ப்ளாஷ்பேக்: நடிக்க மறுத்த சீதா..டேட் தர மறுத்த ரேவதி...‛4 ரீலு... 40 நாளு’ பார்முலாவில் பாண்டியராஜனின் ‛ஆண்பாவம்’!
இரண்டாவது படம், இரண்டு நாயகிகள், இரண்டு நாயகர்கள் என இம்சைகளை கடந்து இனிமையான படத்தை முடித்திருந்தார் பாண்டியராஜன்.
சில படங்களில் சில காட்சிகள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஆனால் இன்று நாம் பார்க்கவிருக்கும் படத்தில், ஒவ்வொரு காட்சியும் மறக்க முடியாதவை. ஆண்பாவம். பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, சீதா நடித்து பார்ப்போரை கலகலப்பாக்கும் படம். கன்னிராசி படத்தில் அறிமுக இயக்குனரான பாண்டியராஜன், தனது இரண்டாவது படமான ஆண்பாவத்தில் இயக்கியதுடன் அறிமுக நாயகரானார். உண்மையில் படத்தின் ஹீரோ பாண்டியன் தான் என்றாலும், அது பாண்டியராஜன் படமாகவே பார்க்கப்பட்டது, ஈர்க்கப்பட்டது. ஆண்பாவம் உருவானதில் நிறைய சுவாரஸ்யங்கள் உண்டு. அவை என்ன? எப்படி நடந்து முடிந்தது ஆண்பாவம் சூட்டிங் என்பதை இதில் பார்க்கலாம்.
பந்தியில் பார்த்த சீதா!
பாண்டியராஜன் பொதுவாகவே கலகலப்பான இயக்குனர். நல்ல நகைச்சுவை உணர்வு கொண்ட படங்களை தருபவர். ஆண்பாவமும் அப்படியொரு கதை அமைப்பை கொண்ட படம் தான். அண்ணன், தம்பியின் திருமணத்தை மையமாக கொண்ட கதை களம். அண்ணனாக பாண்டியன், தம்பியாக பாண்டியராஜன். இப்போது அண்ணனுக்கு ஒரு ஹீரோயின் தேவை. புதுமுகம் தான் போட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பாண்டியராஜன். தேடுதல் படலம் நடக்கிறது. புதுமுகத்தை தான் போட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் பாண்டியராஜன், அதற்கான பொறுப்பை சிலரிடம் ஒப்படைந்தார். ஒருநாள் ஒரு நிகழ்ச்சியில் பந்தியில் அமர்ந்திருக்கும் போது, ஒருவர் வந்து சில போட்டோக்களை தருகிறார். அதில் திருப்தியடையாத பாண்டியராஜன், ‛யோவ்... அங்கே பாருய்யா.. அந்த பொண்ணு மாதிரி இருக்கனும்...’ என எதிரில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டுகிறார். அவர் தான் சீதா. அப்போது அவருடைய உண்மையான பெயர் சைரந்தினி. போட்டோ கொண்டுவந்தவருக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தது. ‛சார்... அவங்க அப்பாவும் உதவி இயக்குனர் தான் சார்...’ என கூற, எடுய்யா வண்டியை என சிறிது நேரத்தில் புறப்படுகிறார்.
‛நீயெல்லாம் டைரக்டரா...’ சீதா கேட்ட கேள்வி!
