Parasakthi: பராசக்தியை சீண்ட ஆளில்லை.. முதல் நாளே காத்து வாங்கும் தியேட்டர்கள்.. என்னாச்சு?
தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மந்தமான கதியில் நடைபெற்று வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கே டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெற்று வருவது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொங்கலுக்கு களம் கண்ட பராசக்தி
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது “பராசக்தி”. டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா முரளி, ரவி மோகன், ஸ்ரீலீலா, சேத்தன், பைசல் ஜோசப் என பலரும் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் 100வது படமாக இந்த படம் அமைந்துள்ளது. இப்படியான பல சிறப்புகளை கொண்ட பராசக்தி படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை இன்பன் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
முதலில் பராசக்தி படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப வியாபாரமும் செய்யப்பட்டது. ஆனால் பொங்கலுக்கு நீண்ட கால விடுமுறை இருப்பதால் வசூல் பாதிக்கப்படலாம் என கருதி முன்கூட்டியே விடுதலை செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு தியேட்டர்கள் நிர்வாகம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு ஜனவரி 10ம் தேதிக்கு ரிலீஸ் மாற்றப்பட்டது.
25 இடங்களில் சென்சார் கட்
இந்த நிலையில் பராசக்தி படம் தணிக்கை சான்றிதழ் பெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட இந்த படத்தில் மத்திய அரசை விமர்சித்தும், இந்தி மொழிக்கு எதிராகவும் வசனங்கள் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் 25 இடங்களில் வசனத்தை மாற்றியும், மியூட் கொடுத்தும் தணிக்கை வாரியம் பரிந்துரை செய்து இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
இதனால் மிகப்பெரிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. எனினும் திட்டமிட்டபடி படம் இன்று வெளியாகியுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கிய நிலையில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டுமே பராசக்தி எடுக்கப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் இந்த படம் தமிழ்நாட்டில் முதல் நாள் காட்சிக்கே தியேட்டர்களில் முன்பதிவு மிகவும் மந்தமான கதியில் நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயனின் 25வது படம் என்ற சிறப்பு இருந்த போதிலும், படத்திற்கு தணிக்கைத் துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது என பரபரப்பாக பேசப்பட்டாலும் டிக்கெட் விற்பனை மெதுவாக செல்கிறது. தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு மொழிகளிலும் படத்தைப் பார்க்க பெரிய அளவில் ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதே டிக்கெட் விற்பனை மந்தமாக நடைபெறுவது காட்டுவதாக இணையவாசிகள் தெரிவித்துள்ளனர். மும்பையில் இன்று முதல் நாளுக்கான காட்சிகளில் ஒரு தியேட்டருக்கு மினிமம் டிக்கெட் கூட புக் ஆகவில்லை.
பொங்கல் விடுமுறை ஜனவரி 13ம் தேதி தான் தொடங்கும் என்பதால் அதன்பின்னரே படத்தின் வசூல் அதிகரிக்கும் என தியேட்டர் ஓனர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.





















