹீரோ, குணச்சித்திர கதாபாத்திரம் என்று எதை செய்தாலும் மக்கள் மனதில் பதிந்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் சமந்தா, நயன்தாரா இணைந்து நடித்த ”காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அதுமட்டுமின்றி வில்லனாக விக்ரம் திரைப்படத்தில் நடித்த திரைப்படமும் பெரும் வரவேற்பை பெற்றது. இவர் ரஜினி, விஜய், கமல் ஆகியோருக்கு வில்லனாக நடித்து எல்லா கதாபாத்திரங்களிலும் தன்னால் முடிந்த வித்தியாசங்களை காண்பித்து இருந்தார். இவரை படங்களில் ரசிப்பதுபோலவே பலர் மேடைகளிலும் ரசிக்கிறார்கள். அவரது யதார்த்த பேச்சு எல்லோரிடமும் நல்ல வரவேற்பை பெரும்.
மாணவர்களுக்கு அறிவுரை
அவர் மைக்கை பிடித்தாலே வீடியோக்கள் வைரலாகும். அதேபோல சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, மாணவர்களிடையே உரையாற்றினார். ”யார் மீது கோபம் வந்தாலும் வெளிக்காட்டாதீர்கள், நிறைய டைம் இருக்கு… இன்னைக்கு என்னோடு சண்டை போட்டவனை கல்லூரி முடித்த பின்னர் சந்திக்கும்போது, அவன் எனக்கு நண்பனா இருக்கான், எல்லாத்துக்கும் டைம் கொடுங்க… உடனே எதிர்வினையாற்ற வேண்டாம்” என்று பேசிய அவர், ”நாம் உடல்ரீதியாக வளர்வதனால் மட்டுமே, பெரிய ஆள் என நினைக்காதீர்கள்” என்றார்.
'தல' என சொன்னதற்கு கத்திய மாணவர்கள்
இவ்வாறு மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் பேசிய விஜய் சேதுபதி, இறுதியாக “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்கிற திருக்குறளை கூறினார். இதில் கடைசியாக அவர் தலை என கூறியதை கேட்டு அங்கிருந்த அஜித் ரசிகர்கள் கத்தி கூச்சல் போட்டனர். இதனைக்கண்ட விஜய் சேதுபதி, "தேவையில்லாம கத்தாதீங்க... நாம என்ன பேசிக்கிட்டு இருக்கோம், நீங்க என்ன செஞ்சிட்டு இருக்கீங்க” என சற்று கோபமாக கேட்டார்.
குடிப்பது குறித்த அட்வைஸ்
லயோலா கல்லூரியுடனான உறவை பற்றி சொல்லும்போது, ”நான் குறைந்த மார்க் வாங்கியபோதும் இந்த கல்லூரிக்கு அப்ளிகேஷன் கொடுத்திருந்தேன். அது கிடைக்காது என்று தெரிந்தும் ஏன் 50 ரூபா வேஸ்ட் பண்ணன்னு கேள்வி கேட்கப்பட்டு நான் அடிவாங்கியிருக்கேன்” என்றார்.
இதனிடையே, இரவு 10 மணி இருக்கும் என் அப்பா சரக்கடித்திருந்தார் என்று கூறியபோது கூடி இருந்த மாணவர்கள் கத்தினர். அப்போது கதை சொல்வதை நிறுத்திவிட்டு, "குடிப்பதை மிகைப்படுத்தாதீர்கள், அதை அப்படி பழக்கிட்டாங்க, கெட்ட பழக்கம் அது, அதுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. அது பெரிய ஸ்டைல் ஸ்டேட்மெண்ட் ஆகிடுச்சு, அதையும் பேசணும், பேசுறதுனால நான் குடிக்கமாட்டேன்னு இல்ல, நானும் குடிப்பேன், ஆனா அதுல பெருமையும் இல்ல, இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களுடைய நேரங்களை திருடுவதற்கு ரெடியா இருக்கு. உங்கள் நேரத்தை எந்த வகையில் திருடலாம், உங்க மூளையை செயல்படவிடாமல் செய்வது எப்படி என யோசித்துக் கொண்டே இருக்கிறது. சமூக வலைதளங்கள் வாயிலாக சண்டை போடலாம், அசிங்கமா பேசிக்கலாம்னு உங்களுக்கு சுதந்திரம் கொடுத்த மாதிரி நடிக்கிறாங்க, அத நம்பீடாதீங்க", என்றார்.