HBD Shreya Goshal: கசிந்துருகும் குரலால் இசையாளும் பாடும் நிலா! பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று!
மிக சில பாடல் ஆசிரியர்கள், பாடகர்களே தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டு அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பார்கள். அந்த வரிசையில், ஸ்ரேயா கோஷல் ரொம்ப ஸ்பெஷல்.
பொழுதுபோக்குக்காக உருவான சினிமாவை கொண்டாடும் ஆட்கள் இங்கு அதிகம். நிறைய திரைப்படங்களை பார்த்திருப்போம், அனுபவத்திருப்போம், கொண்டாடி இருப்போம். ஆனால், வெகு சில சினிமாக்களே மனதுக்கு நெருக்கமானதாக மாறிப்போகின்றன. ஆனால், சிரிப்பு, அழுகை, கோபம் என ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மனதோடு ஒன்றிப்போகும் பாடல்கள் என்னவோ பல நூறு இருக்கும்!
வெவ்வேறு காரணங்களுக்காக மனதுக்கு நெருக்கமான பாடல்களை கேட்கும்போதோ, பார்க்கும்போதோ சட்டென நினைவுக்கு வருபவர்கள் அப்பாடலில் தோன்றி நடித்தவர்கள்தான். மிக சில பாடல் ஆசிரியர்கள், பாடகர்களே தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கிகொண்டு அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பார்கள். அந்த வரிசையில், ஸ்ரேயா கோஷல் ரொம்ப ஸ்பெஷல்.
இது ’ஸ்ரேயாவின் பாடல்’ என சொல்லும் அளவிற்கு பல ஹிட் பாடல்களை அள்ளி குவித்திருக்கிறார் ஸ்ரேயா. தமிழ் பாடல்களை மட்டுமே கேட்டு வந்தவர்கள் கூட, இது ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல் என இந்தி பக்கமும், மலையாள பாடல்கள் பக்கமும் செவி சாய்த்தனர். பாடல்களை கேட்க, கொண்டாட மொழி தடையில்லை என்பதை நிரூபித்தவர் ஸ்ரேயா.
தமிழ் சினிமாக்களில், ஆண்களே பெண்களைப் பார்த்து காதல் வயப்பட்டு பாடல் பாடி உருகிவந்த பழக்கத்துக்கு மத்தியில் அவ்வப்போது சில படங்கள் வேறுபட்டிருக்கும். தலைவி, தலைவன்மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் ஏராளமான காதல் பாடல்களுக்கு தன் குரலை வாடகைக்கு விட்டிருப்பவர் ஸ்ரேயா.
கார்த்திக் ராஜா இசையில் ஆல்பம் படத்தில் பாடிய ‘செல்லமே செல்லம்..’ பாடல் முதல், 7ஜியில் ‘ நினைத்து நினைத்து பார்த்தால்..’ விருமாண்டியில் ‘உன்ன விட..’ தாஸ் ‘சாமிக்கிட்ட சொல்லிப்புட்டேன்...’ ஜில்லுனு ஒரு காதலில் ‘முன்பே வா அன்பே வா’ வெயில் படத்தில் ‘உருகுதே மருகுதே’ என பட்டியல் நீண்டுக்கொண்டே போகும். காதல் பாடல்களில் காதலியின் குரலாய் மட்டும் பிரதிபலிக்காமல், பல ஹிட் டூயட்களிலும் ஸ்ரேயாவின் இனிமையான குரலுக்கு தனி இடமுண்டு.
இனிமையான குரலழகி என்று மட்டும் ஸ்ரேயாவை கடந்துவிட முடியாது. எந்த மொழியானாலும், அந்த மொழி அவருக்கு தெரியாத மொழியானாலும் சொல் உச்சரிப்புக்கு கலங்கம் இல்லாது சரியாக பாடுவதும் ஸ்ரேயாவின் தனிச்சிறப்பு. பல இசையமைப்பாளர்கள் ஸ்ரேயாவை இதற்காக பாராட்டியதுண்டு.
ஸ்ரேயா என்றவுடன் பல பாடல்கள் நினைவிற்கு வந்தாலும், “உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா...” என்ற வரிகள் சட்டென நினைவுக்கு வரும் முதல் பாடல். விருதுகளை குவித்து கொண்டே இருக்கும் ஸ்ரேயாவுக்கு, புகழை தாண்டிய அன்பும் பாசமும் கொண்ட ரசிகர்களும் இங்கு நிரந்தரம்.
பிறந்தநாள் வாழ்த்துகள் ஸ்ரேயா!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்