Pa Ranjith: இசையமைக்க முடியும் என்று அறிவு நிரூபித்திருக்கிறார்: பா.ரஞ்சித்
ராப் பாடகர் அறிவு இசையமைத்திருக்கும் வள்ளியம்மா பேராண்டி ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது
அறிவு
ராப் இசை தமிழ் படங்களில் நீண்ட காலமாக பயண்படுத்தப் பட்டு வருகிறது என்றாலும் ராப் இசையை, அதன் வரலாற்று முக்கியத்துவத்துடன் சேர்த்து பயண்படுத்தியவர்களில் அறிவும் ஒருவர். ஒடுக்குமுறைக்கு எதிராக கருப்பின மக்கள் மிகப்பெரிய ஆயுதமாக பயன்படுத்திய ஒரு கலை வடிவம் ராப் இசை. இதனை உதாரணமாக கொண்டு சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான வரிகளை தனது பாடல்களில் வைத்து உருவாக்கினார் அறிவு. அரசியல் தவிர்த்து கமர்ஷியல் படங்களிலும் அறிவு எழுதி பாடிய பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளன. மாஸ்டர் படத்தில் வாத்தி ரைடு படம் ஒரு நல்ல உதாரணம்.
எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை
அறிவு , தீ இருவரும் சேர்ந்து பாடிய எஞ்சாய் எஞ்சாமி பாடல் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது . சந்தோஷ் நாரயாணன் இந்தப் பாடலுக்கு இசையமைத்தார். மாஜ்ஜா இந்தப் பாடலை வெளியிட்டது. வெளியான சில நாட்களில் உலகளவில் புகழ்பெற்ற பாடலாக மாறியது எஞ்சாய் எஞ்சாமி. சர்வதேச அளவில் இப்பாடல் கொண்டாடப் பட்டாலும் அதில் அறிவின் பெயரோ அவரது புகைப்படங்களோ வெளியாகாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்றுவரை இந்த சர்ச்சை நீடித்தபடி உள்ளது. இந்த சர்ச்சைக்குப் பின் அறிவு சில காலத்திற்கு பாடல்கள் வெளியிடவில்லை. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்தாலும் இந்த சர்ச்சை அவரை மனதளவில் பெரிதாக பாதித்ததாக கூறப்படுகிறது. இன்று அறிவு தனது பிறந்தநாளை முன்னிட்டு “ வள்ளியம்மா பேராண்டி” என்கிற 12 பாடல்களைக் கொண்ட ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இந்தப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் இயக்குநர் பா ரஞ்சித் அறிவு பற்றி பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அறிவின் போராட்டம் தான் இந்த பாடல்கள்
”எஞ்சாய் எஞ்சாமி மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. அதற்கு அறிவின் எழுத்தும் மிக முக்கியமான காரணம். அறிவின் எழுத்து என்பது சாதாரணமான எழுத்து கிடையாது. பல தலைமுறைகளின் குரல்களை வார்த்தைகளாக மாற்றி குழந்தைகளிடமும் எளிமையாக சென்று சேரக்கூடியது. அதன் பிறகு அறிவுக்கு நிறைய பிரச்சனைகள் வந்த. மனதளவில் அவர் ரொம்ப பாதிக்கப் பட்டார். அறிவு தீப்பொறி பறக்க பாடக் கூடியவர். ஆனால் நிஜ வாழ்க்கையில் ஒரு குழந்தை மாதிரி. ரொம்ப சென்சிட்டிவான ஆள். ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நாம் அவர் அருகில் அமர்ந்து தாலாட்டி தான் அவரை சமாதானப் படுத்த முடியும் . ஒருகட்டத்திற்கு மேல் இசையை கைவிட்டு விடலாம் என்று அறிவு யோசிக்க தொடங்கினார். அந்த போராட்டிற்கான பதில் தான் இந்த பண்ணிரெண்டு பாடல்கள் என்று நான் சொல்வேன்.” என்று ரஞ்சித் பேசியுள்ளார்.