சேரன் நடிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த பாண்டிராஜ் - என்ன நடந்தது?
இயக்குனர் சேரன் ஆட்டோகிராஃப் படத்தில் நடிக்கவே கூடாது என்று இயக்குனர் பாண்டிராஜ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

தமிழ் திரையுலகின் பிரபலமான இயக்குனர் மற்றும் நடிகர் சேரன். இவரது நடிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆட்டோகிராஃப். இந்த படம் வெளியாகி 21 ஆண்டுகள் வெளியானதை முன்னிட்டு படக்குழுவினர் மீண்டும் சந்திப்பு நடத்தினர்.
இந்த படத்தின்போது, சேரனிடம் உதவியாளராக பணியாற்றிய பாண்டிராஜ் பழைய நினைவுகளை பகிர்ந்தார். அப்போது, அவர் கூறியதாவது,
சேரனுடன் சண்டை:
கோபிகா-வை டெஸ்ட் ஷுட் எடுக்குறோம். அந்த பொண்ணை டெஸ்ட் ஷுட் எடுக்குறோம். அந்த பொண்ணு கதைக்கு அவ்வளவு அழகா இருக்குது. சூப்பர்னு சொல்றோம். இரண்டு நாள் கழித்து அந்த பொண்ணு வேண்டாம்னு சொல்றாரு. அதுக்கு 2 உதவியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்குறோம்.

நான் சண்டை போட்றேன். வேலையை விட்டு போறேனு சொல்லிட்டாரு. போறேனு சொல்லிட்டு போயிட்டேன். போறப்போ ஒரு டயலாக் போடுவாரு. நீ என்னை அண்ணனா நினைக்குறதா இருந்தா வேலை பாரு. டைரக்டரா நினைக்குறதா இருந்தா ஓடிப்போனு சொல்லுவாரு. நான் போயிட்டு 2 தெரு சுத்திட்டு வந்துடுவேன். ஆபீஸ்ல நான்தான் தங்கியிருப்பேன். அதிகமா திட்டும், அடி வாங்கியிருக்கேன்.
எதிர்ப்பு:
இந்த கதை விஜய்க்கு போச்சு, பிரபுதேவாவிற்கு போச்சு, அரவிந்த்சாமிக்கு போச்சு, ஸ்ரீகாந்த்க்கு போச்சு. யார், யாருகிட்டயோ இந்த கதையை அவர் எடுத்துட்டு போயிட்டே இருக்காரு. அவரு இந்த கதையில நடிக்க விருப்பப்படவே இல்ல. ஆட்டோகிராஃப் அவரை நடிகராக எடுத்துக்குச்சு.
அவரு நடிக்குறேனு சொன்னப்ப நானும், சிம்புதேவனும் நீங்க நடிச்சா யாரு சார் பாக்குறது? அதுக்கும் என்னை முறைக்குறாரு. அவர் நடிக்கவே கூடாதுனு எதிர்ப்பு தெரிவிச்சது நானும் சிம்புதேவனும்தான். மற்ற அனைவரும் ஓகே சொல்வாங்க. அதுல எங்க மேல கோபம். படம் ஓடுன பிறகு எங்களை பாக்குறாரு. நீதானடே எங்களை நடிக்க வேண்டாம்னு சொன்னவன்.

அன்னைக்கு எங்க டைரக்டர் பட்ட கஷ்டம்தான் இன்னைக்கும் நான் தயாரிப்பாளர் ஆவதற்கு உதவியா இருந்துச்சு. நான் இயக்குனராக மாறும்போதுதான் நாம எவ்ளோ பெரிய பொறுப்புல இருக்கோம். நம்மளை நம்பி பணம் போட்ற தயாரிப்பாளருக்காக எவ்வளவு கஷ்டத்துல இருப்போம். நம்ம இயக்குனரை திட்டியதற்காக வருத்தப்படுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2004ம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் படம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத படமாக இன்றும் உள்ளது. பள்ளிப்பருவம் தொடங்கி திருமண வாழ்க்கை ஒருவனின் வாழ்வில் வரும் காதலை யதார்த்தமாக சொன்ன இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
சேரன், கோபிகா, சினேகா, மல்லிகா, கனிகா ஆகியோர் நடித்திருந்தனர். ரவி வர்மன், விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்திருந்தனர். பரத்வாஜ் இசையமைத்திருந்தார். சபேஷ் முரளி பின்னணி இசை அமைத்திருந்தார்.





















