HBD Saran: அஜித்தின் ப்ளாக்பஸ்டர் படத்தின் தலைப்பு எப்படி உருவானது? மனம் திறந்த இயக்குனர் சரண்!
நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணுக்கு இன்று 58வது பிறந்தநாள் ஆகும். அவர் அமர்க்களம் படத்தின் தலைப்பு எவ்வாறு உருவானது என்று மனம் திறந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திர நடிகராக உலா வருவதற்கு இயக்குனர் சரண் முக்கிய காரணம் ஆகும். அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரணுக்கு இன்று 58 வயது ஆகிறது.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் சரண்:
காதல் மன்னன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான இவர் அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே ஜே, வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., அட்டகாசம் என தமிழ் சினிமாவில் ப்ளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பெருமையை கொண்டவர். இவரது படங்களில் எப்போதும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான திரைப்படமாக இருப்பது அமர்க்களம்.
அஜித்குமார் மருத்துவமனையில் இருந்தபோது உருவான ஆக்ஷன் திரைப்படம் அமர்க்களம் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், இந்த படத்தின் தலைப்பு எப்படி உருவானது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இதுதொடர்பாக, இயக்குனர் சரண் ஒரு முறை பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
அமர்க்களம் தலைப்பு வந்தது எப்படி?
“ காதல் மன்னன் படம் சமயத்துல அஜித் மறுபடியும் நம்ம ஒரு படம் பண்றோம் ஜீனு சொல்லி வச்சிருந்தார். அந்த காலத்துல இன்னொரு படத்துடைய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்களுக்கு உதவியா இருக்கும். ஆனா அப்போ என்கிட்ட கதை இல்லை. அமர்க்களம் அப்படிங்குற டைட்டில் மட்டும்தான் இருந்தது. அதுவும் டூயட் படத்துல அஞ்சலி அஞ்சலி பாட்டு ரெக்கார்டிங்ல வந்த யோசனை.
டூயட் படத்துல பாலச்சந்தர் சாருக்கு நான் அசிஸ்டென்டா வேலை பார்த்திருக்கேன். எஸ்.பி.பி. சார் அந்த பாட்டை முடிச்சுட்டு ரஹ்மான் சார்கிட்ட பாட்டு அமர்க்களம் அப்படினு சொன்னார். அந்த வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சது. அப்போவே டைட்டில் இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். அப்புறம் அஜித் படத்துக்கு அமர்க்களம்னு பெயர் வைக்குற வாய்ப்பு வந்தது. ஒரு பட்டாம்பூச்சியை சங்கிலியால கட்டியிருக்குற மாதிரி ஒரு போட்டோ டிசைன் பண்ணி ரிலீஸ் பண்ணோம்.
கதை உருவானது எங்கே?
பட வேலைகளை ஆரம்பிக்குற நேரத்துல அஜித்துக்கு ஆபரேஷன் நடந்து முடிஞ்சிருந்தது. ஆபரேஷன் நடந்து ஒரு மணி நேரம் கூட இருக்காது. ரொம்ப மயக்கமா இருந்தாரு. அவரால கண்ணையும், வாயையும் மட்டும்தான் லேசா அசைக்க முடிஞ்சது. அப்போ நான் அவர் பக்கத்துலதான் இருந்தேன். என்னைக் கூப்பிட்டு ஃபுல் ஆக்ஷன் படம் ஒண்ணு நாம பண்றோம். அதுக்கு ஏத்த மாதிர கதை ரெடி பண்ணுங்க. நான் ரெடியாகுறேனு சொன்னார். அதைக்கேட்டதுமே செம எனர்ஜி எங்களுக்கு வந்துருச்சு. அப்போ புடிச்சதுதான் அமர்க்களம் படத்துடைய லைன்”
இவ்வாறு சரண் கூறியுள்ளார்.
அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண் இயக்கிய ஜெமினி, ஜே.ஜே. படங்களுக்கும் முதன் முதலில் கதாநாயகனாக அவர் நடிக்க அணுகியதும் அஜித்தை என்பது கூடுதல் சுவாரஸ்யம் ஆகும். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க இயலவில்லை. சரண் கடைசியாக தமிழில் ஆரவை கதாநாயகனாக வைத்து மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.