Thandatti Trailer: திருட்டை சொல்லி மிரட்டிய இயக்குநர்.. மிரண்டுபோன பாட்டி... ‘தண்டட்டி’ படம் உருவான கதை தெரியுமா?
நடிகை ரோகிணி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள “தண்டட்டி” படத்தின் ட்ரெய்லர் பலரையும் கவர்ந்துள்ளது.

நடிகை ரோகிணி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியாகியுள்ள “தண்டட்டி” படத்தின் ட்ரெய்லர் பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கய்யா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பசுபதி, ரோஹினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா என பலரும் நடித்துள்ளனர். சர்தார், ரன் பேபி ரன் படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தண்டட்டி படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ் பின்னணி இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.
மிகவும் சுவாரஸ்யமாக அமைந்துள்ள தண்டட்டி படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படம் முழுக்க ஒரு மரண வீட்டில் நடக்கும் காட்சிகள் அடங்கியுள்ளது. அதில் இறந்த வயதான பாட்டி காதில் போட்டிருக்கும் தண்டட்டி காணாமல் போகிறது. அதை யார் எடுத்தது என்பது தான் இப்படத்தின் கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஊடகம் ஒன்றிற்கு, இயக்குநர் ராம் சங்கய்யா தண்டட்டி படம் உருவான கதையை தெரிவித்துள்ளார்.
வலிகள் நிறைந்த தண்டட்டி
அந்த நேர்காணலில், “தண்டட்டி படம் உண்மை கதைன்னு சொல்லுவதை காட்டிலும் உண்மைகள் கலந்த கதை என்று சொல்லலாம். தென்மாவட்டங்களில் நான் சிறு வயதில் இருந்த போது தண்டட்டி போட்ட பாட்டிகள் நிறைய பேரு இருப்பாங்க. என் வீட்டு பக்கத்துல தங்கப்பொண்ணு அப்படிங்கிற பாட்டி இருக்கும். நாங்க எப்பவுமே அவங்க கிட்ட வம்பு இழுத்துக்கிட்டே இருப்போம். அப்படியான நிலையில், அந்த பாட்டிகிட்ட, ‘ஒருநாள் உன் காதுல இருக்குற தண்டட்டியை அத்துகிட்டு போயிடுவோம்’ என சொன்னோம்.
அன்றைய நாளில் இருந்து பாட்டி வீட்டு வாசலில் தூங்கவே இல்லை. எங்களை பார்க்கும் பொதெல்லாம் எங்க அதை நாங்க அத்துகிட்டு போயிடுவோமே என்ற பயத்துலேயே இருக்கும். இப்படித்தான் தண்டட்டி என் வாழ்க்கையில் கலந்த விஷயமாக மாறி விட்டது. உண்மையில் தங்கப்பொண்ணு பாட்டியோட கடைசி காலம் ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. சொல்லப்போனால் அந்த தண்டட்டிக்காகவே அதை வீட்டுல வச்சிருந்தாங்க. அவங்க இறந்த பிறகு அதனை எப்படி பங்கு போட்டுக்க வேண்டும் என்பது பாட்டியின் பிள்ளைகள் மத்தியில் போட்டி நிலவியது. இதை வைத்தே முதல் படம் எடுக்க முடிவு பண்ணேன்.
அதற்காக பல பாட்டிகளை சந்தித்தேன். ஒவ்வொரு தண்டட்டிக்கும் ஒரு கதை இருக்கு. அது எனக்கு பெரிய வலியை கொடுத்தது. இன்னும் 10,15 வருசம் கழித்து தண்டட்டி என்ற ஒன்றே இருக்காது. அதனால் இந்த படத்தை பதிவு பண்ண நினைத்தேன்” என ராம் சங்கையா தெரிவித்துள்ளார். இந்த படம் ஜூன் 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

