விஜய் சேதுபதியை இயக்கப் போகும் சிறுத்தை சிவா...முன்னெச்சரிக்கையாக விஜய் சேதுபதி போட்ட கண்டிஷன்
கங்குவா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா அடுத்தபடியாக விஜய் சேதுபதி படத்தை இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து சிறிது காலம் திரை வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த இயக்குநர் சிவா அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுத்தை சிவா
கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் கால்பதித்தவர் இயக்குநர் சிவா. இப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பெரியளவில் வெற்றிபெறவே சிறுத்தை சிவா என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தொடர்ந்து அஜித்துடன் வீரம் , வேதாளம் , விவேகம் , விஸ்வாசம் என அடுத்தடுத்து நான்கு படங்களை இயக்கினார். இதில் விவேகம் திரைப்படம் தோல்வியை சந்திக்க மற்ற மூன்று மூன்று படங்கள் வசூல் ரீதியாக வெற்றிபெற்றன. 2021 ஆம் ஆண்டு ரஜினியின் அண்ணாத்தே படம் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரோல் மெட்டிரியலாக மாறியது.
கங்குவா
கடந்த ஆண்டு ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கினார். இப்படம் 1000 கோடி 2000 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் நாளிலேயே படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தன. ஸ்டுடியோ கிரீன் நிறுவனர் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. கங்குவா படம் வெற்றிபெற்றால் அதன் இரண்டாம் பாகத்தை சிறுத்தை சிவா இயக்கவிருந்தார். ஆனால் முதல் பாகத்திற்கு கிடைத்த படுமோசமான விமர்சனங்கள் இரண்டாம் பாகத்திற்கு முற்றுபுள்ளி வைத்தன.
விஜய்சேதுபதியுடன் கூட்டணி
கங்குவா படத்தின் தோல்வியைத் தொடர்ந்து சிறிது காலம் திரை வெளிச்சத்தில் இருந்து ஒதுங்கி இருந்த இயக்குநர் சிவா அடுத்த படத்திற்கு தயாராகியுள்ளார். விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை அவர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் சேதுபதியில் சிவா கதை சொல்லியிருப்பதாகவும் முழு திரைக்கதையை முடித்துவிட்டு வரும்படி விஜய் சேதுபதி கூறியுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் வெற்றிக்கண்ட விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி நடித்து இந்த ஆண்டு இரு படங்கள் வெளியாகியன. மே மாதம் வெளியான ஏஸ் திரைப்படம் பெரியளவில் வரவேற்பைப் பெறவில்லை.பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் வெளியான தலைவன் தலைவி திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றிபெற்றது. அடுத்தபடியாக மிஸ்கின் இயக்கத்தில் ட்ரெயின் மற்றும் தெலுங்கில் பூரி ஜகன்நாத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.





















