Draupathi: திரௌபதி ஒரு கெட்ட கனவு... பழி சுமத்தினாரா மோகன் ஜி பட நடிகை ஷீலா ராஜ்குமார்?
சின்னத்திரையில் அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வந்த பொழுது திரௌபதி பட வாய்ப்பு நடிகை ஷீலாவுக்கு கிடைத்தது. 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக ஆனது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் நடிப்பில் 2020-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் திரௌபதி. இயக்குனர் மோகன் ஜியின் இரண்டாவது திரைப்படம் இது. ஒரு சாதியினரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை என்று பலத்த விமர்சனங்கள் இந்த படத்திற்கு எழுந்திருந்தது. இவை அனைத்தையும் தாண்டி, தற்போது இந்த படத்தின் கதாநாயகி ஷீலா ராஜ்குமார் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டியில் திரௌபதி படத்தில் நடித்ததை ஒரு கெட்ட கனவாகவே நான் பார்க்கிறேன் எனக் கூறியுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை ஷீலா நான், ஆறாது சினம், மனுஷங்கடா, டூலெட், அசுரவதம் கும்பளங்கி நைட்ஸ், நம்ம வீட்டு பிள்ளை, திரௌபதி, மண்டேலா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது மாயத்திரை, பர்முடா, ஜோதி என நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வந்த பொழுது திரௌபதி பட வாய்ப்பு நடிகை ஷீலாவுக்கு கிடைத்தது. 2020 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக ஆனது.
திரௌபதியில் நடித்தது எனக்கு பெருமை!
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதே திரௌபதி படத்தின் ப்ரமோஷன் சமயங்களில் அளித்த பேட்டியில், நடிகை ஷீலா ராஜ்குமார் படம் குறித்தும், படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்தும் மிகப் பெருமையாக பேசி இருந்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திரௌபதி படத்தின் கதை கேட்டவுடன் பிடித்துவிட்டது. நம் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் பேசப்படுவது இல்லை. இந்த கதை மூலம் நானும் நிறைய தெரிந்து கொண்டேன். இந்த படத்தின் மூலம் நான் அந்த கருத்தை வெளிப்படுத்துகிறேன் என்பதை நான் பெருமையாக நினைக்கிறேன். இந்த படத்திற்காக இயக்குநரிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தபோது பாதி கதை கேட்டிருக்கும்போதே, இந்த படத்தை நான் தான் பண்ணுவேன் என்று கூறிவிட்டேன்" என்று ஷீலா கூறியிருக்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக நழுவிய ஷீலா:
படம் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்ட பின் ஷீலாவிடம் திரௌபதி படம் குறித்து பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுப்பப்பட்டன. ஒரு வருடத்திற்கு பின் அவர் கலந்துகொண்ட நேர்காணல்களில் திரௌபதி படத்தின் கருத்து குறித்து நான் எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், இயக்குனர் என்ன சொன்னாரோ அதைத்தான் நடித்துக் கொடுத்தேன்.படம் வெளியாகி பிரமோஷன் நேரங்களில் தான் சாதி அரசியல் எல்லாம் இந்த படத்தில் இருக்கிறதா என்று எனக்குத் தோன்றியது. எனக்கு அரசியல் தெரியாது. திரௌபதி கதை கேட்ட பொழுது திரௌபதியின் தங்கைக்கு ஒரு தீங்கு நடக்கிறது. அதற்கு ஒரு ரிவெஞ்ச் நடக்கிறது அதுதான் கதை. அந்த கதையின் கரு எனக்கு பிடித்திருந்தது. அதனால்தான் அந்த படத்தை நான் பண்ணினேன். திரௌபதிக்கு முன் எனக்கு வந்த கதாபாத்திரங்கள் அனைத்தும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா அதுபோன்ற கதாபாத்திரங்களே வந்தன. அந்த பிம்பத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் அப்போது எனக்கு இருந்தது. அந்த நேரத்தில் திரௌபதி போன்ற ஒரு துணிச்சலான கேரக்டர் கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன் என்று கூறுயிருந்தார்.
திரௌபதி ஒரு கெட்ட கனவு!
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஷீலாவிடம் திரௌபதி படம் குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. உங்களை பொறுத்த வரையில் திரௌபதி சமூக அக்கறை உள்ள படமா என்ற கேள்விக்கு, தற்போது வரை திரளபதி எனக்கு ஒரு கெட்ட கனவாக இருக்கிறது. ஏனென்றால் படத்தின் முழு கதை எனக்கு சொல்லவில்லை. கரியரில் சின்ன சின்ன சறுக்கல்கள் இருக்கத்தான் செய்யும். இதை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன். ஒரு விபத்து போலவே இந்த படத்தை நான் பார்க்கிறேன். எனக்கு அரசியல் தெரியாது. இயக்குனர்கள் படம் பற்றி கூறும்பொழுது வெளிப்படையாக கூறிவிட்டால் அதில் நடிக்கலாமா வேண்டாமா என்றும், நடித்தால் பின்னர் வரப்போகும் விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்றும் தயாராகிக் கொள்ளலாம். எனக்கு சமுதாயத்தில் இப்படி உள்ளது என்றே தெரியாது. நான் இதை ஒரு விபத்து போல தான் பார்க்கிறேன். ஒரு விபத்திற்கு ஆளானால் மருந்து போட்டுக்கொண்டு குணமாகி மீண்டும் எதார்த்தத்திற்கு திரும்புவதில்லையா… அதுபோலத்தான் இதுவும்! அடிபட்டது..கற்றுக்கொண்டேன்…வாழ்க்கையின் அடுத்த இலக்கை நோக்கிப் பயணித்துக் கொண்டுள்ளேன்.
இரண்டு வருடத்திற்கு முன்பு பாதி கதை கேட்டுவிட்டு கதை பிடித்துப் போனதால் படத்திற்கு ஒத்துக்கொண்டேன் எனக் கூறிவிட்டு, தற்போது இயக்குநர் எனக்கு முழு கதையை கூறவில்லை என்று இயக்குநர் மேல் பழி போடுகிறார், நடிகை ஷீலா என பலரும் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வரும்போது ஏற்றுக் கொள்வதும், நெகட்டிவ் விமர்சனங்கள் வரும்போது அதிலிருந்து நழுவி விடுவதுமாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். மற்றொரு தரப்பினர், ஷீலா தெரியாமல் அந்த இயக்குநரின் ட்ரிக்ஸில் மாட்டிக்கொண்டார் என பேசி வருகிறார்கள்.