எல்.ஐ.சி.,க்கு எதிர்த்த ரோட்டில் சீதா வீடு இருந்தது தெரிந்து, அங்கு செல்கிறார்கள். அங்கு அவர் அப்பா இல்லை. சீதா இருக்கிறார். அவரை சந்திக்க வந்திருக்கும் விசயத்தை அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் சீதா பார்க்க விரும்பவில்லை. அவர்களை உள்ளே அனுமதிக்கவும் இல்லை. ‛என்னடா வம்பா போச்சேனு...’ கிளம்புகிறார்கள். 3 நாட்கள் கடக்கிறது. எல்.ஐ.சி., வழியாக ஒரு வேலைக்கு பாண்டியராஜன் செல்கிறார். அப்போது, சீதா நியாபகம் வருகிறது. ‛யோவ்... வண்டியை வளைச்சு விடு...’ என மீண்டும் சீதா வீட்டுக்குச் செல்கிறார்கள். இப்போ அவரின் அப்பா இருக்கிறார். சினிமா தெரிந்தவர். அமர்ந்து பேசுகிறார். சீதாவுக்கு விருப்பம் என்றால் எனக்கு பிரச்னை இல்லை என்கிறார். ‛இவன் ஒரு ஆளு... இவனெல்லாம் ஒரு டைரக்டரா,’ என்கிற ரீதியில் அவரை அணுகுகிறார் சீதா. ‛சினிமா எனக்கு வேண்டாம்... அது சரியா இருக்காது...’ என சீதா சொல்ல, ‛ஏம்மா... எல்லா தொழில் மாதிரிதாம்மா சினிமாவும்... நல்லதும் இருக்கும்... கெட்டதும் இருக்கும்...’ என அவரை சம்மதிக்க முயற்சிக்கிறார் பாண்டியராஜன். ‛உங்களை பார்த்தா... டைரக்டர் மாதிரியே தெரியலையே...’ என ஓப்பனாக போட்டு உடைக்கிறார் சீதா. தியேட்டர் ஒன்றில் கன்னிராசி படத்திற்கு 5 டிக்கெட் வாங்கி, சீதாவிடம் கொடுத்த பாண்டியராஜன், ‛இந்தாம்மா என் படத்தை பார்த்துட்டு வந்து சொல்லு...’ என புறப்படுகிறார்.
உண்மையாவே நீங்க டைரக்டரா...? மீண்டும் டவுட் ஆன சீதா!
இப்போது சீதா படத்தை பார்த்துவிட்டார். மறுநாள் சந்திக்க வருகிறார் பாண்டியராஜன். ‛ஏங்க... நீங்க தான் டைரக்ட் பண்ணீங்களா...’ என மீண்டும் சீதா சந்தேகம் கிளப்ப, ‛ஏம்மா... இதுக்கு மேல நான் எப்படிம்மா நிரூபிப்பேன்’ என பாண்டியராஜன் நொந்து கொண்டார். ஒரு வழியாக சீதாவை ஒப்புக் கொள்ள வைத்தாகிவிட்டது. இனி தனக்கு ஒரு ஜோடி தேட வேண்டும். ஒரு புதுமுகத்தை தேடியே நொந்து போனதால், நடித்துக் கொண்டிருக்கும் நடிகையை ஒப்பந்த செய்ய முடிவு செய்கிறார். அவரது சாய்ஸ் ரேவதி. தன்னுடைய உடல்வாகிற்கு ரேவதி தான் பொருத்தமாக இருப்பார் என்பதால், அவரை ஒப்பந்தம் செய்ய வீட்டிற்குச் செல்கிறார் பாண்டியராஜன்.
வெறும் 5 நாள் டேட் மட்டும் தந்த ரேவதி!
சீதா அப்போது ரொம்ப பிஸி. ரஜினி, கமல் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துக் கொண்டிருக்கிறார். பாண்டியராஜன் கேட்ட போது, ரேவதி சொன்ன ஒரே பதில், ‛டேட் இல்லையே...’ என்பது தான். ‛எத்தனை நாள் டேட் இருக்கு...’ என பாண்டியராஜன் கேட்கிறார். டைரியை புரட்டி பார்க்கிறார். 4 நாட்கள் ப்ரீயாக உள்ளது. அதில் இரண்டு நாட்கள் அவரது நடன பயிற்சிக்கானது. ‛இனிமே ஆடி என்ன பண்ணப்போறீங்க... எனக்கு அந்த 4 நாளோடு ஒரு நாளை சேர்த்து... 5 நாளா தாங்க...’ என கேட்கிறார் பாண்டியராஜன். ‛5 நாளா... 5 நாள் போதுமா...? டப்பிங் பேசவே 2 நாள் ஆகுமே’ என வியப்பாய் கேட்கிறார் ரேவதி. ‛கவலைப்படாதீங்க... நீங்க படத்தில் ஊமை... டப்பிங் செய்ய வேண்டியதில்லை’ என பாண்டியராஜன் சொல்ல, ஒரு வழியாக ஒப்பந்தம் செய்யப்படுகிறார் ரேவதி. வழக்கமாய் படங்களில், ஹீரோக்களை ஒப்பந்தம் செய்வதில் தான் பெரிய போராட்டம் இருக்கும். ஆனால் ஆண்பாவத்தை பொருத்தவரை இரு ஹீரோயின்களை ஒப்பந்தம் செய்ய பாண்டியராஜன் பெரும்பாடுபட்டார்.
