நான் லக்கி; எனக்கு நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கிறது - மனம் திறந்த பஹத்!
தனக்கு நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கிறது. அதில் மர்மமோ, மேஜிக்கோ இல்லை மலையாள நடிகர் பஹத் பாசில் தெரிவித்துள்ளார்
மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ளார் பஹத் பாசில். நடிகை நஸ்ரியாவின் கணவராக தமிழில் அறியப்பட்ட பஹத்துக்கு தற்போது தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. காரணம் அவரின் நடிப்பு. தன்னுடைய கண்கள் மூலமே தான் நடிக்கும் கதாபாத்திரத்தை ரசிகர்களுக்கு கடத்திவிடும் விவரம் தெரிந்தவராக இருக்கிறார் பஹத். சமீபத்தில் வெளியான ஜோஜி திரைப்படம் பஹத்தின் நடிப்புக்கு மற்றுமொரு உதாரணம்.
மெலிந்த உடல், மனதில் மிருகத்தனம் என அசத்தல் நடிப்பை கொடுத்திருப்பார் பஹத். ஆக்ஷன், காமெடி, வில்லத்தனம் என எந்த வித கதாபாத்திரத்தையும் அதே உடல் வாகுவை கொண்டு முக பாவனைகளால் அசத்திவிடுகிறார் பஹத். சமீபத்தில் அதிகம் கவனித்தக்க நடிகராக மாறிவரும் பஹத் தன்னுடைய திரை வாழ்க்கை குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளத்திற்கு பேசியுள்ளார்.
படத்திற்கான ஸ்கிரிப் தேர்வு குறித்து பஹத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ஒரு கதை சொல்லப்படும் விதம் தான் என மிக முக்கியம். ஒரே கதையாக இருந்தாலும் வெவ்வேறு கோணங்களில் அதனை கேட்க விரும்புகிறேன். ஒரே கதையை திரும்ப திரும்ப செய்ய விருப்பமில்லை. அது ரீமேக் என்றாலும் அதில் சிறிய மாற்றத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கு நல்ல ஸ்கிரிப்ட் கிடைக்கிறது. அதில் மர்மமோ, மேஜிக்கோ இல்லை. அது அதிர்ஷ்டம்.
என்னுடைய மனைவி என்னை லக்கி அலி என்பார். ஏனென்றால் நான் அதிர்ஷ்டசாலி. நான் சரியான நேரத்தில் சரியான இடத்தில் இருக்கிறேன். இது பெரிய மேஜிக்கோ, ராக்கெட் சைன்ஸோ இல்லை. அதுவாக நடக்கிறது என்றார். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ள பஹத், தெலுங்கிலும் அல்லு அர்ஜூன் உடன் ஒரு படம் நடித்துள்ளார்.