Dhruva Natchathiram: 3 கோடி இல்லை, 60 கோடியாம்.. 'துருவ நட்சத்திரம்' படம் வெளியாகத் தடையாக இருக்கும் சிக்கல்!
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகாததின் உண்மையான காரணம் இதுதானாம்!
துருவ நட்சத்திரம்
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது கால வரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விக்ரம், ரிதுவர்மா, ஆர்.பாத்திபன் , ராதிகா சரத்குமார், திவ்யதர்ஷினி, விநாயகன், சதீஷ் கிருஷ்ணன், சலீம் பெய்க், ஷ்ரவந்தி சாய்நாத், மாயா கிருஷ்ணன், முன்னா சிமோன், வம்சி கிருஷ்ணா, சுரேஷ் மேனன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ரசிகர்களுக்கு நன்றி
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பொருளாதார நெருக்கடிகளால் கிட்டதட்ட 6 ஆண்டுகள் கடந்தும் வெளியாக சவால்களை சந்தித்து வருகிறது. கடைசியாக இந்தப் படத்தை தன்னுடைய சொந்த செலவில் தயாரித்து முடித்த கெளதம் மேனன் கடந்த நவம்பர் 24ஆம் தேதி படத்தை வெளியிடுவதற்கு தன்னளவிலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். அப்படியான நிலையில் 3 கோடி கொடுத்தால் மட்டுமே இந்தப் படத்தை அவர் வெளியிட முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒரே இரவில் 3 கோடி ரூபாயை ஒன்றுதிரட்ட முடியாத காரணத்தினால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.
நேற்று வெளியிட்ட துருவ நட்சத்திரத்திரம் திரைப்பட அறிவிப்பின் தமிழாக்கம்...#DhruvaNatchathiram pic.twitter.com/4bxPE5KncL
— OndragaEntertainment (@OndragaEnt) November 29, 2023
துருவ நட்சத்திரம் படத்திற்கு கிடைத்த ரசிகர்களின் ஆதரவைத் தொடர்ந்து இயக்குநர் கெளதம் மேனன் சார்பாக அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் பலரின் உழைப்பு மற்றும் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு கொடுத்த ஆதரவு முதலிய அனைத்தும் குறிப்பிடப்பட்டிருந்தன. மேலும் இந்தப் படத்தை தாங்கள் கைவிடவில்லை என்பதை உணர்த்தவே இந்த அறிக்கை வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
உண்மையான சிக்கல்
துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட 3 கோடி ரூபாய் பணம் இருந்தால் வெளியிடலாம் என்கிற தகவல் பரவலாக வெளியாகிய நிலையில், தற்போது இந்தப் படம் வெளியாக வேண்டுமானால் மொத்தம் 60 கோடி ரூபாய் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
படத்தை வாங்க முன்வராத ஓடிடி
மேலும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதை என்பதால் இந்தப் படத்தின் கதை இன்றைய நிலைக்கு வெற்றிபெறுமா என்கிற குழப்பம் தொடர்ந்து வருகிறது. இதனால் ஓடிடி தளங்கள் இந்தப் படத்திற்கு ஒரு நல்ல விலையை நிர்ணயம் செய்ய தயக்கம் காட்டி வருகிறார்கள். ஓடிடி தளங்கள் படத்தை வாங்காததால் விநியோகஸ்தகர்களும் படத்தை வாங்கி வெளியிட தயக்கம் காட்டி வருகிறார்கள். இந்த சிக்கல்களை எல்லாம் தான் தற்போது படக்குழு சரிசெய்ய நீண்ட போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.