கை ஓங்கிய பாண்டியராஜன்... கதறிய சீதா!
இப்போது அவரவர் ஒதுக்கிய டேட்டில் சூட்டிங்கை துவக்கிவிட்டார் பாண்டியராஜன். சீதா நடிக்கும் காட்சிகள் எடுக்கப்படுகிறது. கடிகாரத்தை வடிகட்டி எடுக்கும் காட்சி. மழை வரும் சூழல். ரீல் கையிருப்பு குறைவாக உள்ளது. உடனே எடுத்து முடிக்க வேண்டிய கட்டாயம். புதுமுகம் சீதா ஓரளவிற்கு நடித்தாலும், நடித்து முடித்த பின் கேமராவை பார்த்து தலை அசைக்கும் பழக்கம் கொண்டவராக இருந்தார். இப்படியே அந்த டேக்கை வீணடிக்கிறார் சீதா. வடிகட்டி... வடிகட்டி... புடவை ஈரமானதால், மாற்று ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில், நேரமும், ரீலும் வீணானதால் கடுப்பான பாண்டியராஜன், கோபத்தில் கையை ஓங்க, தற்செயலாக சீதா அருகில் வர, அவர் மீது அடி விழுந்துவிடுகிறது. அவ்வளவு தான்... ‛எங்க அப்பாவே என்னை அடிச்சது இல்ல...’ அது இதுனு புலம்ப ஆரம்பித்தார் சீதா. ‛ஏம்மா... பணம் போட்டு படம் எடுக்குறோம்மா... கொஞ்சம் புரிஞ்சுக்கோ...’ என அவரை சமரசம் செய்து படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். பிரச்னையில் இனி சீதா வரமாட்டார் என அனைவரும் நினைத்திருக்க, நடந்ததை புரிந்து கொண்டு மீண்டும் வந்தார் சீதா.
மொத்த வித்தையும் இறக்கிய பாண்டியராஜன்!
சீதா பார்ட் இப்படியென்றால் ரேவதி பார்ட் எடுப்பது அதை விட சவால். அவர் தேர்ந்த நடிகை. ஆனால், நாட்கள் குறைவு. இங்கு தான் இயக்குனர் பாண்டியராஜனின் மொத்த வித்தையும் இறக்கப்படுகிறது. நீங்கள் இதற்கு முன் ஆண்பாவம் பார்த்தவராக இருந்தால், இனி இதை நோட் செய்து கொள்ளுங்கள். ரேவதி தொடர்பாக படமாக்கப்பட்ட காட்சிகள் படத்தில் மிக குறைவு தான். ஆனால் அவர் படம் முழுக்க வருவார். உதாரணத்திற்கு கிணற்றில் குதிக்கும் சீன். குளோஸ்அப் ஷாட்டில் மட்டும் ரேவதி இருப்பார். குதிப்பதிலிருந்து, தூக்குவது முதல் மருத்துவமனை கொண்டு செல்வது வரை வைடு ஷாட் இருக்கும். அது ரேவதி இல்லை, டூப். மழை பெய்யும் காட்சியாக இருக்கும்; குடையில் அழைத்துச் செல்லப்படுவார். முகம் மட்டும் தெரியாது, அதுவும் டூப். மருத்துவனையில் ஸ்டெச்சர் மட்டும் நகரும், ஆனால் அது ரேவதி என நாம் நம்பியிருப்போம். இப்படி நிறைய ட்ரிக் ஷாட்டுகளை பாண்டியராஜன் பயன்படுத்தி, படம் முழுக்க ரேவதியை பயணிக்க வைத்தார். ஆனால் அதற்கு நிறையவே மெனக்கெட்டார்.
