Hombale films: ‘ 3000 கோடியை முதலீடு செய்கிறேன்’.. மெகா ப்ளானில் கே.ஜி.எஃப் தயாரிப்பாளர்.. முழு விபரம் உள்ளே!
இதுவரை பல படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், அதனுடைய அடுத்த திட்டம் குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திரைப்படத்துறையில் மூவாயிரம் கோடி பணத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் முதலீடு செய்யவுள்ளது.
‘கேஜிஎஃப் 1’, ‘கே ஜி எஃப் 2’, ‘காந்தாரா’ போன்ற பிரமாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய தயாரிப்பு நிறுவனமாக அவதாரம் எடுத்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் சார்பில், அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
“ ஹோம்பலே ஃபிலிம்ஸ் சார்பாக, எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எங்கள் மீது அசைக்க முடியாத அன்பையும், ஆதரவையும் பொழியும் உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.
கடந்த ஆண்டு எங்களுக்கு சிறந்த ஆண்டாகவும், நிறைவானதாகவும் இருந்தது- இது உங்கள் அன்பு மற்றும் ஆதரவினால் மட்டுமே சாத்தியமானது. அதற்காக மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் இந்த நட்புறவு தொடரும் என்றும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலக்குகளை எட்டுவோம் என்றும் நம்புகிறேன்.
சினிமா, வலிமையான பொழுதுபோக்கு ஊடகம் என்பது பழங்காலத்திலிருந்தே உள்ளது, அது அனைவராலும் பார்க்கப்பட்டு உணர்ந்து பாராட்டப்பட்டது; நேர்நிலையாகவோ அல்லது எதிர்நிலையாகவோ அதிர்வை ஏற்படுத்தியிருந்தாலும், அது நிம்மதி மற்றும் மகிழ்ச்சியின் மிகப்பெரிய ஊடகமாக இருந்து வருகிறது. இது நமது கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் வலுவான சாட்சியாக இருந்து வருகிறது, இதன் மூலம் நமது அடையாளத்தை உலகிற்கு பெரிய அளவில் வெளிப்படுத்தி வருகிறோம்.
பன்முகத்தன்மை கொண்ட நம் இந்தியாவிலுள்ள இளைஞர்களிடம் இருக்கும் பரந்த திறனை வெளிக்கொணர ஒரு வாய்ப்பை நமக்கு வழங்குகிறது. இந்த புதிய ஆண்டை நாங்கள் தொடங்கும்போது, நீடித்த நினைவாற்றலைக் கொண்டிருக்கக்கூடிய மற்றும் உங்கள் மீது அழியாத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆழ்ந்த அனுபவத்துடன், அழுத்தமான உள்ளடக்கத்தை தயாரிக்கவிருப்பதாக உறுதியளிக்கிறோம்.
இந்த ஆர்வத்தை மனதில் கொண்டு, எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வோம் என்று உறுதியளிக்கிறோம்; அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!” என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
யார் இந்த ஹோம்பாலே பிலிம்ஸ்?
2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் பல படங்களை தயாரித்த போதும், கே.ஜி.எஃப் 1,கே.ஜி.எஃப் 2, காந்தாரா ஆகிய படங்களின் மூலமாக அனைவருக்கும் தெரிந்த நிறுவனமாக மாறியிருக்கிறது.
சரியான படங்களை தேர்ந்தெடுத்ததின் காரணமாகவே, பொருளாதார ரீதியாக நல்ல இடத்தினை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்; அதனால், ஹோம்பாலே தயாரிக்கும் படங்களுக்கு நிச்சயமாக நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது.
On behalf of @HombaleFilms, I wish to extend my heartfelt greetings for the new year and appreciate you all for showering unwavering love and support towards us. #HappyNewYear! - @VKiragandur#HombaleFilms pic.twitter.com/h5vXMsaMWP
— Hombale Films (@hombalefilms) January 2, 2023
ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது ‘பாகுபலி’ புகழ் நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில், ‘கே ஜி எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ எனும் திரைப்படத்தையும், தமிழில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்து வரும் ‘ரகு தாத்தா’ என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் ‘டைசன்’ எனும் திரைப்படத்தையும், ‘சார்லி 777’ புகழ் ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் ‘ரிச்சர்ட் ஆண்டனி’ எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.