(Source: ECI/ABP News/ABP Majha)
AR Rahman : ஒரு சோறு மாதிரிதான் அவர்.. ஏ.ஆர்.ரஹ்மானின் வெற்றி.. பாலசந்தர் சொன்ன ஃப்ளாஷ்பேக்..
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான இசையமைப்பாளர் என்று அன்றே புகழ்ந்து பேசியிருக்கிறார் இயக்குநர் இமயமான கே.பாலச்சந்தர்.
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு அற்புதமான இசையமைப்பாளர் என்று அன்றே புகழ்ந்து பேசியிருக்கிறார் இயக்குநர் இமயமான கே.பாலச்சந்தர். ரோஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தான் பாலச்சந்தர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
அந்த ஃப்ளாஷ்பேக் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கே.பாலச்சந்தரின் பாராட்டு:
ஒரு புத்தம்புது இசையமைப்பாளரை அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். அவர் ஒரு புத்தம்புது இசை மலர். 6 அடி உயரத்தில் 60 வயதில் ஆஜானுபாகுவாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை எப்படி நாம் இத்தனை நாள் கவனிக்காமல் விட்டோம் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அப்போது தான் மணிரத்னம் எனக்கு அவரை அறிமுகப்படுத்தினர். ஏ.ஆர்.ரஹ்மான் ஓர் அற்புதமான இசையமைப்பாளர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் அந்த ஒரு சோற்றை இப்போது தான் அதாவது ஒரு பாடலை கேட்டு ரசித்து பதம் பார்த்தீர்கள். விரைவில் திரையில் மற்ற பாடல்களையும் கேட்டு ரசிப்பீர்கள். இவ்வாறு ரோஜா திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானை, இயக்குநர் பாலச்சந்தர் பாராட்டியுள்ளார்.
ரோஜா திரைப்படட்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா ஃபில்ம்ஸ் தான் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விவேக் என்ன சொன்னார் தெரியுமா?
கேபி ரஹ்மானைப் பற்றி பாராட்டியதைப் பேசும்போது இந்த சுவாரஸ்யமான விசயத்தைப் பற்றி பேசாமல் இருந்துவிட முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமான ரோஜா படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அந்த படத்திற்காக ரஹ்மான் அமைத்திருந்த சில டியூன்களை நடிகர் விவேக்கிடம் பாலச்சந்தர் அவர்கள் போட்டு காண்பித்து, எப்படி இருக்கிறது? என கேட்டிருக்கிறார். சில டியுன்களை கேட்டுப்பார்த்த விவேக், என்ன சார் இவ்ளோ சிம்பிளா இருக்கு எனக் கூற, 'அதுதான்யா வேணும்' என பாலச்சந்தர் அவர்கள் கூறியிருக்கிறார். நடிகர் விவேக் கேட்டுவிட்டு ரொம்ப சிம்பிளாக இருக்கிறது எனக்கூறிய அந்த ரோஜா ஆல்பம் அறிமுக இசையமைப்பாளரான ரஹ்மானுக்கு தேசிய விருதை வாங்கிக் கொடுத்தது.
எல்லாப் புகழும் இறைவனுக்கே:
இந்தியாவில் இசையில் புதிய அலையை உண்டாக்கியது. மார்கழி மாதத்து பனிக்கு ஒத்த குளுமையோடும் ஜிவ்வென்ற புதுமையோடும் புது வெள்ளை மழையாக இளசுகளின் மனதில் ரஹ்மானை குடிகொள்ள வைத்தது. இன்று வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. 90-களில் பதின்ம பருவத்தவராக, கல்லூரி இளைஞர்களாக ரஹ்மானின் இசையை ரசித்துக் கொண்டிருந்தவர்களின் பிள்ளைகள் இப்போது வளர்ந்து அதே பதின்ம பருவத்தில் 'அத்ராங்கி ரே' ஆல்பத்தை ரிப்பீட் மோடில் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு தலைமுறை கடந்துவிட்டது. ரஹ்மானின் மகன் இசையமைக்க தொடங்கிவிட்டார். ஆனால், இன்னமும் அந்த புதுமை மாறாமல் நவயுக இளைஞர்களை வசீகரிக்கும் கலை ரஹ்மானிடமிருந்து அகலவில்லை.
இன்னமும் அவர் ஒவ்வொரு மேடையில் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழ் மண்ணுக்கு ஆஸ்கரை வென்று கொடுத்த பெருமை கொண்ட ரஹ்மான் துளியும் ஆணவம் காட்டியது இல்லை என்பது தான் அவரின் அடையாளமாக இருக்கிறது.