silk smitha death anniversary: தமிழ் சினிமாவை கண்ணால் கட்டிப்போட்ட ‘சில்க்’ - நினைவு தினத்தை அனுசரித்த தீவிர ரசிகர்கள்!
silk smitha death anniversary; நடிகை சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள ரசிகர்கள் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.
silk smitha death anniversary: நடிகை சில்க் ஸ்மிதாவின் 27வது நினைவு நாளையொட்டி, ஈரோட்டில் உள்ள ரசிகர்கள் அவரது உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் 80களின் நாயகி சில்க் ஸ்மிதா. தனது கண்களின் நடிப்பினால் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வகையான ரசிகர் பட்டாளத்தினையும் கவர்ந்து தன் கட்டுக்குள் வைத்திருந்தார். அப்போதைய தமிழ் சினிமாவே சில்க் ஸ்மிதாவை ஒரு கவர்ச்சிப் பொருளாகவே நடத்தி வந்தது. ஆனால் அவருக்கான ரசிகர் பட்டாளங்களில் ஒரு பகுதியும் இவ்வாறே இருந்தது.
அவரது ரசிகர் பட்டாளத்தில் சில்க் ஸ்மிதாவை சரியாக புரிந்து கொண்ட, ரசிகர்களும் அவரது காலத்தில் இருந்துள்ளார்கள். இப்போதும் சில்க் ஸ்மிதாவை கண்ணியமாக நினைவு கூறும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு, எடுத்துக்காட்டாக, அவரது நினைவு நாளில், ஈரோட்டில் உள்ள குமார் எனும் தீவிர ரசிகர், சில்க் ஸ்மிதாவிற்கு தனது நண்பர்களுடன் இணைந்து மரியாதை செய்துள்ளார்.
ஈரோட்டின் பேருந்து நிலையத்தின் அருகில் தேனீர் கடை வைத்து நடத்தி வருபவர் குமார். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், சில்க் ஸ்மிதாவின் பிறந்த நாள் என்றால் கேக் வெட்டி கொண்டாடுவதும், நினைவு நாள் என்றால் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து நினைவு உபசரிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "நானும் எனது நண்பர்களும் தீவிரமான சில்க் ஸ்மிதாவின் ரசிகர்கள். எல்லோரும் சில்க் ஸ்மிதாவை வெறும் கவர்ச்சிக்காக மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் அப்படி பார்ப்பதில்லை" என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தது கரூரில் என்றாலும் வளர்ந்தது எல்லாம் விஜயலட்சுமியாக ஆந்திர மாநிலத்தில், நான்காம் வகுப்பு வரைதான் படிப்பு. வீட்டில் பெண் பிள்ளை பிறந்தால் அவளைப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து இளவயதிலேயே யாருக்கேனும் மணமுடித்துவிடும் வழக்கம் இன்றும் நடுத்தரவகுப்புக் குடும்பங்களிலும் கிராமப்புறங்களிலும் அதிகம் உண்டு. இந்த வழமை விஜயலட்சுமியையும் விட்டுவைக்கவில்லை. சிறுவயதிலேயே மணம் முடித்துவைக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம், நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்தவர் ஒரு மலையாளப் படத்தில் நடித்தார். பின்னர் வறுமை காரணமாக சினிமாவில் ஒப்பனைக் கலைஞராகச் சேர்ந்தார். சைட் ஆர்டிஸ்டுகளுக்கு மேக்கப் போடும் பணி. மேக்கப் போட்டு வந்தவரின் திறமையை கண்டறிந்த நடிகர் வினு சக்கரவர்த்தி, அவரை ‘சிலுக்கு’ என்னும் கதாப்பாத்திரத்தில் தனது திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். வறுமையில் உழன்ற ஒரு கலைஞருக்கு வினு சக்கரவர்த்தி வாழ்வளித்தார் என்றாலும் உண்மையில் வறுமையில் உழன்றிருந்தது என்னவோ தமிழ் சினிமாதான்.
ஹீரோயின் என்றாலே ஹீரோக்களுக்கு அண்டர்ப்ளே செய்ய வேண்டும் என்கிற சினிமாவின் எழுதப்படாத விதியை மாற்றினார். ஸ்டைல் காட்டி வீர வசனம் பேசிய அதே ஹீரோக்கள் இவருடன் ஒரு பாடலில் நடிக்கக் கால்ஷீட் கேட்டு போட்டி போட்டனர்.
நான்கு வருடத்தில் மட்டும் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் மீது சர்ச்சைகள் குவியத் தொடங்கின. ஆண் நடிகர் முன்பு எப்படி அவர் கால் மேல் கால் போட்டு அமரலாம்? என்றார்கள். முதலமைச்சரின் விழாவில் பங்கேற்காதது அவரது தலைக்கணத்தைக் காட்டியது என்றார்கள். அவை அத்தனையும் பின்னர் மறுக்கப்பட்டாலும் ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில் எவருக்கும் இல்லாத பெருந்துணிவு இவர் ஒருத்திக்கு மட்டும் இருந்தது என்றால் அந்தத் தலைக்கணமும் ஒருவகையில் கவர்ச்சிதான்.
இந்தப் பெரும் ஆளுமை தனது 35 வயதிலேயே தனது வாழ்வை முடித்துக்கொண்டார். சினிமா தயாரிப்பு தோல்வி, காதல் தோல்வி என பல தோல்விகளை அவர் தூக்கிட்டுக் கொண்டதற்குக் காரணமாகச் சொன்னார்கள். உண்மையில் அது ஒரு ஆளுமையை அங்கீரிக்கத் தெரியாத சமூகத்தின் தோல்வி. நேற்று முளைத்து நாளை வாடும் ஹீரோயிசக் காளான்களுக்கு இடையே ‘சில்க்’ ஸ்மிதா என்னும் தனித்துவம் நிரந்தரமானவர்.