படம் பார்த்த சீதாவும்... ரேவதியும் ஷாக்!
இப்போது படம் முடிந்துவிட்டது. ப்ரிவியூ ஷோ பார்க்கிறார்கள். அதுவரை சீதாவுக்கும்-பாண்டியராஜனுக்கும் ஒத்துபோகவே இல்லை. கடைசி வரை கதையே சொல்லாமல், வெறும் ஷாட்டை மட்டும் சொல்லியே படத்தை முடித்துவிட்டார் என்கிற கோபம் வேறு இருந்தது. படத்தை பார்த்துவிட்டு வந்த சீதா, வெளியில் நின்று கொண்டிருந்த பாண்டியராஜன் காலில் விழுந்து தன் நன்றியை தெரிவிக்கிறார். அத்தோடு நிற்கவில்லை, படம் நன்றாக ஓட வேண்டும் என கோயில், குளங்களாக ஏற தொடங்கிவிட்டார். சீதா இப்படியென்றால், ப்ரிவியூ பார்த்த ரேவதி ரியாக்ஷன் வேறு மாதிரி இருந்தது. முதல் பாகத்தில் மிக குறைந்த இடத்தில் தான் ரேவதி வருவார். முதல்பாதியை பார்த்த அவருக்கு பெரிய அளவில் வருத்தம். ‛என்னங்க... என்னோட போஷனே இல்ல...’ என கேட்டுள்ளார். மீதியை பார்த்துட்டு சொல்லுங்க... என பாண்டியராஜன் கூற, படம் முடிந்ததும், அசந்து போனார் ரேவதி. 5 நாள் ஷெட்யூலில் இப்படி கூட எடுக்க முடியுமா... என அசந்து போய் பாண்டியராஜனை பாராட்டிச் சென்றார் ரேவதி.
50 நாளில் ஒட்டுமொத்த ஷீட்டிங் நிறைவு!
பெரிய ஹீரோக்கள் இல்லை... பிரம்மாண்ட செலவு இல்லை. ஆனாலும் இளையராஜா என்கிற சுமைதாங்கியின் தயவில், கலகலப்பான கதை களத்தில் ஆண்பாவம், மோட்சம் பெற்றது. பின்னணி இசையை இப்படி கூட தர முடியுமா.... என்பதை அப்படியே காண்பித்த படம். சண்டை காட்சியிலிருந்து, சந்திக்கும் காட்சி வரை வித்தியாசமான பின்னணி இசையை கொடுத்து இளையராஜா மிரட்டியிருந்தார். இரண்டாவது படம், இரண்டு நாயகிகள், இரண்டு நாயகர்கள் என சின்ன சின்ன இம்சைகளை கடந்து இனிமையாயன படத்தை முடித்திருந்தார் பாண்டியராஜன். ‛4 ரீலு... 40 நாளு...’ என்கிற பார்மூலா பாண்டியராஜனுடையது. அதன் படி 50 நாட்களில் படத்தை முடித்து, தியேட்டருக்கு கொண்டு வந்த பாண்டிராஜனின் சமார்த்தியம், அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்கு அழைத்துச் சென்றது. ஆண்பாவம், அனைவரின் ஆல்டைம் பேவரிட்!
மேலும் ப்ளாஷ்பேக் செய்திகளை படிக்க....
ப்ளாஷ்பேக்: ரஜினியை மாற்றிய மனோபாலா... கருணாநிதியில் தொடங்கி எம்.ஜி.ஆர்.,யில் முடிந்த ஊர் காவலன்!