14 years of Singam: ஓங்கி அடிச்சா ஒன்றை டன் வெயிட்டுடா! - சூர்யாவின் “சிங்கம்” படம் வெளியான நாள் இன்று!
14 years of Singam : ஹரி- சூர்யா கூட்டணியில் உருவான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'சிங்கம்' வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் பெரும்பாலானோர் ஒரு முறையேனும் போலீஸ் கெட்டப்பில் நடித்திருப்பார்கள். போலீஸ் கதாபாத்திரத்தில் ஆக்ஷன் கலந்த காட்சிகளில் மாஸ் பர்ஃபார்மன்ஸ் மூலம் ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து ஸ்டார் நடிகருக்கான அந்தஸ்தை பெற்று விடுவார்கள். அப்படி ஒரு அனல் தெறிக்கும் பர்ஃபார்மன்ஸ் மூலம் முன்னணி நடிகர் என்ற இடத்தை பிடித்து தன்னுடைய திரை பயணத்தின் கிராஃப்பை உயர்த்தி கொண்டவர் நடிகர் சூர்யா.
ஒரு போலீஸ் அதிகாரியாக முதலில் நடித்த 'காக்க காக்க' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற பிறகு 2010ம் ஆண்டு ஹரி இயக்கத்தில் துரைசிங்கம் ஐபிஎஸ் அதிகாரியாக அவர் நடித்த திரைப்படம் 'சிங்கம்'. இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தூத்துக்குடி மாவட்டம் நல்லூரில் பிறந்து வளர்ந்த வீரமும் ஈரமும் நிறைந்த போலீஸ் அதிகாரியாக மாஸாக கலக்கி இருந்தார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவின் 25வது படமாக அமைந்த இப்படம் அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது. ரொமான்டிக் ஹீரோவாக மட்டுமின்றி அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த பக்காவான மசாலா கமர்ஷியல் படங்களையும் தன்னால் வழங்க முடியும் என நிரூபித்தார்.
விறுவிறுப்பான கதைக்களம், சென்டிமென்ட், ஆக்ஷன், காதல், ரொமான்ஸ், பன்ச் வசனங்கள் என வெற்றிக்கு தேவையான அம்சங்களையும் உள்ளடக்கி அனைத்து தரப்பு ஆடியன்ஸின் கவனத்தையும் ஈர்த்தது சிங்கம். ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வெயிட் டா... வசனம் இன்று வரை பிரபலம்.
சூர்யா 'சிங்கம்' படத்திற்கு கணம் சேர்த்தார் என்றால் படத்தின் நாயகி அனுஷ்கா படத்திற்கு அழகு சேர்த்தார். எரிமலையாக விவேக் காமெடி, மயில்வாகனம் கேரக்டரில் பிரகாஷ்ராஜின் கொடூரமான வில்லத்தனம், தேவி ஸ்ரீ பிரசாத் அசத்தலான துள்ளல் இசை, ப்ரியனின் பொருத்தமான ஒளிப்பதிவு என அனைத்துமே படத்துக்கு பிளஸ் பாய்ண்ட். ராதாரவி, நாசர், சுமித்ரா, மனோரமா, நிகழ்கள் ரவி, விஜயகுமார் என அவரவர்களின் பங்கும் கச்சிதம். மாஸான ஆக்ஷன் விரும்பிகளுக்கு சரியான அசைவ விருந்தாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
சிங்கம் முதல்பாகத்தின் வெற்றியை தொடர்ந்து ஹரி - சூர்யா கூட்டணியில் சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 என சீக்வல் படங்களாக உருவாக்கி இருந்தார். சிங்கம் படத்தின் மூன்று பாகங்களுமே வெற்றிப்படமாக அமைந்தாலும் சிங்கம் முதல் பாகம் தான் ரசிகர்களின் மிகவும் ஃபேவரட் படமாக அமைந்தது. அதற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் அபரிதமான கிரேஸ் உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான மிக சிறந்த ஆக்சன் படங்களின் பட்டியலில் நிச்சயம் சிங்கம் படம் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.