"எனக்கு எரிச்சல் தாங்க முடியல; அவங்க உன்ன எப்படியெல்லாம் வளர்த்தாங்க"- விஜய்யை விளாசிய கங்கை அமரன்!
"விஜய் பிறந்த பொழுது , விஜய் அம்மா எங்களுடைய குரூப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.விஜயை எப்படி வளர்த்தாங்கன்னு பக்கத்துல இருந்து பார்த்தவன் நான்."
நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவும் , இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையில் அவ்வபோது பிரச்சனைகள் தொடருவது சில வருடங்களாக இருந்து வருகிறது. மேடைகளிலும் கூட விஜயை சந்திரசேகர் வெளிப்படையாகவே சாடினார். விஜய் தனது இயக்கத்தை கட்சியாக மாற்ற வேண்டும் என்பதுதான் எஸ்.ஏ.சந்திரசேகரின் விருப்பம் . ஆனால் விஜய்யின் கணக்கோ வேறாக உள்ளது. அவர் தற்போது தீவிர அரசியலில் ஈடுபட ஏனோ தயக்கம் காட்டி வருகிறார். இந்த சூழலில் சமீபத்தில் விஜய் தனது அம்மா அப்பா மீதே வழக்கு தொடர்ந்தார். இது திரைத்துறையினருக்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்குமே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகப்பெரிய ஃபேன் பேஸ் கொண்ட நடிகர் , ரசிகர்களுக்கு முன் உதாரணமாக இருப்பவர். இப்படி சொந்த அம்மா , அப்பா மீதே வழக்கு தொடரலாமா என பல விமர்சனங்களை நெட்டிசன்கள் தெறிக்கவிட்டனர். இந்த நிலையில் சந்திரசேகருக்கு நெருக்கமானவரும், நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர் என பன்முக கலைஞராக அறியப்படும் கங்கை அமரன் . விஜய் செய்தது தவறு என நேரடியாகவே மேடையில் பேசியிருக்கிறார். இது பலரது கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதில் ”சமீபத்துல விஜய் அவங்க அம்மா , அப்பாவை போங்க வேண்டாம்னு சொன்ன உடனே எனக்கு ரொம்ப வருத்தம். அவங்க வீடு எங்க வீட்டுக்கு பக்கத்துலதான் இருந்துச்சு. நாங்க எல்லாம் சந்திரசேகர் நாடகத்திற்கு வாசித்தவர்கள். ஓபனா சொல்லுறேன் இதுல என்ன பயம் . நடந்தது நடந்ததுதான். நமக்கு வெளிப்படையாக ஒரு விஷயம் தெரியும் பொழுது அது குறித்தான விமர்சனங்களை சொல்லியே ஆகவேண்டும்.நாங்க பெரியவங்க சொல்லித்தான் ஆவோம். நாங்க சொல்லாம வேறு யார் சொல்லுவா?. விஜய் பிறந்த பொழுது , விஜய் அம்மா எங்களுடைய குரூப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.விஜயை எப்படி வளர்த்தாங்கன்னு பக்கத்துல இருந்து பார்த்தவன் நான். இந்த செய்தியை கேட்டதும் எனக்கு வந்த எரிச்சல் அவ்வளவு தாங்க முடியலை. அம்மா , அப்பாவை விளக்கி வைக்குறேன்னு சொன்னதும் அடுத்த நாளே பத்திரிக்கையில சொன்னேன். உன்னை ஃபாலோ பண்ண பலபேர் இருக்காங்க , அவங்களையும் தள்ளி வைக்குறேன்னு சொல்லு என சொன்னேன். அவர் எவ்வளவு தோல்வியை சந்தித்தாலும் , அவருக்கான உந்துசக்தியை கொடுத்தது அவங்க அம்மா , அப்பாதான்.அவங்கள மறந்துட்டு , அவங்களை விளக்கி வச்சுட்டு வாழுறது வாழ்க்கை ஆகாது. விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் . அவங்க அம்மா, அப்பாவை கை விட்டுறாதீங்கன்னு சொல்லுங்க. முதல் பாட்டு நாங்க போட்டது, அன்னக்கிளி உன்னை தேடுதே அது எங்க அம்மா பாடுன தாலாட்டு.” என விஜய்க்கு நேரடியாகவே அறிவுரை கூறியிருக்கிறார் கங்கை அமரன்.