Indian 2: இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவானதன் பின்னணி.. இயக்குநர் ஷங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!
இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்து ஷூட்டிங் தொடங்கிய நிலையில், 3 ஆம் பாகம் ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை என இயக்குநர் ஷங்கர் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்ட செலவில் உருவாகியுள்ள படம் “இந்தியன் 2”. இந்த படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரகனி, மாரிமுத்து, விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம் ஜூலை 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி அனைவரிடத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இப்படம் கண்டிப்பாக ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் வெளியாகி அடுத்த சில மாதங்களில் 3 ஆம் பாகம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் உருவாகும் என படக்குழுவினர் அறிவித்து ஷூட்டிங் தொடங்கிய நிலையில், 3 ஆம் பாகம் ரசிகர்களுக்கே சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இதுதொடர்பாக இயக்குநர் ஷங்கர் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, “இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை. 2ஆம் பாகத்தின் கதை இந்தியா முழுக்க பயணிக்கும்படி இருக்கும். பொதுவாகவே என் படங்களின் கதைகள் எல்லாமே கொஞ்சம் பெரிதாகவே இருக்கும். அதனை எடிட்டிங்கில் தான் குறைப்போம். இந்தியன் படத்தின் முதல் பாகம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும். அது நிஜமாகவே பெரிய கதை தான். சுதந்திர போராட்டம், சமூகத்தில் நடக்கும் தவறுகள், மகன் கமலுக்கான கதை என ஒவ்வொன்றையும் தனித்தனியாக சொல்ல வேண்டி இருந்தது. அதனால் கதை பெரியதாக மாறிவிட்டது.
அதேசமயம் இந்தியன் 2 பண்ண வேண்டும் என்பதை முடிவு செய்து தான் எடுத்தோம். படம் நன்றாக வந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. கதையை குறைத்து காட்சிகளின் நீளத்தை சுருக்கி கொண்டு வர வேண்டும் என நினைக்கும்போது அந்த காட்சிகளில் உயிரோட்டம் இருக்குமா என்ற பயம் இருந்தது. அதனை செய்து பார்த்தேன். அதேசமயம் எல்லா காட்சிகளுக்கும் தேவைப்படும் நீளத்தை கொடுக்க வேண்டும். சரியான நீளத்தை கொடுத்த நிலையில், அதனை இரண்டு பாகங்களுக்கு பிரித்து சரியாக வருமா என்றும் சோதனை செய்தோம். அதில் சின்ன சின்ன விஷயங்கள் சேர்க்கும்போது இரண்டு பாகங்களாக தனித்தனியாக வந்தது. இரண்டு பாகம் என்ற முடிவு இயற்கையாகவே அமைந்தது” என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.