4 நாயகிகள்.. இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அக்டோபர் 31 லேடீஸ் நைட்'
4 கதாநாயகிகளை மையமாக வைத்து `அக்டோபர் 31 லேடீஸ் நைட்' என்ற திரைப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கி முடித்துள்ளார்.
தமிழ்த்திரையுலகில் தயாரிப்பாளரிடம் கூறிய நாட்களுக்குள் படத்தை முடித்துக்கொடுப்பது, தயாரிப்பாளரிடம் கூறிய பட்ஜெட்டிற்குள் படத்தை திட்டமிட்டு முடிக்கும் இயக்குநர்கள் வெகு சிலரே. இயக்குநர் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகிய முக்கிய இயக்குநர்கள் இடம்பெற்றுள்ள அந்த வரிசையில் குறிப்பிடத்தக்கவர் தயாரிப்பாளர் ஏ.எல். தேனப்பனின் மகன் விஜய்.
நடிகர் அஜித்குமாரின் `கிரீடம்', விக்ரமின் `தெய்வத்திருமகள்', விஜயின் `தலைவா', ஆர்யா நடித்த `மதராசப்பட்டினம்' ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய். தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து `தலைவி’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த திரைப்படத்தில் பிரபல பாலிவுட் கதாநாயகி கங்கணா ரணாவத் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்டர்கள், டீசர்கள் ஆகியன வெளியாகியது. அந்த படத்தில் ஜெயலலிதாவின் தோற்றத்தில் உள்ள கங்கணா ரணாவத்தின் தோற்றத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது. இந்த படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்றுள்ள நிலையில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் ஏதும் இயங்காத காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : Viral Video: முதலையைக் கட்டிப்போட்டு விளையாடும் மயிலாடுதுறை பாய்ஸ்!
இந்த நிலையில், இயக்குநர் விஜய் தனது அடுத்த படத்தை எந்தவித ஆரவாரமும் இன்றி இயக்கி முடித்துவிட்டார். 4 பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிகைகள் நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ் மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் கவுரவ வேடம் ஒன்றில் தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு `அக்டோபர் 31 லேடீஸ் நைட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பெண்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. ஓ.டி.டி, தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எந்த ஓ.டி.டி, தளம் என்று இதுவரை முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமேசான், ஹாட்ஸ்டார், ஜீ ஆகிய ஓ.டி.டி. தளங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் இவர் இயக்கி்ய தலைவா, விக்ரம் நடிப்பில் இவர் இயக்கிய தெய்வத்திருமகள் ஆகிய படங்களுக்கு கடும் எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் இயக்கியுள்ள தலைவி படத்திற்கும் தொடக்கத்தில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : கொரோனா நிதிக்காக `சாஹோ' படத்தின் பயன்படுத்தப்படாத தீம் மியூசிக் ஏலம் - இசையமைப்பாளர் ஜிப்ரான் அறிவிப்பு